Last Updated : 20 Jun, 2019 09:54 AM

 

Published : 20 Jun 2019 09:54 AM
Last Updated : 20 Jun 2019 09:54 AM

பயன்பாட்டிற்கு வராத இ-சேவை மையங்கள்: இணையவழி தொடர்புகளுக்கு நகரங்களை நோக்கிச் செல்லும் கிராம மக்கள்

கிராம ஊராட்சிகளில் கட்டப்பட்ட கிராம சேவை மையம் மாநிலத்தின் பல பகுதிகளிலும் பூட்டியே கிடக்கிறது. இதனால் மக்களின் வரிப்பணம் விரயமாகியுள்ளதுடன், இணையவழி தொடர்புகளுக்கு நகரங்களை நோக்கி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

பல்வேறு சான்றிதழ்கள் பெற அரசு அலுவலகங்களுக்கு அலையும் நிலையை மாற்ற  2015-ல் மின்ஆளுமைத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.

இதன்படி சான்றிதழ்களுக்கு மட்டுமல்லாது போட்டித்தேர்விற்கு விண்ணப்பிப்பது, ஆதார்கார்டு, வாக்காளர்அடையாள அட்டை, பாஸ்போர்ட், பட்டா, சிட்டா உள்ளிட்ட பல்வேறு பணிகள் இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டன.

பொதுச் சேவை மையங்கள் ஆட்சியர், வட்டாட்சியர், நகராட்சி அலுவலகங்களில் திறக்கப்பட்டன. தொடர்ந்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், ஒன்றிய அலுவலகங்களிலும் விரிவுபடுத்தப்பட்டன.

இந்நிலையில் இத்திட்டங்களை கிராம அளவில் கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. இதன்படி கிராம சேவை மையங்களை ஏற்படுத்த அரசு முடிவு செய்தது. இதற்காக 2013-14ல் ரூ.13லட்சம் முதல் ரூ.16லட்சம் வரை இதற்கான தனிக்கட்டடங்கள் கட்டப்பட்டன.

தேனி மாவட்டத்தில் 130 மையங்கள் ஏற்படுத்தப்பட்டன. இதே போல் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பஞ்சாயத்துக்களிலும் சேவை மையங்கள் கட்டப்பட்டன.

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு உரிய பயிற்சி அளித்து அவர்கள் மூலம் இத்திட்டத்தை செயல்படுத்த அரசு திட்டமிட்டது.

இதில் பஞ்சாயத்திற்கு செலுத்த வேண்டிய பல்வேறு வரிகள் உள்ளிட்ட இணையவழி தொடர்பான அனைத்து பணிகளையும் கிராம மக்கள் இருக்கும் இடத்திலேயே செய்து கொள்ள உத்தரவிடப்பட்டது.

ஆனால் மாநிலத்தின் பல பகுதிகளிலும் இக்கட்டங்கள் பயன்பாட்டிற்கே வரவில்லை.

மகளிர் சுயஉதவிக்குழுவினர் அவ்வப்போது கூட்டம் நடத்தும் இடமாகவும், சில இடங்களில் தற்காலிக ஊராட்சி மன்ற அலுவலகங்களாகவும் உள்ளது. இதனால்  பொதுமக்களின் கோடிக்கணக்கான வரிப்பணம் விரயமாகிக் கொண்டிருக்கிறது.

மேலும் இணையவழி விண்ணப்பங்களுக்கு முன்பு போல வட்ட அளவிலான அலுவலகங்களுக்கு கிராமமக்கள் செல்ல வேண்டி உள்ளது.

இது குறித்து கிராம பஞ்சாயத்து அதிகாரிகள் கூறுகையில், மகளிர் குழுக்கள் கூட்டம் நடத்தவும், பொதுமக்கள் இணையமூலம் விண்ணப்பித்தலுக்கும் இந்த சேவை மையம் கட்டப்பட்டது. மேலும் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வளர்ச்சித்திட்டத்தில் புதிய அட்டை வழங்குதல், கணக்குகளை சரிபார்த்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டது.

பல பகுதிகளிலும் இது போன்ற குற்றச்சாட்டுகள் உள்ளன. எனவே இவற்றை பயன்பாட்டிற்கு கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

பூட்டியே கிடக்கும் இந்த மையங்களின் பூட்டுகள் பல இடங்களில் உடைக்கப்பட்டு சமூக விரோதச் செயல்கள் நடைபெற்று வருகின்றன. மின்இணைப்பு, இணைய இணைப்பு போன்ற சிறிய காரணங்களைக் கூறி மையம் செயல்படாமல் கிடக்கிறது.

எனவே இவற்றை பயன்பாட்டிற்குக் கொண்டு வந்து பொதுமக்களின் அலைச்சலை குறைப்பதுடன், இத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் மக்கள் வரிப்பணம் என்பதை உணர்ந்து இதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x