Last Updated : 12 Jun, 2019 12:03 PM

 

Published : 12 Jun 2019 12:03 PM
Last Updated : 12 Jun 2019 12:03 PM

தேனியில் வெயில் குறைந்து பருவநிலை மாறியது: மினரல்வாட்டர் விற்பனை 25 % சரிவு 

தேனியில் கோடைவெயிலின் தாக்கம் குறைந்து பருவக்காற்று வீசத் துவங்கியதால் தனிமனிதன் பருகும் குடிநீரின் அளவு குறைந்துள்ளது.

தேனியில் சில ஆண்டுகளாகவே குடிநீர் பற்றாக்குறை இருந்து வருகிறது. குன்னூர், வீரப்பஅய்யனார் கோயில், பழனிசெட்டிபட்டி என்று மூன்று குடிநீர் திட்டங்கள் இருந்தாலும் குறைவான நீராதாரத்தினால் தட்டுப்பாடு இருந்து கொண்டே இருக்கிறது.

இதனால் கோடையில் வாரம் ஒருமுறையும், மற்ற நேரங்களில் 4 நாட்களுக்கு ஒருமுறையும் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. பொதுமக்களின் தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் சமீபமாக மினரல்வாட்டர் நிறுவனங்கள் அதிகரிக்கத் தொடங்கின. வீரபாண்டி, தேனி, ஆண்டிபட்டி, பெரியகுளம் உள்ளிட்ட பல பகுதிகளிலும் 15-க்கும் மேற்பட்ட பெரு நிறுவனங்கள் நிலத்தடிநீரை சுத்திகரிப்பு செய்து விநியோகித்து வருகிறது.

இவற்றை சிறுவியாபாரிகளும், ஏஜன்சிகளும் 20 லிட்டர் கேனில் பிடித்து தேனி உள்ளிட்ட பல பகுதிகளில் விற்பனை செய்து வருகின்றனர். கடந்த மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகம் இருந்ததாலும், தண்ணீர் பற்றாக்குறை நிலவியதாலும் மினரல் வாட்டர் கேனின் விற்பனை களைகட்டியது.தேனியில் மட்டும் 60-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் இதில் ஈடுபட்டனர். தினமும் நூற்றுக்கணக்கான கேன்கள் இவர்கள் மூலம் பொதுமக்களைச் சென்றடைந்தது.

இந்நிலையில் கோடைவெயிலின் தாக்கம் குறைந்து தற்போது இதமான பருவக் காற்று வீசத் துவங்கியுள்ளது. இதனால் தண்ணீர் தேவை வெகுவாய் குறைந்து மினரல்வாட்டர் கேன்களின் விற்பனையும் 25 சதவீதம் சரிந்துள்ளது.

இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், "20 லிட்டர் கேனை ரூ.30-க்கு விற்பனை செய்தோம். இதுதவிர டேங்கர் லாரிகளிலும் குடம் ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்டது. மினரல்வாட்டரைப் பொறுத்தளவில் தற்போது பொதுமக்களிடையே தவிர்க்க முடியாத நிலையை எட்டி விட்டது. சுகாதாரம், அந்தஸ்து, வர்த்தக நிறுவனங்களில் சேவை உள்ளிட்ட காரணங்களினால் அவர்களிடம் ஒன்றிப் போய்விட்டது. கேன்களுக்கு வாடிக்கையாளர்கள் அட்வான்ஸ் தருவதில்லை. இதனால் இதற்கென தனியாக முதலீடு செய்துள்ளோம்.

ஆண்டுக்கு 4 மாதம்தான் எங்களுக்கு சீசன். மழைநேரத்தில் கூட தண்ணீர் கலங்கலாக வருவதால் மினரல் வாட்டரைத்தான் பலரும் விரும்புவர். ஆனால் காற்று, பனிகாலத்தில் குடிநீரின் தேவை குறைவதால் கேன் விற்பனை குறைவாகவே இருக்கும். பகுதிநேர வேலையாக செய்பவர்களுக்குப் பிரச்சினை இல்லை. முழுநேரமாக இதனை நம்பியுள்ளவர்களுக்குத்தான் சிரமம்" என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x