Published : 11 Jun 2019 04:26 PM
Last Updated : 11 Jun 2019 04:26 PM

ஸ்டாலினைக் கிண்டலடிக்கும் சீதா பாட்டி-ராதா பாட்டி வசனம்: ‘24 மணிநேர நிறைவேறாத முதல்வர் கனவு’: ராமதாஸ் ட்வீட்

''இளமை எல்லாம் வெறும் கனவு மயம் - இதில் மறைந்தது சில காலம் மயங்குது எதிர்காலம்'' என்ற 'பாக்கியலட்சுமி' படப்பாடலை ட்விட்டரில் பதிவிட்டு பாட்டிகள் இருவர் பேசுவதுபோல் 24 மணிநேர முதல்வர் கனவில் மிதக்கும் ஸ்டாலின் என ராமதாஸ் கிண்டலடித்துள்ளார்.

திமுகவின் முன்னாள் தலைவர் கருணாநிதி கேள்வி பதில் வடிவில், உரையாடல் வடிவில் எழுதி தற்கால அரசியலை, அரசியல்வாதிகளை விமர்சித்துள்ளார். தற்போது திமுக தலைவர் ஸ்டாலின் அடுத்த முதல்வர் என்றும், அதிமுகவின் ஆட்சி கவிழும் காலம் வெகு தொலைவில் இல்லை என்றும் திமுக நிர்வாகிகள் பேசி வருகின்றனர்.

இதை பாமக நிறுவனர் ராமதாஸ் கிண்டல் செய்து தனது ட்விட்டர் பக்கத்தில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி பாணியில் கேள்வி பதில்போல் சீதாப்பாட்டி, ராதாப்பாட்டி என இரு மூதாட்டிகள் பேசுவதுபோல் ஸ்டாலினைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

அதில் ''ஸ்டாலினுக்கு எதுவும் தெரியாது, தந்தை அளவுக்கு இல்லை, 24 மணிநேரமும் ஆட்சி கவிழும் என முதல்வர் கனவில் மிதக்கிறார்'' என பதிவிட்டுள்ளார்.

ராதா பாட்டி: மாலைப்பொழுதின் மயக்கத்திலே ஒரு கனவு கண்டேன் தோழி...

சீதா பாட்டி: என்னடி... பாட்டெல்லாம் பயங்கரமா இருக்கு?

ராதா பாட்டி: அட நீ வேற அக்கா. பாட்டெல்லாம் இனிமையான பாட்டு தான். ஆனால், நான் கண்ட கனவில் வந்த விஷயம் தான் பயங்கரமானது.

சீதா பாட்டி: என்ன ராதா உளறிக் கொட்டுற. அப்படி என்ன பயங்கரம் கனவில் வந்தது. ஏதாவது பூகம்பம், சுனாமி வர்றது போன்று கனவு கண்டியா?

ராதா பாட்டி: இல்லை அக்கா. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது போலவும், அதில் ஸ்டாலின் முதல்வர் ஆவது போலவும் கனவு கண்டேன்.

சீதா பாட்டி: அடப்போடி பைத்தியக்காரி. இது பயங்கரமான கனவு இல்லேடி. பயங்கரமான காமெடி.

ராதா பாட்டி: என்னக்கா சொல்ற.

சீதா பாட்டி: ஆமான்டி.. கனவு என்பதே நிஜத்தில் நடக்காதது தான்டி. அதிலும் பார்த்துக்க நீ மாலைப்பொழுதின் மயக்கத்தில் கண்ட கனவை ஸ்டாலின் பகலில் கண்டாரு, பின்னர் இரவில் கண்டாரு, இப்போது 24 மணி நேரமா கண்டுக்கிட்டு இருக்காரு. ஆனா, அவருக்கு அவரே கண்ட கனவே பலிக்கல. இப்போது நீ கனவு கண்டா பலிக்கப் போகிறது. அப்படி ஒரு கொடுமை தமிழகத்தில் நடந்துடாது. பயப்படாதே.

ராதா பாட்டி: இல்லக்கா... அதிமுகவில் இருந்து 10 எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கியாவது ஸ்டாலின் ஆட்சிக்கு வரப்போறதா அவங்க கட்சி ஆளுங்களே சொல்லிட்டு திரியுறாங்களே.

சீதா பாட்டி: அட நீ ஒருத்திடி. அவங்க இதை மட்டும் தானா சொன்னாங்க. நாடாளுமன்றத் தேர்தலில் ஜெயிச்சி ராகுல் காந்தி பிரதமர் ஆகிட்டாருன்னா, ஸ்டாலின் துணை பிரதமர் ஆவாரு, ஒருவேளை ராகுல் பிரதமராக மறுத்து விட்டால் ஸ்டாலினே பிரதமர் ஆகிடுவாருன்னே சொன்னாங்களே. அதையெல்லாம் கேட்டுக் கொண்டே நாங்க ஸ்டடியா இருக்கோம். நீ சாதாரண முதல்வர் கனவைக் கண்டுவிட்டு இப்படி அலறுகிறாயே!

ராதா பாட்டி: அக்கா.... அப்படின்னா அந்தத் துயரம் நடந்துடாதே?

சீதா பாட்டி: அட... எவடி இவ. எடப்பாடி பழனிசாமி அரசை ஸ்டாலின் கவிழ்த்து விடுவார் என்றால் அதை ஸ்டாலினே நம்ப மாட்டாரே. எடப்பாடி பழனிசாமி முதல்வர் ஆகி இரண்டரை ஆண்டுகள் ஆகி விட்டன. கிட்டத்தட்ட 29 மாதங்களில் 29 முறையாவது இந்த ஆட்சியைக் கவிழ்க்க வேண்டும், நாம முதல்வராக வேண்டும்னு ஸ்டாலின் துடிச்சிருப்பாரு. ஆனால், பாருங்க அவரது யோசனையை அவரு கூட எப்போதும் இருக்கும் துரைமுருகனே ஆதரிச்சதில்லையாம்.

ராதா பாட்டி: ஏன்க்கா.

சீதா பாட்டி: என்னடி... இது கூடவா உனக்குத் தெரியாது. திமுக எம்.எல்.ஏ.க்கள் எல்லாம் குலுக்கல் சீட்டில் வெற்றி பெற்றா எம்.எல்.ஏ. ஆனார்கள்? 2016-ல் திமுக ஆட்சிக்கு வந்து விடும். எப்படியாவது எம்.எல்.ஏ. ஆகிவிட்டால் அமைச்சர் பதவி/வாரியத் தலைவர் பதவி வாங்கி கோடிகளைக் குவிக்கலாம் என்ற எண்ணத்தில் பல கோடி செலவு செய்து வெற்றி பெற்றவர்கள் தான் திமுகவினர்.

ஆனால், திமுகவால் ஆட்சிக்கு வர முடியாத நிலையில், முழு பதவிக்காலமும் எம்.எல்.ஏ. ஆகவாவது இருக்க வேண்டும் என்று திமுகவினர் நினைக்கிறார்கள். ஆட்சியைக் கலைக்க நினைத்து சட்டப்பேரவையே கலைக்கப்பட்டு விட்டால் என்ன செய்வது? என்ற பீதியில் தான் அவர்களே இருக்கிறார்கள். அவங்க எப்படி ஆட்சியைக் கவிழ்க்க ஒப்புக்கொள்வாங்க?

ராதா பாட்டி: அப்ப இதெல்லாம் ஸ்டாலினுக்குத் தெரியாதா அக்கா?

சீதா பாட்டி: அடியே... அவருக்கு குடியரசு நாளும் தெரியல.... சுதந்திர நாளும் தெரியல. எந்த நாள் எந்த மாதத்தில் வரும் என்பதும் தெரியல. பழமொழியை சரியாக சொல்லத் தெரியல. அவரைச் சுற்றி ஒரு கூட்டம் இருக்கும். அந்தக் கூட்டம் அவரிடம் வந்து ''தளபதி... அடுத்த மாதம் நீங்க தான் முதல்வர்'' என்று சொன்னால் அதை அப்படியே நம்புறவர் தான் ஸ்டாலின். புரிஞ்சுதா?

ராதா பாட்டி: அடக்கடவுளே.... இப்படிப்பட்ட ஒருவர் ரசிகர் மன்றத்துக்கே தலைவராக இருக்க முடியாதே? 50 வருஷமா கலைஞர் தலைவராக இருந்த திமுகவுக்கு இவரா தலைவர்? என்ன கொடுமை ராதாக்கா?

சீதா பாட்டி: அதுக்கு நாம என்னடி செய்ய முடியும். அது திமுககாரங்க தலையெழுத்து. வரலாறு தெரிந்தவன் இதை நினைத்து வருந்துறான். பொழைக்கத் தெரிந்தவன் தளபதி நீங்க தான் அடுத்த முதல்வர்னு சொல்லி காரியம் சாதிச்சிக்கிறான்.

ராதா பாட்டி: திமுகவை நினைச்சா பாவமாத்தான் அக்கா இருக்கு.

சீதா பாட்டி: சரி... அது இருக்கட்டும். முதல்வர் கனவை வைத்து பாட்டு பாடி தான் இந்த உரையாடலை தொடங்கினோம். இப்ப ஸ்டாலினின் உண்மையான நிலையை விளக்கும் வகையில் அதே பாடலில் உள்ள கடைசி வரியை ப்பாடு. நாம் கலைந்து செல்வோம்.

ராதா பாட்டி: இளமை எல்லாம் வெறும் கனவு மயம். இதில் மறைந்தது சில காலம் தெளிவும் அடையாது முடிவும் தெரியாது. மயங்குது எதிர்காலம் மயங்குது எதிர்காலம்!".

ராமதாஸின் பதிவுக்குக் கீழ் நெட்டிசன்கள் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x