Last Updated : 25 Jun, 2019 04:24 PM

 

Published : 25 Jun 2019 04:24 PM
Last Updated : 25 Jun 2019 04:24 PM

விபத்தில் உயிரிழந்த மனைவி; ஆபத்தான நிலையில் மகள்: துக்கத்திலும் மதுக்கடையை மூடப் போராடிய மருத்துவர்

கோவை அருகே சாலை விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை தடாகம் சாலை கணுவாயைச் சேர்ந்தவர் ரமேஷ், மருத்துவர். இவரது மனைவி ஷோபனா(48). இவர்களது மகள் சாந்தலா. இவர் ஆணைக்கட்டி அருகேயுள்ள பள்ளியில் படித்து வருகிறார்.

ஷோபனா நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் வழக்கம் போல், இருசக்கர வாகனத்தில் தன் மகளை அழைத்துக் கொண்டு பள்ளியில் இருந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.

ஆணைக்கட்டி - தடாகம் சாலைக்கு இடைப்பட்ட பகுதியில் உள்ள ஜம்புகண்டி அருகே வந்த போது, எதிரே வந்த இருசக்கர வாகனம் ஷோபனா வந்த வாகனத்தின் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த ஷோபனா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சாந்தலா உள்ளிட்ட 3 பேர் காயமடைந்தனர்.

இந்த விபத்தை அறிந்ததும் அப்பகுதி மக்கள் சம்பவ இடத்தில் திரண்டனர். "இந்தப் பகுதியில் மதுக்கடை உள்ளது. இங்கு மது குடித்து விட்டு, போதையில் வரும் வாகன ஓட்டுநர்களால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இந்த மதுக்கடையை அகற்ற வேண்டும்", என்ற கோரிக்கையை வலியுறுத்தி பொதுமக்கள் விபத்தில் உயிரிழந்த ஷோபனாவின் சடலத்தை எடுக்காமல் சாலையில் வைத்தபடி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறிப்பாக, இறந்த பெண்ணின் கணவரான மருத்துவர் ரமேஷ், மனைவியின் சடலத்தின் அருகில் அமர்ந்து, மதுபானக் கடையை மூட வேண்டும் என வலியுறுத்தி போராடினார். மனைவி இறந்தும், மகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும், மதுபானக் கடையை மூட வலியுறுத்தி அவர் போராடியது அங்கிருந்தவர்களை நெகிழச் செய்தது.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தடாகம் போலீஸார் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, வட்டாட்சியர் வெளியிட்ட அறிவிப்பில், மதுபானக் கடையைத் தற்காலிகமாக மூடுவதாகவும், மாற்று இடம் தேர்வான பின்பு நிரந்தரமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து சில மணிநேரங்களுக்குப் பின்னர் பொதுமக்கள் மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த விபத்து சம்பவம் தொடர்பாக தடாகம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x