Published : 06 Jun 2019 05:06 PM
Last Updated : 06 Jun 2019 05:06 PM

ரவீந்திரநாத் எம்.பி.யாகவோ, அமைச்சராகவோ பதவியேற்பதை எதிர்த்து வழக்கு தொடர்வேன்: ஈ.வி.கே.எஸ்

அதிமுக சார்பில் தேனி தொகுதியில் போட்டியிட்டு வென்ற ரவீந்திரநாத் குமார் எம்.பி.யாகவோ, அமைச்சராகவோ பதவியேற்க தடை விதிக்க கோரி ஓரிரு நாளில் வழக்கு தொடர உள்ளதாக ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தேனியிலிருந்து ரவீந்திரநாத் போட்டியிட்டார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன், அமமுக சார்பில் தங்கத்தமிழ்ச் செல்வன் என நட்சத்திர வேட்பாளர்கள் களமிறக்கப்பட அரசியலில் அறிமுக நாயகனான ரவீந்திரநாத் வெற்றி பெற்றார்.

ரவீந்திரநாத்துக்காக தேனியில் பிரதமர் மோடியே வந்து பிரச்சாரம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய தேர்தல் வரலாற்றில் தேனி தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்துக்காக பிரதமர் யாரும் வந்ததே இல்லை.

தேனியில் அதிமுகவின் ரவீந்திரநாத் 4,99,354 வாக்குகள் பெற்றார். காங்கிரஸின் இளங்கோவன் 4,23,035 வாக்குகள் பெற்றார்.  76,319 வாக்குகள் வித்தியாசத்தில் ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்றார்.

இந்நிலையில் இன்று (வியாழக்கிழமை) சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய ஈவிகேஎஸ் இளங்கோவன், "தேர்தலில் எனக்காக பிரச்சாரம் மேற்கொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தேன்.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனான ஓ.பி.ரவீந்திரநாத் குமார் எம்.பி.யாகவோ, அமைச்சராகவோ பதவியேற்க தடை விதிக்க கோரி ஓரிரு நாளில் வழக்கு தொடர உள்ளேன். அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன" எனக் கூறினார். 

தேனியில், தேர்தலுக்குப் பின்னர் 50 வாக்குப்பதிவு இயந்திரங்கள் வந்திறங்கிய போதே வாக்கு எண்ணிக்கையை நிறுத்த வேண்டும். சதி நடக்கிறது என ஈவிகேஎஸ் மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவை சந்தித்து புகார் மனு கொடுத்திருந்தார்.

புதிதாக வாக்கு இயந்திரங்கள் வந்திறங்கியதில் துணை முதல்வருக்குப் பங்கு இருக்கிறது எனவும் பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டியிருந்தார்.

இந்நிலையில், தற்போது அதிமுக சார்பில் தேனி தொகுதியில் போட்டியிட்டு வென்ற ரவீந்திரநாத் குமார் எம்.பி.யாகவோ, அமைச்சராகவோ பதவியேற்க தடை விதிக்க கோரி ஓரிரு நாளில் வழக்கு தொடர உள்ளதாக ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x