Last Updated : 05 Jun, 2019 12:23 PM

 

Published : 05 Jun 2019 12:23 PM
Last Updated : 05 Jun 2019 12:23 PM

சிற்றருவி திறப்பு எப்போது? சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு

குற்றாலத்தில் சாரல் மழைக்கான அறிகுறி தென்படத் தொடங்கியுள்ளது. மூடப்பட்டு இருக்கும் சிற்றருவி எப்போது திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு சுற்றுலா பயணிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

குற்றாலத்தில் கடந்த ஆண்டு மே மாதம் இறுதியிலேயே சாரல் காலம் தொடங்கியது. இந்த ஆண்டில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட் டுள்ளது. இதனால், குற்றாலம் அருவிகள் நீர் வரத்தின்றி காணப் படுகின்றன.

இந்நிலையில், கடந்த 2 நாட் களாக குற்றாலம் மலைப் பகுதி யில் அவ்வப்போது மேகம் சூழ்கிறது. இரவு, அதிகாலை நேரத் தில் குளிர்ந்த காற்று வீசுகிறது. நேற்று முன்தினம் இரவு செங்கோட்டை பகுதியில் லேசான சாரல் பெய்தது. சாரல் தீவிரம் அடைந்தால் இன்னும் ஓரிரு நாட் களில் அருவிகளில் நீர் வரத்து ஏற்படும் என எதிர்பார்க்கப் படுகிறது.

குற்றாலத்தில் பிரதான அருவி, ஐந்தருவி, சிற்றருவி, புலியருவி, செண்பகாதேவி அருவி, தேனருவி, பழத்தோட்ட அருவி, பழைய குற்றாலம் அருவி ஆகியவை உள்ளன. இவற்றில், பழத்தோட்ட அருவி, அடர்ந்த வனப்பகுதிக்குள் உள்ள செண்பகாதேவி அருவி, தேனருவி ஆகியவற்றுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

சிற்றருவிக்கு பூட்டு

பழைய குற்றாலம் அருவியை ஆயிரப்பேரி ஊராட்சி நிர்வாகம் பராமரித்து வருகிறது. காப்புக் காட்டு பகுதியில் உள்ள குற்றாலம் சிற்றருவியை உள்ளாட்சி நிர்வா கமே பராமரித்துக் கொள்ளு மாறு கடந்த 1962-ம் ஆண்டு நீண்ட கால குத்தகை அடிப்படையில் வனத்துறை ஒப்படைத்தது.

குத்தகை தொகையாக ஆண்டு ஒன்றுக்கு ஒரு ரூபாய் மட்டும் செலுத்துமாறு இதற்கான உத்தரவில் குறிப்பிட்டிருந்தது.

இந்நிலையில், ஒரு ரூபாய் கட்டணத்தைக் கூட குற்றாலம் பேரூராட்சி நிர்வாகம் பல ஆண்டுகளாக வனத்துறைக்கு செலுத்தாமல் இருந்தது.

இதனால், கடந்த மே 1-ம் தேதி முதல் குற்றாலம் சிற்றருவியை வனத்துறை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது. சிற்றருவிக்குச் செல்லும் வழியை யும் வனத்துறையினர் பூட்டினர். குற்றாலம் சிற்றருவி மத்தளம் பாறை கிராம வனக்குழு மூலம் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும் என வனத்துறை அறிவித்தது.

பிரதான அருவி, ஐந்தருவி, புலியருவி, சிற்றருவி ஆகிய வற்றை குற்றாலம் பேரூராட்சி நிர்வாகம் பராமரித்து வருகிறது. சிற்றருவிக்கு செல்ல நபருக்கு ரூ.6 கட்டணம் குத்தகைதாரர் மூலம் வசூலிக்கப்பட்டது.

சாரல் சீஸன் விரைவில் தொடங்க உள்ள நிலையில், குற்றாலம் சிற்றருவிக்குச் செல்லும் வழி திறக்கப்படாமல் உள்ளது. மரக்கிளைகள் ஆங் காங்கே விழுந்து கிடக்கின்றன. இதனால், இந்த ஆண்டு சிற்றருவியில் குளிக்க அனுமதி கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

குத்தகைதாரருக்கு நோட்டீஸ்

இதுகுறித்து குற்றாலம் பேரூராட்சி அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “வனத்துறைக்கு செலுத்த வேண்டிய குத்தகை தொகையை குற்றாலம் பேரூராட்சி நிர்வாகம் எப்போது வேண்டுமானாலும் நிலுவையுடன் செலுத்தி புதுப் பித்துக் கொள்ளலாம். அதன்படி, கடந்த 1974-75ம் ஆண்டில் குத்தகை தொகை நிலுவையு டன் செலுத்தி புதுப்பித்துக் கொள் ளப்பட்டது. அதன் பிறகு, பல ஆண்டுகளாக குத்தகை செலுத்தப்படாமல் இருந்தது.

சிற்றருவிக்குச் செல்ல நுழை வுக் கட்டணம் வசூலிக்கும் உரிமம் குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. வனத்துறை உத்தரவை சுட்டிக்காட்டி, குத்தகைதாரருக்கு நோட்டீஸ் அனுப்பினோம்.

அவர், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், 2020-ம் ஆண்டு மார்ச் இறுதி வரை கட்டணம் வசூலிக்க அனுமதி அளித்தது. எனவே, சிற்றருவிக்கான வழியை திறந்து விடுமாறு வனத்துறையினரிடம் கூறியுள்ளோம்” என்றார்.

இது குறித்து வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “சிற்றருவி விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடந்து வருகிறது. விரைவில் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.

சிறுவர்கள் ஆனந்தமாக குளிக்க ஏற்ற இடமாக குற்றாலம் சிற்றருவி உள்ளது. எனவே, அருவி எந்த துறையின் கட்டுப் பாட்டில் இருந்தாலும் சீஸன் தொடங்கியதும் அருவியில் குளிக்க அனுமதிக்கப்பட வேண் டும் என்பதே சுற்றுலா பயணி களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x