Published : 07 Jun 2019 04:14 PM
Last Updated : 07 Jun 2019 04:14 PM

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்க்கும் மனித சங்கிலி போராட்டம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆதரவு

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக பேரழிப்பிற்கு எதிரான பேரியக்கம் சார்பில் வரும் 12-ம் தேதி நடைபெறும் மனித சங்கிலி போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சி ஆதரவு அளிக்கிறது என அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.

வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரால் தொடங்கப்பட்ட பேரழிப்பிற்கு எதிரான பேரியக்கம் சார்பில் வருகின்ற ஜூன் 12–ந்தேதி மாலை 5.30 மணி முதல் 6 மணி வரை விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து புதுச்சேரி, கடலூர், காரைக்கால், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் வரை 596 கிலோ மீட்டருக்கு மாபெரும் மனித சங்கிலிப் போராட்டத்தை நடத்தப் போவதாக அறிவித்துள்ளது.

இந்நிலையில், வரும் 12-ம் தேதி நடைபெறும் மனித சங்கிலி போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சி ஆதரவு அளிக்கிறது என அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.

அவர் மேலும் பேசும்போது, "வருகிற 12-ம் தேதி டெல்டா மாவட்ட குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையை திறக்க வாய்ப்பில்லை என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். இது விவசாயிகளுக்கு பெரிய ஏமாற்றத்தை தந்துள்ளது" என்றார்.

இரட்டை வேடம் போடும் பாமக:

சேலம்-சென்னை 8 வழி சாலை திட்ட பிரச்சினையில் பாமக இரட்டை வேடம் போடுகிறது. விவசாயிகளுக்கு ஆதரவாக பாமக இருக்குமென்றால் தேர்தலுக்காக அமைக்கப்பட்ட அதிமுக கூட்டணியில் இருந்து இந்நேரம் வெளியேறி இருக்க வேண்டும் அல்லவா? அன்புமணிக்கு ராஜ்ய சபா சீட் பெறுவதற்காக பாமக கூட்டணியில் ஒட்டி கொண்டிருக்கிறது. இது விவசாயிகளுக்கு பாமக செய்யும் துரோகம்.

8 வழிச் சாலை யாருக்காக?

8 வழிச் சாலை திட்டத்தை தமிழக முதல்வர் எதற்காக? யாருக்காக? நிறைவேற்ற துடிக்கிறார் எனத் தெரியவில்லை.

இத் திட்டத்திற்கு உயர் நீதிமன்றம் தடை விதித்த பிறகு தேர்தல் முடியும் வரை அமைதியாக இருந்த தமிழக அரசு அதன் பின்னர் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.  உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தடை விதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்தது. ஆனால், இப்போதும் நல்ல தீர்ப்பு வரும் என்று முதல்வர் கூறுகிறார்.

இவ்வாறு அவர் பேசினார்.

அதேபோல், தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். குடிநீர் பிரச்சினையை தீர்க்க தமிழக அரசு போர்க்கால நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். டெல்டா மாவட்டங்களில் உள்ள பாசன வடிகால் வாய்க்கால்களை தூர்வார நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் போன்ற கோரிக்கைகளையும் அவர் முன்வைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x