Published : 22 Jun 2019 07:49 AM
Last Updated : 22 Jun 2019 07:49 AM

ஆவடியில் ரூ.28 கோடியில் பருத்திப்பட்டு ஏரி பசுமைப் பூங்கா உட்பட ரூ.217 கோடியில் தடுப்பணை, புதிய கட்டிடங்கள்: காணொலி காட்சி மூலம் முதல்வர் பழனிசாமி திறந்துவைத்தார்

ஆவடி அருகே பருத்திப்பட்டில் ரூ.28 கோடியே 16 லட்சத்தில் உருவாக்கப்பட்டுள்ள பருத்திப்பட்டு ஏரி பசுமை பூங்கா உட்பட ரூ.217 கோடியே 18 லட்சம் மதிப்பிலான பல்வேறு கட்டமைப்புகளை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.

இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் உள்ள பருத்திப்பட்டு ஏரியின் சுற்றுச்சூழலை மீட்டெடுக்கும் வகையில் ரூ.28 கோடியே 16 லட்சம் மதிப்பில் பருத்திப்பட்டு ஏரி பசுமை பூங்கா அமைக்கப்பட்டுள் ளது. இப்பூங்காவை சென்னை தலைமை செயலகத் தில் காணொலி காட்சி மூலம், முதல்வர் பழனிசாமி நேற்று திறந்து வைத்தார். தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்டுள்ள இப் பூங்காவில் ஏரியைச் சுற்றிலும் 3 கி.மீ. நீளத்துக்கு பொதுமக்கள் நடைபயிற்சி செய்வதற்கான நடைபாதை, திறந்தவெளி அரங்கம், சிறுவர்கள் விளையாட்டு உபகரணங்கள், வாகனங்கள் நிறுத்துமிடம், சிற்றுண்டி கட்டிடம், படகு குழாம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன.

மேலும், ஊத்துக்கோட்டை ஆட்ரம்பாக்கத்தில் கொசஸ்தலையாற்றின் குறுக்கே ரூ.7 கோடியில் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. வேலூர் - மலட்டாற்றின் குறுக்கில் ரூ.3 கோடியில் நிலத்தடி தடுப்புச்சுவர் கட்டப்பட்டுள்ளது. கடலூர் - வீசூர் மற்றும் காட்டுப்பாளையம் ஓடைகள் ரூ.14 கோடியே 60 லட்சம் மதிப்பிலும், வீசூர் கிராமத்தில் இருந்து தேவனாம்பட்டினம் வரை கெடிலம் ஆற்றுப்பாதை ரூ.22 கோடியே 50 லட்சம் மதிப்பிலும் புனரமைத்து வலுப்படுத்தப்பட்டுள்ளன.

இதுதவிர சேலம், திருச்சி, மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் ரூ.63 கோடியே 15 லட்சம் மதிப்பில் தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. இவற்றையும் முதல்வர் திறந்து வைத்தார்.

சென்னை - தாடண்டர் நகரில் ஏ மற்றும் பி பிரிவு அரசு அலுவலர்களுக்காக ரூ.76 கோடியே 39 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகள், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் ரூ.2 கோடியே 38 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள அரசு விருந்தினர் மாளிகையையும் முதல்வர் திறந்து வைத்தார். இத்திட்டங்களின் மொத்த மதிப்பு ரூ.217 கோடியே 18 லட்சமாகும்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.சி.கருப்பணன், பா.பெஞ்சமின், கே.பாண்டியராஜன், தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், பொதுப்பணித் துறை செயலர் பிரபாகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x