Last Updated : 07 Jun, 2019 05:08 PM

 

Published : 07 Jun 2019 05:08 PM
Last Updated : 07 Jun 2019 05:08 PM

தேனியில் உள்ளாட்சித் தேர்தலுக்கான வேலைகளை தொடங்கியது அதிமுக: முழுவீச்சில் களமிறங்கினார் ஓபிஎஸ் 2-வது மகன் ஜெயபிரதீப்

உள்ளாட்சித் தேர்தல்களுக்கான வேலைகளை தேனி தொகுதியில் அதிமுக துவக்கி உள்ளது.

 இதற்காக ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஜெயபிரதீப் தலைமையில் மாவட்டம் முழுவதும் உள்ள பிரச்னைகள், தேவைகளை கணக்கிடப்பட்டு அவற்றை நிறைவேற்றுவதற்கான திட்டமும் வகுக்கப்பட்டு வருகிறது.

இந்தத் தேர்தலில் தேனி மக்களைவைத் தொகுதியில் கடும் போட்டி நிலவியது. காங்கிரஸ், அதிமுக, அமமுக என்று மூன்று பிரதான கட்சிகளிலும் விஐபி.வேட்பாளர்கள் போட்டியிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தேர்தல் முடிவுகளை கணிக்கவே முடியாத அளவிற்கு வாதங்களும், சர்ச்சைகளும் ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில் அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத்குமார் 75ஆயிரம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இது குறித்த பல்வேறு யூகங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

இருப்பினும் தேர்தல் பிரச்சார வியூகத்தில் அதிமுக தனித்துவமாகவே இருந்து வந்தது. தொகுதியின் அனைத்து குக்கிராமத்தையும் சென்றடையும் வண்ணம் பிரசாரப் பயணத் திட்டம் வகுக்கப்பட்டது.

இதன்படி காலை 7 மணிக்கு துவங்கும் பிரசாரம் இரவு 10 மணி வரை நீடித்தது. அதேவேளையில் தொகுதியின் வேறு இடங்களில் நட்சத்திர பேச்சாளர்கள் வலம் வந்தனர்.

ஆனால் மற்ற கட்சிகளில் இதுபோன்ற நிலை இல்லை. மாலைக்கு பிறகே காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பிரசாரங்களை துவங்கின. அமமுகவிற்கு பிரசாரம் செய்ய பெரியளவில் தலைவர்கள் வரவில்லை.

இதனால் அதிமுகவின் பிரசாரமும், வேட்பாளரின் பயணமும் தொகுதியை முழுமையாகச் சென்றடைந்தது.

இதே ரீதியில் வரும் உள்ளாட்சித் தேர்தலையும் எதிர்கொள்ள அதிமுக தற்போது அதற்கான பணிகளை மேற்கொள்ளத் துவங்கியுள்ளது.

இதன் ஒரு பகுதியாக தேர்தல் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி பரவலாக நடைபெற்று வருகிறது. நகர, ஒன்றிய, கிளைக்கழகம், வார்டு என்று ஒவ்வொரு படிநிலைகளிலும் பிரசாரத்திற்கு சென்றது போல வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கவும் இதே முறையில் சென்று வருகின்றனர்.

பொதுவாக வேட்பாளர் தொகுதியின் முக்கிய பகுதிகளில் சென்று நன்றி தெரிவிப்பது வழக்கம். ஆனால் இம்முறை தேர்தல் வெற்றிக்குப் பிறகு இடைவெளியின்றி வாக்காளர்சந்திப்புகளை பரவலாக நிகழ்த்தி வருகின்றனர்.

எம்பி.ரவீந்திரநாத்குமாரின் தம்பி ஜெயப்பிரதீப் தலைமையில் இப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் குழுவினர் செல்லும் இடங்களில் உள்ள பிரச்னைகள், தேவைகள் குறித்த பட்டியல்களும் பெறப்பட்டு வருகின்றன. இதன் மூலம் அப்பகுதி பிரச்னைகளைத் தீர்த்து வரும் உள்ளாட்சித் தேர்தலிலும் வெற்றி பெற வியூகங்களை வகுத்து வருகின்றனர்.

மேலும் தொகுதியின் முக்கிய பிரமுகர்களின் விசேஷ நிகழ்ச்சி, கோயில் திருவிழா போன்ற விபரமும் எடுக்கப்பட்டு ஜெயப்பிரதீப் கலந்து கொண்டு வருகிறார். எவ்வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல், கூட்டம் திரளாத அளவிற்கு அமைதியான  பங்கேற்பாக இது இருந்து வருகிறது.

இது குறித்து கட்சி நிர்வாகிகள் சிலர் கூறுகையில், பெரும் போராட்டத்திற்குப் பிறகு கிடைத்த வெற்றி இது. எனவே வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், தொடர்ந்து இந்த ஆதரவை தக்கவைக்கவும் கீழ்மட்ட நிர்வாகிகள் வரை பலரும் பொதுமக்களை சந்தித்து நன்றி தெரிவித்து வருகிறோம்.

பிரச்சினைகளையும் தெரிந்து அவற்றைத் தீர்ப்பதின் மூலம் உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களைக் கைப்பற்ற முடியும் என்பதால் அப்பணியையும் தற்போதே துவங்கி விட்டோம் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x