Published : 01 Jun 2019 05:12 PM
Last Updated : 01 Jun 2019 05:12 PM

கோட்சே விவகாரம்: கரூர் நீதிமன்றத்தில் கமல்ஹாசன் ஆஜராகி முன்ஜாமீன் பெற்றார்

கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆஜராகி முன்ஜாமீன் பெற்றார்.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டப்பேரவை இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது கமல்ஹாசன், பள்ளபட்டி அண்ணாநகரில் கடந்த மே 12-ம் தேதி பேசியபோது, சுதந்திர இந்தியாவில் முதல் தீவிராவதி ஒரு இந்துதான். அவர் நாதுராம் கோட்சே என தெரிவித்தார். இது பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுகுறித்து அரவக்குறிச்சி போலீஸில் கரூர் மாவட்ட இந்து முன்னணி மாவட்ட செயலாளர் கே.வி.ராமகிருஷ்ணன் கடந்த மே 14-ம் தேதி கமல்ஹாசன் மீது அளித்த புகாரின்பேரில் கமல்ஹாசன் மீது 153(ஏ), இரு மதங்கள், சாதிக்கு எதிராக பிரிவினை உணர்வுகளை தூண்டும் வகையில் பேசுவது, 295(ஏ), ஒரு மதத்தை சார்ந்தவர்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் பேசுவது ஆகிய இரு பிரிவுகளின் கீழ் அரவக்குறிச்சி போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

இவ்வழக்கில் ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் கமல்ஹாசன் மனு தாக்கல் செய்தார். இம்மனு மீது விசாரணை நடத்திய மதுரை கிளை கடந்த மே 20-ம் தேதி 15 நாட்களுக்குள் கரூர் நீதிமன்றத்தில் ஆஜராகி முன் ஜாமீன் பெற்றுக்கொள்ள உத்தரவிட்டது. இதையடுத்து சென்னையிலிருந்து விமானம் மூலம் இன்று (சனிக்கிழமை) திருச்சி வந்த கமல்ஹாசன் அங்கிருந்து கார் மூலம் கரூர் வந்தார்.

கரூர் கோவை சாலையில் உள்ள ஹோட்டலில் தங்கிய கமல்ஹாசன் மதியம் 3 மணிக்கு நீதிமன்றம் வருவார் என கூறப்பட்டது.

இந்நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் மதியம் 2.45 மணிக்கு நீதிமன்ற பின்பக்க வழியாக நீதிமன்றம் வந்த கமல்ஹாசன் கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 2-ல் ஆஜராகி கையெழுத்திட்டு ஜாமீன் பெற்றார். அதன்பின் நீதிபதிகள் வெளியேறும் நீதிமன்ற பின்பக்க வழியாக வெளியேறிய கமலஹாசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்காமல் காரில் ஏறி புறப்பட்டு சென்றார். இதனால் செய்தியாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

மக்கள் நீதி மய்யம் வழக்கறிஞர் விஜய் கூறியது, அரவக்குறிச்சி போலீஸார் கமலஹாசன் மீது போட்ட வழக்கில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அளித்த உத்தரவுப்படி கரூர் குற்றவியல் நீதிமன்றம் 2-ல் கமலஹாசன் ஆஜராகி முன்ஜாமீன் பெற்றார் என்றார்.

கமல்ஹாசனை பார்ப்பதற்காக காவல்துறை உதவி ஆய்வாளர் மற்றும் நீதிபதி குடும்பத்தினரை நீதிமன்றத்திற்கு காரில் அழைத்து வந்திருந்தனர். மேலும் போலீஸார், வழக்கறிஞர்கள் குழந்தைகளை அழைத்து வந்திருந்தனர். பாதுகாப்பு காரணங்கள் மற்றும் மற்றவர்களுக்கு இடையூறு அளிக்கக்கூடாது என்பதற்காக வழக்கமான வழியில் அவர் அழைத்து வரப்படவில்லை என கட்சியினர் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x