Published : 21 Jun 2019 12:05 PM
Last Updated : 21 Jun 2019 12:05 PM

மேகேதாட்டுவில் அணை; தமிழகத்தில் யாரும் எதிர்ப்புக் குரல் எழுப்பாதது வியப்பளிக்கிறது: தமிழிசை

மேகேதாட்டுவில் அணை கட்டப்படும் என கர்நாடகா கூறுவதற்கு, தமிழகத்தில் உள்ள கூட்டணிக் கட்சிகள் குரல் எழுப்பாமல் இருப்பது வியப்பை அளிப்பதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியின் வேண்டுகோளை அடுத்து கடந்த 2015-ம் ஆண்டு முதல் சர்வதேச அளவில் யோகா தினம் ஆண்டுதோறும் ஜூன் 21-ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.  இதனையொட்டி 5-வது ஆண்டான இன்று இதய நலனுக்கான யோகாசனம் என்ற கருத்தாக்கத்தை மையமாகக் கொண்டு யோகா தினம் கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் சென்னை நந்தனத்தில் நடைபெற்ற யோகா தின நிகழ்ச்சியில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் நடிகை தன்ஷிகா உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

யோகா பயிற்சியை செய்து முடித்த தமிழிசை செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

''பல மாநிலங்கள் ஒரு நதி நீரைப் பங்கிடும்போது கர்நாடக மாநிலத்தினர் திடீரென அணை கட்ட முடியாது. அணை கட்ட மற்ற மாநிலங்களின் ஒப்புதல் தேவை. இதை நான் மட்டும் சொல்லவில்லை. காவிரி நதி நீர் ஆணையமும் தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்றத்திலும் இது தெளிவாக எடுத்துக் கூறப்படும்.

கர்நாடக முதல்வர் குமாரசாமி சொல்வது போல பொத்தாம்பொதுவாக எல்லாம் அணை கட்டிவிட முடியாது. ஆனால் கர்நாடகாவில் இதைக் கூறியதற்கு தமிழகத்தில் உள்ள கூட்டணிக் கட்சியினர் ஏன் குரல் எழுப்பவில்லை என்பதுதான் வியப்பாக இருக்கிறது.''

இவ்வாறு தெரிவித்தார் தமிழிசை

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x