Last Updated : 03 Jun, 2019 12:42 PM

 

Published : 03 Jun 2019 12:42 PM
Last Updated : 03 Jun 2019 12:42 PM

சபாநாயகர் பதவி விவகாரத்தில் காங்கிரஸில் மோதல்: அதிருப்தி எம்எல்ஏவின் ஆதரவாளர்கள் தர்ணா; முதல்வருடன் வாக்குவாதம்

சபாநாயகர் பதவி விவகாரத்தில் காங்கிரஸில் மோதல் எழுந்துள்ளது. சபாநாயகர் பதவி கிடைக்காததால் அதிருப்தி அடைந்த காங்கிரஸ் எம்எல்ஏ லட்சுமி நாராயணன் சபாநாயகர் பதவியேற்பு நிகழ்வை புறக்கணித்தார். அவரது அரசு காரை பேரவையில் ஒப்படைத்ததுடன், அவரது ஆதரவாளர்கள் தர்ணாவில் ஈடுபட்டு முதல்வருடன் வாக்குவாதம் செய்தனர்.

புதுச்சேரி சபாநாயகராக பதவி வகித்த வைத்திலிங்கம் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டதால் அப்பதவியை ராஜினாமா செய்தார். மக்களவைத் தேர்தலில் வென்றுள்ள இவர் வரும் ஜூன் 17-ம் தேதி டெல்லியில் பதவியேற்க உள்ளார். 

மக்களவை உறுப்பினராக வென்றதற்கான சான்றிதழ் பெற்ற 24-ம் தேதியில் இருந்து 14 நாட்களில் அவர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய வேண்டூம். மக்களவை உறுப்பினராக தேர்வாகியுள்ள வைத்திலிங்கம் எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்யு முன்பாக சபாநாயகர் தேர்தலை நடத்த புதுச்சேரி அரசு திட்டமிட்டது.

சபாநாயகர் பதவிக்கு தற்போதைய பொறுப்பு சபாநாயகர் சிவகொழுந்து,சுற்றுலா வளர்ச்சி கழக தலைவர் பாலன்,அரசு கொறடா அனந்தராமன்,முதல்வரின் நாடாளுமன்ற செயலர் லட்சுமிநாராயணன் ஆகியோர் தரப்பினர் விரும்பினர். இச்சூழலில் காங்கிரஸில் மூத்த உறுப்பினராக லட்சுமி நாராயணன் இப்பதவிக்கு தனது விருப்பத்தை கட்சியில் தெரிவித்தார். இவர் ஆளுநர் கிரண்பேடிக்கு எதிரான வழக்குகளையும் தொடர்ந்தவர்.

ஆனால், சிவகொழுந்துவை சபாநாயகராகவும், பாலனை துணை சபாநாயகராகவும் கட்சி தரப்பு முடிவு செய்ததால் லட்சுமி நாராயணனும், அவரது ஆதரவாளர்களும் அதிருப்தி அடைந்தனர். காலையில் சட்டப்பேரவை நிகழ்வுகளை லட்சுமி நாராயணன் எம்எல்ஏ புறக்கணித்தார்.

சபாநாயகர் பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்கவில்லை. பெருமாள் வீதியில் உள்ள அவரது இல்லத்தில் இருந்த முதல்வரின் நாடாளுமன்ற செயலர் பலகையை  அகற்றினார். அதேபோல் அரசு அளித்திருந்த காரில் இருந்த பெயர் பலகையையும் அவரது ஆதரவாளர்கள் அகற்றினர்.

அக்காரை எடுத்து வந்த அவரது ஆதரவாளர்கள் சட்டப்பேரவையில் நிறுத்தி அக்காரின் சாவியை சட்டப்பேரவை செயலர் வின்சென்ட் ராயரிடம் தந்தனர். அதைத்தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் சட்டப்பேரவை முன்பு அமர்ந்து தர்ணாவிலும் ஈடுபட்டனர். 

லட்சுமிநாராயணன் தொகுதியான ராஜ்பவன் தொகுதியிலுள்ள காங்கிரஸ் நிர்வாகிகள் ஒட்டுமொத்தமாக ராஜிநாமா செய்ய உள்ளதாகவும் குறிப்பிட்டனர். ஆனால், அவரது ஆதரவாளர்கள் கோபத்துடன் முதல்வர் நாராயணசாமியுடனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இச்சூழலில் அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியும் தொடங்கியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x