Published : 14 Jun 2019 03:03 PM
Last Updated : 14 Jun 2019 03:03 PM

‘ஆங்கிலம் இந்தி மட்டுமே என்ற அறிவிப்பு’ - எதிர்ப்பால் திரும்ப பெற்றது தென்னக ரயில்வே

ரயில்வே கட்டுப்பாட்டு அறைக்கும் ஸ்டேஷன் மாஸ்டர்களுக்கும் இடையேயான தொடர்பு மொழி இனி இந்தி அல்லது ஆங்கிலமாக மட்டுமே இருக்க வேண்டும் என்ற உத்தரவை, பலத்த எதிர்ப்புக்காரணமாக தென்னக ரயில்வே வாபஸ் பெற்றுள்ளது.

மதுரை ரயில்வே கோட்டத்தில் கடந்த மே 9-ம் தேதி திருமங்கலம் ரயில் நிலையத்தில் இருந்து செங்கோட்டை பயணிகள் ரயில் கள்ளிக்குடி நோக்கியும், கள்ளிக்குடி ரயில் நிலையத்தில் இருந்து மதுரை பயணிகள் ரயில் திருமங்கலம் நோக்கியும் ஒரே நேரத்தில் புறப்படஅனுமதி அளிக்கப்பட்டது.

இதற்கு இரண்டுபக்கமும் மொழிப்பிரச்சினையே காரணம் என ஆய்வில் கண்டறியப்பட்டதால் இன்று தென்னக ரெயில்வே திடீரென ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில்:

கட்டுப்பாட்டு அறைக்கும் ஸ்டேஷன் மாஸ்டருக்கும் இடையேயான தொடர்பின்போது தகவல் புரிதல் குழப்பத்தைத் தவிர்க்க, ரயில்வே டிவிஷனல் கட்டுப்பாட்டு அறைக்கும் ஸ்டேஷன் மாஸ்டர்களுக்கும் இடையேயான தொடர்பு மொழி இந்தி அல்லது ஆங்கிலமாக மட்டுமே இருக்க வேண்டும். பிராந்திய மொழிகள் பயன்பாட்டைத் தவிர்க்க வேண்டும்.

அதேபோல் ஸ்டேஷன் மாஸ்டர் தான் சொல்லும் தகவல் கட்டுப்பாட்டு அறைக்கு முழுமையாகச் சென்றுவிட்டதா என்பதை உறுதி செய்வது அவருடைய முழு பொறுப்பு. இந்த உத்தரவு அமலுக்கு வருவதை இதற்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மேற்பார்வை செய்வார்கள். என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த அறிவிப்பு பொதுமக்கள், அரசியல் கட்சிகளிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதற்கு எதிராக போராட்டம் அறிவிக்கப்பட்டது. திமுக தலைவர் ஸ்டாலின் இதை தனது முகநூலில் கண்டித்து அறிக்கை வெளியிட்டார்.

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று மதியம் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் எதிர்ப்பு வலுத்ததை அடுத்து தென்னக ரெயில்வே தனது அறிவிப்பை திரும்பப்பெற்றுள்ளது. புதிய அறிவிப்பாக எந்த மொழியிலும் பேசலாம், குழப்பம் ஏற்படாத வகையில் இருதரப்பும் தங்கள் புரியும் மொழியில் பேசலாம் எனதெரிவித்துள்ளது.

இதன்மூலம் ஆங்கில்ம் மற்றும் இந்தியில் மட்டுமே ரயில்வேக்குள் தகவல் தொடர்பு என்கிற நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x