Published : 27 Jun 2019 11:01 AM
Last Updated : 27 Jun 2019 11:01 AM

மதுரை பெரியார் பேருந்து நிலைய பணிகள் திட்டமிடப்பட்ட காலத்தில் முடிக்கப்படுமா?- ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை வேகப்படுத்த மக்கள் எதிர்பார்ப்பு

பெரியார் பஸ்நிலையம் 18 மாதங்களில் முடிக்க வேண்டும். தற்போது 4 மாதம் நிறைவடைந்துள்ளது. ஆனால், குறிப்பிட்ட காலத்தில் முடிப்பது சிரமம் என்று மாநகராட்சி ஊழியர்கள் கூறியுள்ளனர்.

மதுரை, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை வேகப்படுத்த மாநகராட்சி ஆணையாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் மதுரை இடம் பெறாமல் இருந்தது. கடந்த 2 ஆண்டிற்கு முன் மாநகராட்சி ஆணையாளராக இருந்த சந்தீப் நந்தூரி பெரும் முயற்சி எடுத்து, மதுரையை ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் இடம்பெற செய்தார். அவர் ஆர்வமாக  ஸ்மார்ட் சிட்டி பணிகளை தொடங்க ஆரம்பிக்கும்போது, ஆட்சியராக நெல்லைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

இவருக்கு பதில் புதிதாக வந்த அனீஸ்சேகர், மதுரை மாநகராட்சி சுகாதாரப்பணிகளுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு கொடுக்கவில்லை.  அதனால், அவரால் உடனடியாக ஸ்மார்ட் சிட்டி பணியை தொடங்க முடியவில்லை. அனீஸ் சேகர், கிட்பில் கிடந்த ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தை தூசி தட்டி, அதற்கு டெண்டர்விட்டு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தால் தொடங்கி வைத்தார்.

இந்த நேரத்தில் அனீஸ் சேகர் இடமாறுதல் பெற்று சென்றுவிட்டார். அவருக்கு பதிலாக விசாகன் புதிய மாநகராட்சி ஆணையாளராக பொறுப்பேற்றார். இவர் வந்தபிறகு இடைத்தேர்தல், மக்களவைத்தேர்தல் வந்ததால் ஒட்டுமொத்த மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி அதிகாரிகளும் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.

அதனால், ஸ்மார்ட் சிட்டி பணிகள் தோய்வடைந்தன. மக்களவைத்தேர்தல் நடத்தை விதிமுறைகள் வாபஸ் பெறப்பட்டு மீண்டும்  ‘ஸ்மார்ட் சிட்டி’ பணிகள் சூடுபிடிக்கத் தொடங்கின. வைகை ஆற்றின் கரையோரத்தில் நான்கு வழிச்சாலை, பூங்கா, ஆற்றுக்குள் இரண்டு தடுப்பு அணைகள் அமைக்கும் பணிகள் தொடங்கி நடக்கின்றது. ‘ஸ்மார்ட் சிட்டி’யின் ஹைடெக் பஸ்நிலையம் அமைப்பதற்காக பெரியார் பஸ்நிலையம் முழுமையாக இடிக்கப்பட்டு அதற்கான பவுண்டேஷன் பணிகள் நடக்கிறது.

இப்ப பணிகளை தினமும்  விசாகன் சென்று ஆய்வு செய்வதோடு அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டங்களை நடத்தி பணிகள் நிலைகளை கேட்டறிந்து வருகிறார்.  தற்போது ‘ஸ்மார்ட் சிட்டி’யின் 50 சதவீதம் பணிகளுக்கு மட்டுமே தற்போது வரை டெண்டர் விடப்பட்டுள்ளது. மீதிப்பணிகளுக்கான திட்டங்களை தயாரிப்பது, அதற்கு மத்திய, மாநில அரசுகள் ஒப்புதல் பெறுவது, நிதி ஒதுக்கீடுகளை பெறுவது, டெண்டர் விடுவது உள்ளிட்ட ஏராளமான பணிகள் உள்ளன.

விசாகன் சென்னை தமிழ்நாடு இன்டஸ்ட்ரீயல் டெவெலப்மெண்ட் கார்ப்போரேஷன் அதிகாரியாக இருப்பதற்கு முன், தர்மபுரி, தூத்துக்குடி, புதுக்கோட்டை மாவட்ட வருவாய் அலுவலராக இருந்துள்ளார்.

இவர் மாநகராட்சி அதிகாரிகளுடன் இனக்கமாக சென்று ‘ஸ்மார்ட் சிட்டி’ பணிகளை தோய்வின்றி நடக்க தீவிரப்படுத்தி வருகிறார். ஆனால், பெரியார் பஸ்நிலையம் ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக மூடப்பட்டால் மாநகர பஸ்கள் ஆங்காங்கே சாலையோரம் நிறுத்தப்பட்டு பயணிகளை ஏற்றவதால் நகரில் ஒட்டுமொத்தமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மக்களும், வாகன ஓட்டிகள் நகரின் ஒவ்வொரு பகுதிகளையும் கடந்து செல்வதற்கு மிகுந்த சிரமப்படுகின்றனர்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், "பெரியார் பஸ்நிலையம், குன்னத்தூர் சத்திரம், டூரிஸ்டம் பிளாசா உள்ளிட்ட பணிகள் வேகமாக நடக்கிறது. இதில், பெரியார் பஸ்நிலையம் 18 மாதங்களில் முடிக்க வேண்டும். தற்போது 4 மாதம் நிறைவடைந்துள்ளது. குறிப்பிட்ட காலத்தில் முடிப்பது சிரமம். மற்றப்பணிகள் நிறைவடைய வாய்ப்புள்ளது" என்றனர். 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x