Published : 20 Jun 2019 02:51 PM
Last Updated : 20 Jun 2019 02:51 PM

தமிழக அரசின் 1 மற்றும் 2-ம் வகுப்பு கணக்கு, சூழ்நிலையியல் புத்தகங்களில் தேசிய கீதத்தில் அச்சுப்பிழை

தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையின் 1, 2-ம் வகுப்பு கணக்கு  சூழ்நிலையியல் புத்தகத்தில் தேசிய கீதம் தவறாக அச்சாகியுள்ளது ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 

தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறையால் கடந்த ஆண்டு 1, 3, 6, 9, பிளஸ் 1 வகுப்பு பாடப்புத்தகங்கள் மாற்றப்பட்டு புதிய பாடப்புத்தகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

நடப்பு கல்வியாண்டில் 2, 4, 5, 7, 8, 10, பிளஸ் 2 வகுப்புகளுக்கு புதிய பாடப்புத்தகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. புதிய பாடப்புத்தங்களை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் சார்பில் அச்சிடப்பட்டு பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

நடப்பு கல்வியாண்டில் ஜூன் 3ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இருந்தாலும் பெரும்பாலான பள்ளிகளுக்கு இன்னும் புத்தகங்கள் வழங்கவில்லை. இதில், 1, 2, 6, 7ம் வகுப்புகளுக்கு மட்டுமே புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் 3, 4, 5, 8ம் வகுப்புகளுக்கு இன்னும் புத்தகங்கள் வரவில்லை.

தற்போது 1 மற்றும் 2ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கணக்கு மற்றும் சூழ்நிலையியல் புத்தகத்தில் அச்சிடப்பட்ட தேசிய கீதத்தில், 'ஜன கண மங்கள தாயக ஜயஹே' என்பதற்குப் பதிலாக 'ஜன கண மன அதி நாயக ஜயஹே' என பிழையுடன் அச்சாகி உள்ளது.

 

 

 

மேலும் உச்சல ஜலதி தரங்கா என்பதற்குப்பதிலாக உச்சல சலதி தரங்கா என உள்ளது.  இது ஆசிரியர்களையும், மாணவர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சிவகங்கை மாவட்ட செயலாளர் ஏ.முத்துப்பாண்டியன் கூறுகையில், 1ம் வகுப்பு, 2ம் வகுப்பு கணக்கு மற்றும் சூழ்நிலையியல் புத்தகத்தில் தொகுதி 2ல் இடம்பெற்ற தேசிய கீதத்தில், ஜன கண ‘மங்கள தாயக’ ஜயஹே’ என்பதற்குப் பதிலாக, ஜன கண ‘மன அதி நாயக’ ஜயஹே’ என தவறாக அச்சாகி உள்ளது.

இதனை மாணவர்கள் தவறாக படிக்க நேரிடும் என்பதால் அச்சுப்பிழையை திருத்தி வாசிக்கச் செய்ய வேண்டியுள்ளது. இனிமேல் அச்சிடவுள்ள புத்தகங்களிலாவது தவறுகளை திருத்தி அச்சிட வேண்டும், என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x