Last Updated : 16 Jun, 2019 09:48 AM

 

Published : 16 Jun 2019 09:48 AM
Last Updated : 16 Jun 2019 09:48 AM

நிறைந்த தரமே நிரந்தர வெற்றி!- `அரோமா’ குழுமத் தலைவர் ஆர்.பொன்னுசாமி

வாய்ப்புகள் சில நேரம் நம்மைத் தேடிவந்து  மடியில் விழும். ஆனால், பல நேரங்களில் நாம் அதைத் தேடிச்சென்று, சந்திக்க வேண்டியிருக்கும். கிடைப்பதற்கு அரிய வாய்ப்புகளைத் தவறவிட்டவர்கள் நிறைய உண்டு. அதேசமயம், வாய்ப்புகளைத் தேடிச் சென்று, வெற்றியை நோக்கி முன்னேறியவர்கள் மிகவும் குறைவு. கிடைத்த வாய்ப்புகளைவிட,  தேடிச்சென்று கண்டறிந்த வாய்ப்புகளே என்னை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் சென்றன. என் வாழ்க்கை வெற்றி, தோல்வியால் அளவிடப்படுவதைவிட, வாய்ப்புகளை எப்படி முழுமூச்சாகப் பயன்படுத்திக் கொண்டேன் என்பதை வைத்து மதிப்பிடப்படுவதையே விரும்புகிறேன்” என்று கூறுகிறார் `அரோமா’ நிறுவனர் ஆர்.பொன்னுசாமி.

ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு, பல கோடி வர்த்தகம் என உயர்ந்த பொன்னுசாமியின் தொழில் பயணம்,  நிறைய பாடங்களைக் கற்றுத் தரும்.

வியாபார நுணுக்கம்!

“மனிதர்களை நம்பிச் செய்யும் எந்தத் தொழிலிலும், வெற்றி பெற வியாபார நுணுக்கம் தெரிந்திருப்பது அவசியம். உதாரணத்துக்கு, நான் பால் விற்பனை செய்யும்  கடைகளில், பணம் வசூலிக்க  தினம்  செல்ல வேண்டும். எந்த நேரத்தில் போனால், கடை முதலாளியிடம் பணம் வாங்கமுடியும் என்பதை நுணுக்கமாக கணிக்க வேண்டும். சென்றவுடன் பணத்தைக் கொடுப்பவர்களைவிட, சாக்குபோக்கு சொல்பவர்கள் அதிகம் இருப்பார்கள்.

‘ஆடற மாட்டை ஆடிக் கறக்கணும். பாடுற மாட்டை பாடிக் கறக்கணும்’ என்று சொல்வார்கள். அதுவே ஒரு தொழில்நுணுக்கம்தான்.  பால் கறப்பதைக் காட்டிலும், பணம் வாங்க பலமடங்கு தந்திரம் தேவைப்படும்.

ஒரு ஹோட்டல்காரர்,  நான் போனால் என்னைக்  கவனிக்காததுபோலவே இருப்பார். அவர் கவனத்தை ஈர்க்க,  அவரையே பார்த்துக் கொண்டிருந்தாலும் அவருக்குப் பிடிக்காது. நான் சற்று தொலைவில் அமைதியாக நின்று,  வேறுபக்கம் வேடிக்கைப் பார்ப்பேன். அரை மணிநேரம் கழித்து, அவரே கூப்பிட்டு பணத்தைக் கொடுப்பார். இன்னொரு ஹோட்டல் முதலாளி,  முகம் பார்த்து பேசுவதையே தவிர்ப்பார். அந்த ஹோட்டலிலேயே  டீ, வடை சாப்பிட்டுவிட்டு,  கையில் பில்லோடு சென்று, அவர் முன்னால் நிற்பேன். சிரித்துப் பேசி, நலம் விசாரித்து பணம் கொடுப்பார். இன்னொரு டீக்கடைக்காரர், கூட்டம் அதிகம் இருந்தால், பேசாமல் பணத்தைக் கொடுத்துவிடுவார்.  கடையில் வாடிக்கையாளர்கள் இல்லாத நேரத்தில் போனால். ‘பால் சரியில்லை, எருமைப்பால் கேட்டால், பசும்பால் கொடுக்கிற’ என்று ஏதாவது குறை சொல்லுவார். கூட்டம் இருக்கும்போது அங்குபோய் பணத்தைப் பெற்றுக்கொள்வேன்.

பொறுமை அவசியம்!

கடும் உழைப்புக்கும் பிறகு, நமக்கு வர வேண்டிய பணத்தை வசூல் செய்ய இப்படி செய்ய  வேண்டுமா என்று நினைத்தால், எந்த தொழிலையும் வெற்றிகரமாக செய்யமுடியாது. நம்மை அலைய விடுகிறார்களே என்று  கோபித்துக் கொண்டால், நஷ்டம் நமக்குத்தான். கடைக்காரர்களுக்கு வேறு  பல தொழில் நெருக்கடிகள் இருக்கும். எனது பிரச்சினையைத்  தீர்ப்பது மட்டுமே அவர்கள் வேலை இல்லை. இந்த யதார்த்தத்தைப் புரிந்து கொள்வது அவசியம். இதை நான் நன்கு உணர்ந்துகொண்டேன்.

அதேநேரம், சொந்தமாக கடை வைக்க வேண்டும் என்ற உணர்வை இந்த அலைக்கழிப்புகள் உருவாக்கின. தினமும் கோவைக்கு வந்துபோகும்போது, சொந்தமாக ஒதுங்கி நிற்க ஒரு நிழல் இல்லையே என்று தோன்றும். அதேபோல, கடைகளுக்கு பால் சப்ளை செய்தும், சில நேரங்களில் மீதமாகிவிடும். அந்தப் பாலை என்ன செய்வது என்ற யோசனையும் பல நாட்களாக தொடர்ந்தது.

முதல் கடை!

கோயம்புத்தூரில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் வைஸ்யாள் வீதியில், ஒரு சிறிய கடை வாடகைக்கு கிடைத்ததும், உடனே  எடுத்துவிட்டேன். கோவை மாநகரில் என்னுடைய முதல் முகவரி அது.  சிறிதுகாலத்தில்  சற்றே பெரிய கடை வாடகைக்குக் கிடைத்தது.

சின்ன கடையை விட்டுவிடவும் மனமில்லாமல், இரண்டு கடைக்கும் வாடகை கொடுக்க முடியாமலும் குழப்பத்தில் இருந்தேன். அப்போது எனது நண்பர், `நல்ல டீ கிடைக்கலனு ஆதங்கப்படுறோம் . நீயே ஒரு டீக்கடை வைக்கலாமே?’ என்று சொன்னபோது, ஒரு தெளிவு பிறந்தது. `எத்தனையோ பேர் டீக்கடை வைக்க உதவி செய்திருக்கிறோம். நாமே தரமான டீக்கடையை தொடங்கினால் என்ன?’ என்ற எண்ணம் உருவானது. அதேசமயம், ‘மற்ற டீக்கடைகளில் இருந்து எப்படி வித்தியாசப்படப் போகிறோம்’ என்ற கேள்வியும் எழுந்தது. இதற்கு  விடை தேடத் தொடங்கினேன்.

பொதுவாக டீக்கடை என்றாலே, கடை சுத்தமாக இருக்காது. டம்ளரை சரியாக கழுவமாட்டார்கள். பாலில் தண்ணீர் ஊற்றுவார்கள். கலப்பட டீத்தூள் வாங்குவார்கள் என்றெல்லாம் கருதும் நிலை இருந்தது. வேலை செய்துவிட்டு பசியோடு டீக்குடிக்க வருபவர்கள், அருகில் உள்ள பெட்டிக் கடைகளில் பிஸ்கட், வர்க்கி போன்றவற்றை வாங்கிக்கொண்டு வந்து, டீயுடன் சேர்த்து சாப்பிடுவதைப் பார்த்திருக்கிறேன்.

 மேலும், 24 மணி நேரமும் ஷிப்ட்

முறையில் வேலைக்குப் போகிற தொழிலாளர்கள் நிறைந்த கோவையில், இருட்டியதும் டீக்கடையை மூடிவிடுவார்கள்.  இரவு நேரங்களில் சைக்கிளை மிதித்துக்கொண்டு பல கிலோமீட்டர் பயணிக்கிற தொழிலாளர்களுக்கு, டீயும், திண்பண்டமும் கிடைத்தால் மகிழ்ச்சி அடைவார்கள் என்று தோன்றியது.

இதையடுத்து, வைஸ்யாள் வீதியில் கடும் முயற்சியின் மூலம் 100 சதுர அடி இடத்தில் ஸ்ரீமகாலஷ்மி பேக்கரியை 1973-ல் தொடங்கினேன். அங்கு, தரமான டீ, காபியுடன், ரொட்டி, பிஸ்கட், வர்க்கி போன்றவற்றையும் விற்கத் திட்டமிட்டேன்.  முன்னதாக, அந்த இடத்தை ஒழுங்குபடுத்தி, வாடிக்கையாளர்கள் அமர  நல்ல சேர், டேபிள் போட்டு, ஈக்கள் மொய்க்காதபடி சுத்தமான சூழ்நிலையை உருவாக்கினேன்.

ஒரு டீ பத்து பைசா...

மேலும்,  கடை வாயிலில் அனைவருக்கும் தெரியும்படி ஒரு பெரிய பாத்திரத்தில் எப்போதும் சுடுதண்ணீர் கொதிக்க ஏற்பாடு செய்தேன். டீ டம்ளரை சாதாரண நீரில் கழுவியபிறகு, மீண்டும் கொதிக்கிற நீரில் போட்டு எடுத்த பிறகே, வாடிக்கையாளர்களுக்கு தேநீர் வழங்க ஏற்பாடு செய்தேன். தேநீரின் விலை பத்து பைசா மட்டுமே என்று பெரிய பலகையில் எழுதி, கடை வாசலில் வைத்தேன்.  வாடிக்கையாளர்கள் குவிந்தனர்.

விலை குறைவாகவும், பொருள் தரமான தாகவும் இருந்ததால், சில மாதங்களிலேயே கடை பிரபலமடைந்த,  24 மணி நேரமும் செயல்படத் தொடங்கியது.

மக்களின் வரவேற்பையும், தேவை யையும் அறிந்து, 6 மாதங்களுக்கு ஒருகடை என, பல இடங்களில் புதிதாக `அரோமா’ பேக்கரிகள் தொடங்கப்பட்டன.  தற்போது கோவைமாவட்டம் முழுவதும் 50 கிளைகளுக்கு மேல், உலகத் தரம் வாய்ந்த, நவீன வசதிகளுடன் கூடிய பேக்கரிகள் செயல்படுகின்றன.

பாக்கெட் பால்...

1972-ல் தினமும் 100 லிட்டர் கறந்த பாலை கொள்முதல் செய்து, அன்றே விற்பனை செய்தேன். இது கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்தது. 1994-ல் பெங்களூருவில் நடைபெற்ற பால் உற்பத்தியாளர்கள் பயிற்சிப் பட்டறையில் கலந்துகொண்டு, பதப்படுத்தப்பட்ட பாக்கெட் பால் தயாரிக்கும் முறையை அறிந்தேன். ரூ.17 ஆயிரம் மதிப்பில், பதப்படுத்தப்பட்ட பால் தயாரிக்கும் எளிய இயந்திரத்தை சொந்த முயற்சியில் வடிவமைத்து, தினமும் 300 லிட்டர் பாக்கெட் பால் தயாரித்தேன். பல்வேறு ஆராய்ச்சிகள் மூலமாகவும், புதிய தொழில்நுட்பங்களைப் புகுத்துவதன் மூலமாகவும் தற்போது ஒரு நாளைக்கு 3 லட்சம் லிட்டர் பதப்படுத்தப்பட்ட, தரமான பாக்கெட் பால் மற்றும் பல்வேறு பால் பொருட்களைத் தயாரித்து வருகிறோம். 2021-ல் தினமும் 5 லட்சம் லிட்டர் பாலை பதப்படுத்தும் இலக்குடன் பயணிக்கிறோம்.

பால் மற்றும் பால் சார்ந்த பல்வேறு பொருட்களைத் தயாரிக்க வேண்டுமென்ற முனைப்புடன், 2010 முதல் ஸ்ரீமஹாலஷ்மி டெய்ரி நிறுவனம், பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களான தயிர், மோர், வெண்ணெய், நெய், பால் பவுடர், கோவா, பன்னீர், பால் க்ரீம், ரோஸ் மில்க், லஸ்சி என நிறைய பொருட்களைத் தயாரிக்கிறது.

மேலும், விரைவில் சீஸ், யோகட், ஐஸ்கிரீம், ஃப்ளேவர்டு கோவா மில்க் ஆகியவற்றை புதிய வடிவில் அறிமுகப்படுத்த உள்ளோம். கோவையில் மட்டுமே பால் பொருட்களை விற்பனை செய்துவந்த ஸ்ரீமகாலஷ்மி டெய்ரி, இன்று நாடு முழுவதும் விற்பனையை விரிவுபடுத்தியுள்ளது. மேலும், ஐக்கிய அரபு எமிரேட், சிங்கப்பூர், மலேசியா, கத்தார் என கடல் கடந்தும் விற்பனைத் தளத்தை, பன்னாட்டு நிறுவனங் களுக்கு இணையாக விரிவுபடுத்தி யுள்ளது.

அரோமா பேக்கரியின் தொடர்ச்சியாக, அரோமா ஃபுட் கோர்ட் என்ற கிளையைத் தொடங்கி, அதில் ஃபாஸ்ட்புட்

உணவகத்தை 2012-ல் தொடங்கினோம். இந்த ஆண்டு அரோமா `க்ரீன் ட்ரீ’ என்ற பல்பொருள் அங்காடி தொடங்கப்பட்டது. வீட்டுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் ஒரேகூரையின் கீழ் கிடைக்கச் செய்வதே இதன் நோக்கம்.அரோமா என்பதற்கு வாசனை, நறுமணம் என்று  பொருள். அதனாலேயே, அரோமா என்ற பெயரை தேர்வு செய்தேன்.

விருது வழங்கி ஊக்குவித்த அரசு!

தமிழக அரசு இரு ஆண்டுகள் சிறந்த தொழில்முனைவோர் விருதை வழங்கி என்னை ஊக்குவித்தது. இத்தாலி நாட்டின் பிரசித்தி பெற்ற `யுனிவர்சிட்டோ பாப்புலாரே டெக்லி ஸ்டெடி டி மிலனோ’ பல்கலைக்கழகம், பால் வளத் துறையில் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி என்னை கௌரவித்தது. முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் கையால் `வாழ்நாள் சாதனையாளர்’ விருது கிடைத்தது மறக்க முடியாதது. 

எனது இரு மகள்களும் எம்.பி.ஏ. படிப்பை முடித்துவிட்டு, தொழிலில் பங்கெடுத்த பிறகு, அடுத்தகட்ட வளர்ச்சியில் கவனம் செலுத்தினோம். புதிய பால் பொருட்களையும், பேக்கரி பொருட்களையும் தொடர்ந்து மக்களுக்கு அறிமுகம் செய்ய உள்ளோம். உள்நாட்டில் மேலும் பல கிளைகளைத் தொடங்கவும், மேலும் பல நாடுகளுக்கு ஏற்றுமதியை விரிவுபடுத்தவும் முயற்சித்து வருகிறோம்.

தொழிலாளர்களுக்கு பயிற்சி!

இந்த தொழிலை ஆரம்பித்த நாளில் இருந்த அதே அர்ப்பணிப்பு உணர்வுடன், இன்றும் தொடர்ந்து பயணிக்கிறோம். மக்களுக்குப் பிடித்த, தரமான, சுகாதாரமான உணவுகளை, பலகட்ட ஆராய்ச்சிகளுக்குப் பிறகும், தர சோதனைகளுக்குப் பிறகும், நியாயமான விலையில் வழங்குகிறோம். வாடிக்கையாளர்களே எங்களது முதலாளிகள் என்ற கோட்பாட்டின் அடிப்படையில், எங்கள் அரோமா நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் தொடர் பயிற்சிப் பட்டறைகளை நடத்தி, அவர்களுக்கு ஊக்கத்தையும், உத்வேகத்தையும் வழங்குகிறோம்.

அதன் விளைவு, அரோமா ஊழியர்கள், எங்கள் வாடிக்கையாளர்களை கனிவாகவும், அன்பாகவும் நடத்தி, சிறந்த சேவையாற்றி நிறுவனத்தின் வெற்றிக்கு வித்திட்டார்கள். அரோமாவின் மிகப் பெரிய வெற்றிக்கு முக்கியக்  காரணம், எங்களது நிறுவன ஊழியர்கள் அனைவரும் ஒரே குடும்பமாக, ஒரே குறிக்கோளை இலக்காகக் கொண்டு பயணிப்பதே ஆகும்.

காலில் காயம்பட்டால்கூட, சைக்கிள் மிதிப்பதை நிறுத்தமுடியாத இடத்திலிருந்து தொடங்கிய தொழில் பயணம், இப்போதும் நாளுக்கு நாள் வேகமெடுக்கிறது.

புதிய புதிய வாய்ப்புகள் இன்னும் கண்ணுக்குத் தெரிந்து  கொண்டே இருக்கிறது” என்று நெகிழ்ச்சியுடன் முடித்தார் அரோமா குழுமத் தலைவர் முனைவர் ஆர்.பொன்னுசாமி. அவர் சைக்கிள் மிதித்த பாதங்களில்,  காயங்களின் தழும்புகள் இன்னும் இருக்கின்றன. காயங்கள் ஆறிவிட்டன; காலங்கள் மாறிவிட்டன. பொன்னுசாமியின் உழைக்கிற பண்பு மட்டும் இன்னும் மாறவில்லை.

அடுத்த சாம்ராஜ்யம்... அடுத்த வாரம்...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x