Published : 10 Sep 2014 09:00 AM
Last Updated : 10 Sep 2014 09:00 AM

அதிமுகவுக்கு எதிரி நாங்கள் என்பதை நிரூபித்துவிட்டோம்: தமிழிசை சவுந்திரராஜன் பேட்டி

“அதிமுகவுக்கு எதிரிகளே இல்லை என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார். இதோ நாங்கள் இருக்கிறோம் என்று நிரூபித்துவிட்டோம்’’ என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கூறியுள்ளார்.

உள்ளாட்சித் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த பலரும் சொல்லி வைத்ததுபோல ஒரே நேரத்தில் வாபஸ் பெற்றனர். நெல்லை மேயர் வேட்பாளர் வெள்ளையம்மாள், கடைசி நேரத்தில் தனது மனுவை வாபஸ் பெற்றதால், அங்கு அதிமுக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். வேட்பாளர்கள் மிரட்டப்பட்டதாக கூறப்பட்டாலும் பல இடங்களில் அவர்கள் பணத்துக்கு விலை போனதாகவும் கூறப்படுகிறது. இதுபற்றி தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜனிடம் பேசினோம். அவரது பேட்டி:

பல இடங்களில் உங்கள் கட்சி வேட்பாளர்கள் வாபஸ் பெற்றுள்ளனர். இதற்கு மிரட்டல் காரணமா அல்லது பணத்துக்கு விலைபோனார்களா?

சில இடங்களில் விலை போயி ருக்கலாம். அதுபோன்றவர்கள் மீது கட்சியின் ஒழுங்கு நட வடிக்கைக் குழு விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும். ஆனால், பெரும்பாலான இடங்களில் மிரட்டல் காரணமாக வாபஸ் பெற்றார்கள் என்பதே உண்மை.

மத்தியில் மிகவும் வலிமையான ஆட்சியில் இருக்கிறீர்கள். அதிலும் கண்டிப்பான தலைவர் என்று கருதப்படும் நரேந்திர மோடி பிரதமராக இருக்கிறார். இந்தச் சூழலில் மிரட்டினால் பயந்துபோகும் நிலையிலா தமிழகத்தில் பாஜக இருக்கிறது?

பாஜக வேட்பாளர்கள் எல்லோரும் வீரர்கள் அல்ல. சமூக சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் அரசியலுக்கு வந்தவர்கள். பெண்களில் பெரும்பாலோர் இல்லத்தரசிகள். ‘குடும்பத்தையே இல்லாமல் செய்துவிடுவோம்’ என்று ஆளும்கட்சியின் ரவுடிகள் மிரட்டினால் அந்தப் பெண்கள் என்ன செய்வார்கள்? தமிழகத்தில் கொலைகள் நடக்காமலா இருக்கிறது? உள்ளூரில் தாங்கள் உயிருடன் வாழ வேண்டும் என்று நினைத்திருப்பார்கள். இதுதான் பெரும்பாலான இடங்களில் நடந்திருக்கிறது. அதுமட்டுமின்றி, சட்டப்பேரவை தேர்தல் வேட்பாளர்களின் பலம் என்பது வேறு. உள்ளாட்சித் தேர்தல் வேட்பாளர்களின் தாங்குதிறன் என்பது வேறு என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மதுரை 85-வது வார்டில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ஹரிஹரன், நீங்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு வீரர்தான். விலைக்கு போகாதவர்தான். ‘மொட்டை’ ஹரி என்றால் அங்கு பிரபலம். அவர் போட்டியிட்டிருந்தால் கட்டாயம் வெற்றி பெற்றிருப்பார். ஆனால், அவரது கையெழுத்தை போலியாக போட்டு, மனு வாபஸ் பெறப்பட்டுள்ளது. பல்லாவரம் 2-வது வார்டிலும் இதுதான் நடந்தது.

கொலை மிரட்டலுக்கு பயப்படுபவர்கள் ஏன் அரசியலுக்கு வரவேண்டும்?

அத்தனைப் பேரும் பயந்து ஓடிவிடவில்லையே. இவ்வளவு மிரட்டலையும் தாண்டி வேட்புமனுத் தாக்கல் செய்த 122 பேரில் சுமார் 90 முதல் 100 பேர் வரை போட்டியில் இருக்கிறார்களே. தமிழகத்தில் அதிமுகவுக்கு எதிரிகளே இல்லை என்று முதல்வர் ஜெயலலிதா பேசினார். இதோ நாங்கள் இருக்கிறோம் என்று நிரூபித்துவிட்டோமே.

தமிழகத்தில் பாஜகவுக்கு இது ஒரு பாடம் தானே? கட்சியை மேலும் வலுப்படுத்த என்ன செய்யப்போகிறீர்கள்?

இந்த உள்ளாட்சித் தேர்தல் என்பது எங்களுக்கான முதல்கட்ட பரிசோதனை. எங்களுக்கு விடப்பட்ட சவால். இதில் எந்த அளவுக்கு பங்கேற்க முடியுமோ அந்தளவுக்கு பங்கேற்றுள்ளோம். சில பாடங்களையும் கற்றுள்ளோம். நாங்கள் மேலும் வலிமை பெறுவோம்.

வேட்பாளர் தேர்வில் சொதப்பிருக்கிறது தமிழக பாஜக. இதற்கு யார் பொறுப்பேற்கப் போகிறீர்கள்?

மேயர் மற்றும் தலைவர் பதவிகள் தவிர, அனைத்து வேட்பாளர்களையும் அந்தந்த மாவட்டக் கமிட்டிதான் தேர்வு செய்தது. அந்தக் கமிட்டிகள்தான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும். நடந்த அனைத்து விவரங்களையும் மேலிடத்துக்கு அனுப்பியுள்ளோம். விரைவில் விசாரணை நடக்கும்.

இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x