Published : 08 Jun 2019 09:06 PM
Last Updated : 08 Jun 2019 09:06 PM

அனுமதியின்றி முதுநிலை டிப்ளமோ படிப்பு: எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு உயர் நீதிமன்றம் ரூ.5 லட்சம் அபராதம்

இந்திய மருத்துவ கவுன்சில் அங்கீகாரம் பெறாமல் முதுநிலை மருத்துவ டிப்ளமோ படிப்புகளை நடத்திய  தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக் கழகத்திற்கு தடைவிதித்த சென்னை உயர் நீதிமன்றம், ரூ.5 லட்சம் அபராதமும் விதித்துள்ளது.

இந்திய மருத்துவ கவுன்சில் அங்கீகாரம் பெறாமல், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக் கழகம் நடத்தும் முதுநிலை மருத்துவ டிப்ளமோ படிப்புகளுக்கு  தடை விதிக்க கோரியும் தமிழ்நாடு டாக்டர்கள் நலச் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் சீனிவாசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் விசாரித்தார். இதுபோன்ற படிப்புகளை வழங்குவது சட்டவிரோதமல்ல எனவும், டாக்டர்கள் பற்றாக்குறைக்கு தீர்வு காண பல்கலைக்கழக நிர்வாக குழு இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக் கழகம் தரப்பில் வாதிடப்பட்டது.

ஆனால், மத்திய அரசு அல்லது மருத்துவ கவுன்சில் ஒப்புதல் இல்லாமல் எந்த படிப்பையும் வழங்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம், ஏற்கனவே பல்கலைக்கழகத்துக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் மருத்துவ கவுன்சில் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இதுபோன்ற படிப்புகளை நடத்த அனுமதித்தால், அதில் படித்து முடித்தவர் அந்த பிரிவில் நிபுணர் என மக்கள் தவறாக புரிந்து கொள்ள வாய்ப்புள்ளதாக கூறி, மருத்துவ கவுன்சில் ஒப்புதல் இல்லாமல் டிப்ளமோ படிப்புகளை வழங்க பல்கலைக் கழகத்துக்கு தடை விதித்து உத்தரவிட்டார்.

ஏற்கனவே உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும், அதை மதிக்காமல் செயல்படுவதற்கு   கண்டனம் தெரிவித்த நீதிபதி,  பல்கலைக்கழகத்துக்கு 5  லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

நான்கு வாரங்களில் இத்தொகையை கல்வித்துறைக்கு செலுத்த வேண்டும் எனவும், அத்தொகையை அரசு பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த பயன்படுத்த வேண்டும் எனவும் நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

கடலூர் கல்லூரி மாணவி திலகவதி கொலை வழக்கில்  விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x