Last Updated : 27 Jun, 2019 08:43 AM

 

Published : 27 Jun 2019 08:43 AM
Last Updated : 27 Jun 2019 08:43 AM

டிஜிட்டல் மயமான அரசு பள்ளி!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேயுள்ள  ரா.பட்டணம் அரசு மேல்நிலைப் பள்ளியில்  வகுப்பறைகள் அனைத்தும் முற்றிலும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு, கண்காணிப்புக் கேமராக்களுடன், தனியார் பள்ளிகளுக்கே சவால்விடும் வகையில் முன்மாதிரி பள்ளியாகத் திகழ்கிறது.

தனியார் பள்ளிகள் நிறைந்த ராசிபுரத்தில், இப்பள்ளியில் குழந்தைகளை சேர்க்க ஆர்வம் காட்டுகின்றனர் பெற்றோர். 10-ம் வகுப்பு மாணவர்களை கழுகுபோல தனியார் பள்ளிகள் கொத்திச் செல்லும் சூழலில், இந்தப் பள்ளியில் கடந்த ஆண்டு 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 97 மாணவர்களில் 90 பேர் அதே பள்ளியில் 11-ம் வகுப்பில் சேர்ந்துள்ளனர். மீதமுள்ள 7 மாணவர்களும், பாலிடெக்னிக்கில் சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மலையடிவாரத்தில் உள்ள இந்தப்  பள்ளியைத் தேடிச் சென்றபோது, பள்ளி வளாகம் முழுவதும் மரங்கள் நிறைந்து, அனைத்துப் பகுதிகளிலும் தூய்மையாய் காணப்பட்டது. பள்ளித்  தலைமை ஆசிரியர் கே.விஜயனிடம் பேசினோம்.

“இங்கு 6 முதல் 12-ம் வகுப்பு வரை  695 மாணவ, மாணவிகள் பயில்கின்றனர். தொடர்ந்து மாணவர் சேர்க்கை நடைபெறுவதால், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பள்ளியில் உள்ள 20 வகுப்பறைகளும், ரூ.15 லட்சம் செலவில் டிஜிட்டல் மயமாக்கப்பட்டது. சென்னை பல்கலைக்கழகத்தன் புவி அமைப்பியல் துறைத் தலைவர்  ரா.கிருஷ்ணமூர்த்திதான் இதற்கு முக்கியக் காரணம்.

பட்டணம் கிராமத்தைச் சேர்ந்த இவரது நண்பர் சுற்றுச்சூழல் துறையில் அதிகாரியாக உள்ளார். அந்த துறையின் மூலம், டிஜிட்டல் வகுப்பறைக்கான நிதி ஒதுக்கப்பட்டது. எனக்கு முன் பணியாற்றிய தலைமை ஆசிரியர் பி.வெங்கடாசலம் இதற்கான  முயற்சிகளை மேற்கொண்டார். நான் பொறுப்பேற்ற பின் நிதி கிடைத்தது. ஒரு வகுப்பறைக்கு சுமார் ரூ.80 ஆயிரம் வரை செலவிடப்பட்டது.

அனைத்து வகுப்புகளும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டது தமிழக அளவில் இப்பள்ளியில் மட்டும்தான், டிஜிட்டல் திரை, அதற்குத் தேவையான புரொஜெக்டர் ஆகியவை வகுப்பறையில் உள்ளன.  அந்தந்த வகுப்புக்குரிய பாடங்கள் அனைத்தும் படங்களாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.  வகுப்புக்குச் செல்லும் ஆசிரியர் 20 நிமிடம் பாடம் நடத்துவர்.  தொடர்ந்து, அந்த பாடம் 15 நிமிடங்கள் காட்சியாக திரையில் ஒளிபரப்பப்படும். பாடங்களை மாணவர்கள் காட்சியாகப் பார்க்கும்போது எளிதில் மனதில் பதிந்துவிடும்.  டிஜிட்டல் பலகை இருப்பதால், கரும்பலகை பயன்படுத்துவதில்லை. இதுபோல்,  கல்வி தொடர்பாக இணையதளங்ளில் வெளியாகும் காட்சிகளும்   ஆசிரியர்களின் மொபைல் போனை ஃவைபை மூலம் இணைத்து, திரையில் காட்சிப்படுத்தப்படும். இது  பாடப் புத்தகங்களை தாண்டிய அறிவை வளர்க்க மாணவர்களுக்கு உதவுகிறது. இதேபோல, பள்ளி முழுவதும் சிசிடிவி காமிரா கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. தலைமை ஆசிரியர் அறையில் இருந்தபடியே பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகளைக்  கண்காணிக்க இயலும். இதனால், மாணவர்கள் தேவையற்ற நேரங்களில் வகுப்புகளைவிட்டு வெளியே வருவதில்லை. பள்ளி வளாகம் முழுவதும் தேசியத் தலைவர்கள் படங்கள் வரையப்பட்டுள்ளன.  மாணவர்களே இந்தப் படங்களை வரைந்துள்ளனர். வாசிப்பை மேம்படுத்தும் வகையில்,  நூலக வகுப்பு நேரத்தில் மாணவர்கள் கட்டாயம் நூலகத்துக்கு  வரவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பள்ளியின் செயல்பாடுகளைப் பார்த்து, அருகேயுள்ள தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களும், இங்கு வந்து சேர்ந்துள்ளனர்.  கடந்த ஆண்டு 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம், 11-ம் வகுப்பில் 99 சதவீதம், 12-ம் வகுப்பில் 92 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது” என்றார் பெருமிதத்துடன் கே.விஜயன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x