Last Updated : 11 Jun, 2019 08:31 AM

 

Published : 11 Jun 2019 08:31 AM
Last Updated : 11 Jun 2019 08:31 AM

கம்பீரமாய் காட்சியளிக்கும் சோலையாறு அணை!- தமிழகத்திலேயே மிக உயரமானது

ஒருபுறம் அணை கட்டுமான வேலைகள் துரிதமாக நடைபெற்றன.  மற்றொருபுறம் இரு மாநிலங்களுக்கு இடையே  நதிநீர்ப் பகிர்வு தொடர்பாக நடைபெற்று வந்த பேச்சுவார்த்தைகளில் சுமூக முடிவு எட்டப்பட்டு,  1970 மே மாதம் பிஏபி திட்டம் தமிழக-கேரள அரசுகளால் ஏற்கப்பட்டது. இந்த திட்டத்தை அமல்படுத்த, இரு மாநில அதிகாரிகள் அடங்கிய, நீர் ஒழுங்காற்று மற்றும் நீர்ப் பங்கீடு வாரியம்  என்ற உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டது.

இந்தக் குழுவில் தமிழகம் சார்பில் பொதுப்பணித் துறை கோவை மண்டல தலைமைப்  பொறியாளர்  மற்றும் மின் வாரியத்  தலைமைப்  பொறியாளர் இடம் பெற்றிருந்தனர். கேரள மாநிலம் சார்பில் அந்த மாநிலத்தின் பாசனத் துறை தலைமைப்  பொறியாளர் மற்றும் மின் வாரிய தலைமைப்  பொறியாளர் இடம் பெற்றிருந்தனர். இந்த உயர்நிலைக் குழுவின் தலைவர் பொறுப்புக்கு, ஆண்டுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் தமிழகத்தின் பொதுப்பணித் துறை தலைமைப்  பொறியாளரும், கேரளாவின் பாசனத் துறை தலைமைப் பொறியாளரும் பொறுப்பு வகிப்பர். இரு மாநில மின்வாரிய தலைமைப்  பொறியாளர்களும் இந்தக் குழுவில் உறுப்பினர்களாக அங்கம் வகிப்பர்.

இதுவரை 100 முறை கூடியுள்ள இந்தக் குழுவின் முதல் கூட்டம்,  1970 ஜூன் 29, 30-ம் தேதிகளில்  பொள்ளாச்சியில் உள்ள  பொதுப்பணித் துறை அலுவலகத்தில் நடைபெற்றது.  ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1 முதல் அடுத்த ஆண்டு ஜூன் 30-ம் தேதி வரை `நீர் ஆண்டு’ என முடிவு செய்யப்பட்டது.

பரம்பிக்குளம்- ஆழியாறு பாசனத் திட்ட ஒப்பந்தப்படி, பிஏபி திட்ட நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கிடைக்கும் 50.05 டிஎம்சி  தண்ணீரில்,  தமிழ்நாடு, கேரளா மாநிலங்கள்  நீர்ப்பாசன ஆண்டான ஜூலை மாதத்திலிருந்து, அடுத்த  ஜூன் மாதத்துக்குள் ஆழியாறு அணையிலிருந்து மணக்கடவு வழியாக 7.25 டிஎம்சி தண்ணீரும், சோலையாறு அணையிலிருந்து 12.30 டிஎம்சி தண்ணீரும் கேரளத்துக்கு வழங்குவது தொடர்பாக, இரு மாநில நீர் ஒழுங்காற்று மற்றும் நீர்ப் பங்கீடு வாரியத்தின்  உயர்நிலைக்  குழுக் கூட்டத்தில்  ஆலோசிக்கப்படும். முன்னதாக,  ஒவ்வோர்  ஆண்டும் பிப்ரவரி 1 மற்றும் செப்டம்பர் 1-ம் தேதி,  கேரளா சோலையாறு  நீர்த்தேக்கத்தில் தண்ணீரின் அளவை பரிசோதித்து,  இரு மாநில அதிகாரிகளும் பதிவேட்டில் பதிவு செய்து, கையெழுத்திடுவர்.

சோலைக்காடுகளின் தாய்மடி!

பசுமைமாறா சோலைக்காடுகள் நிறைந்த வனப் பகுதிகளின் வழியாக பாய்ந்து வரும ஆற்றுக்கு  சோலையாறு என்று பெயர். இந்த ஆற்றின் குறுக்கே அணை கட்டும் பணி 1961-ல் தொடங்கி,  1971-ல் முடிக்கப்பட்டது.

அடர்ந்த வனப் பகுதியில் கொசுக்கடியால் மலேரியா நோய் பாதிப்பு, மண் சரிவு, சுரங்கம் தோண்டும்போது வெடி விபத்து போன்றவற்றில் உயிர்த் தியாகம் செய்த பணியாளர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் கடின உழைப்பு, இரவு-பகல் பார்க்காமல் பணியாற்றிய பொறியாளர்களின் திட்டமிடல் ஆகியவற்றால், 345 அடி உயரத்தில் இன்றும் கம்பீரமாய்க் காட்சியளிக்கிறது  சோலையாறு அணை.

ஓர் அணையின்  உயரம், நீளம், பாசனப் பரப்பு, வடிவமைப்பு, கொள்ளளவு ஆகியவற்றை  அடிப்படையாகக் கொண்டு,  அந்த அணை பெரிய அணையா, சிறிய அணையா என பொறியாளர்கள் மதிப்பிடுவர். தமிழகத்தில் உள்ள அணைகளில் உயரமான அணை  சோலையாறு அணையாகும். இதன் உயரம் 345 அடி.  நீர்மட்டம் 160 அடி. தமிழகத்தில் உள்ள பெரிய அணைகளில் ஒன்றான இந்த அணை, ஆசியா

விலேயே 2-வது ஆழமான அணையாகவும் உள்ளது.  இந்த அணையின்  நீளம் 4,082 அடி. இரண்டு  சதுர மைல் அளவுக்கு தண்ணீர் பரப்பு கொண்ட இந்த அணையில், 5.42 டிஎம்சி தண்ணீரைத் தேக்கிவைக்க முடியும்.

தென்மேற்கு மற்றும் வடகிழக்குப்  பருவ மழைக்  காலங்களில்  47 சதுர மைல் பரப்பில் பொழியும் மழை காரணமாக,  இந்த அணைக்கு அதிகபட்சமாக விநாடிக்கு 15,462 கனஅடி நீர்வரத்து இருக்கும் என்பதைக் கணக்கிட்டு,  345 அடி உயரத்துக்கு அணை கட்ட பொறியாளர்கள் தீர்மானித்தனர்.

அதாவது, கடல் மட்டத்திலிருந்து 3,290 அடி உயரத்துக்கு தண்ணீரைத் தேக்கிவைக்கக்  கூடியதாக இந்த அணை வடிவமைக்கப்பட்டது. பருவமழைக் காலங்களில் சோலையாறு அணை நிரம்பியதும், அதன் உபரி நீர் சேடல்டேம் (உபரிநீர் போக்கி) வழியாக பரம்பிக்குளம் அணைக்குத் திறந்து விடப்படும்.

நீர் மின் உற்பத்தி நிலையங்கள்!

தமிழகத்தில் உள்ள சோலையாறு அணையை மையமாகக் கொண்டு  இரு நீர் மின் உற்பத்தி நிலையங்கள் அமைந்துள்ளன.  இதில், முதல் மின் உற்பத்தி நிலையம் மானாம்பள்ளியில்  அமைந்துள்ளது. இங்கு தண்ணீரைப் பயன்படுத்தி,  தலா 35 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யக்கூடிய  இரு யூனிட்கள் அமைக்கப்பட்டன.  தற்போது, இதில் ஒரு யூனிட்டை அதே அளவு தண்ணீரைப் பயன்படுத்தி, 42 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் வகையில் திறனை அதிகப்படுத்தியுள்ளனர்.

சோலையாறு அணையின் இரு மின் உற்பத்தி நிலையங்களும் 1971-ம் ஆண்டு முதல் செயல்படுகின்றன. சோலையாறு அணையிலிருந்து 8,390 அடி நீளத்துக்கு, குதிரைலாட வடிவில்  வெட்டப்பட்ட சுரங்கம் மூலம் விநாடிக்கு  அதிகபட்சமாக 850 கனஅடி தண்ணீர் கொண்டுவரப்படுகிறது.

சுரங்கத்தில் இருந்து  ராட்சத குழாய் மூலம் அதிக வேகத்தில் வரும் தண்ணீரைப் பயன்படுத்தி, மானாம்பள்ளி நீர் மின் நிலையத்தில்  77 மெகாவாட் மின்சாரம்

உற்பத்தி செய்யப்படுகிறது. மின் உற்பத்திக்குப் பின்னர் வெளியேற்றப்படும் தண்ணீர், பரம்பிக்குளம் அணைக்குச் செல்கிறது.

தமிழக சோலையாறு அணையிலிருந்து, கேரளாவில் உள்ள சோலையாறு அணைக்கு தண்ணீர் செல்லும் வழியில், கல்யாணபந்தல் பகுதியில் இரண்டாவது  நீர் மின் உற்பத்தி நிலையம்  அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 700 கனஅடி தண்ணீரைப் பயன்படுத்தி, 25 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்ட பின்னரே, கேரள சோலையாறு அணைக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.

கேரளாவின் சோலையாறு அணை, பிஏபி திட்டத்தில் இல்லை. ஆனால், இங்குள்ள நீர் மின் உற்பத்தி நிலையத்தில் மின் உற்பத்திக்கு பின்னர் அணையிலிருந்து  வெளியேறும் தண்ணீரின் அளவைக் கொண்டு, கேரளாவுக்கு வழங்கப்பட்ட  தண்ணீரின் அளவு  கணக்கிடப்படுகிறது. இந்த மின்உற்பத்தி நிலையத்தில்  700 கனஅடி தண்ணீரைப்  பயன்படுத்தி, 18 மெகாவாட் திறன்கொண்ட 3 யூனிட்கள்  மூலம் மொத்தம் 54 மெகாவாட் மின்சாரம்  உற்பத்தி செய்யப்படுகிறது..

பிஏபி பயணம் தொடரும்...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x