Last Updated : 15 Jun, 2019 10:45 AM

 

Published : 15 Jun 2019 10:45 AM
Last Updated : 15 Jun 2019 10:45 AM

அயராத உழைப் `பால் பொங்கிய வாழ்வு!- `அரோமா’ நிறுவனத் தலைவர் ஆர்.பொன்னுசாமி

பலர் வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். வெகு சிலரே அதை லட்சியமாக்கி  வெற்றி பெற முயற்சி  செய்கிறார்கள்.  ஆசைகளுக்கும், லட்சியங்களுக்கும் உள்ள வேறுபாட்டை உணர்ந்து கொள்வதே வெற்றியின் ரகசியம். என்னுடைய 16-வது வயதில் அந்த ரகசியத்தை உணர்ந்து கொள்கிற வாய்ப்பை கடவுள் எனக்குக்  கொடுத்தார். ஆனால், அந்த ரகசியத்தை அறிய நான் தினமும் நூறு கிலோமீட்டர் சைக்கிள் மிதித்திருக்கிறேன். சுட்டெரிக்கும் வெயில், கொட்டித் தீர்க்கும் மழை, கடுமையான குளிர் என  எதுவும் என் பயணத்தை  நிறுத்தவில்லை. சைக்கிளில் பால் கேனை கட்டிக்கொண்டு, கோயம்புத்தூரின் ஒவ்வொரு டீக்கடையாக ஏறி இறங்கியுள்ளேன். ஐம்பது ஆண்டுகால இடைவிடாத பயணம் அது. வெற்றி வந்த பிறகும், அந்த ஓட்டம் நிற்கவில்லை. நிற்காமல் ஓடிக்கொண்டே இருப்பதால்தானே  அந்த வெற்றியே வந்தது” என்கிறார் `அரோமா’  குழுமங்களின் தலைவர் ஆர்.பொன்னுசாமி.

இவர்  அடைந்திருக்கும் வெற்றி, உழைப்பின் சக்தியை நன்கு உணர்த்துகிறது. தினமும் தமிழகத்தின் மேற்கில் உள்ள கொங்கு மாவட்டங்களில் விவசாயிகளிடம் இருந்து  மூன்று  லட்சம் லிட்டர் பால் வாங்கி, அதைப் பதப்படுத்தி, பாக்கெட் பால், தயிர், நெய், வெண்ணெய், பன்னீர் என பல்வேறு வடிவங்களில் மக்களிடம் கொண்டு சேர்க்கிறார்.   கோவையைச் சுற்றிலும் 50-க்கும் மேற்பட்ட ‘அரோமா’ பேக்கரி கடைகளையும் வெற்றிகரமாக நடத்துகிறார்.   இவரது பெற்றோர் எம்.ரங்கசாமி கவுண்டர்-ஆர்.கண்ணம்மாள்.  வெற்றியின் முன்னேற்றப் படிகளில் உழைப்பின் மூலம் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியையும் விளக்குகிறார் பொன்னுசாமி.

இரவு இரண்டு மணிக்கு தொடங்கி...

“இரவு இரண்டு மணிக்கு தொடங்கும் எங்கள் வாழ்க்கை. கோவைக்கு அருகில் உள்ள காளம்பாளையம்  கிராமத்தைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களுக்குச் சென்று பால் கறந்து, அதை கேனில் அடைத்து, அதிகாலை 4 மணிக்கு சைக்கிளில் கோவைக்கு கிளம்புவார் அப்பா. ஒவ்வொரு டீக்கடையாக  பால் ஊற்றி,  வீடு வந்து சேர காலை பத்து மணிக்கு மேலாகிவிடும். சாப்பாடு முடித்து, கொஞ்சம் ஓய்வெடுத்த பிறகு, மீண்டும் மதியம் ஒரு மணிக்கு  பால் கறக்கப் புறப்பட்டால்,  மாலை பால் விற்பனை முடித்து, பணத்தை வசூல் செய்து, வீடு திரும்ப இரவாகிவிடும்.

அப்பாவின் இந்த கடுமையான உழைப்பைப்  பார்த்தே நான் வளர்ந்தேன். அது எனக்குள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. ஒவ்வொரு ரூபாய் சம்பாதிக்கவும் எப்படி உழைக்க வேண்டும் என்பது சிறுவயதிலேயே புரிந்தது. உடல் உழைப்பை சலிக்காமல் கொடுக்கிற மனம் வாய்க்கப் பெற்றவர்களே பால் தொழிலுக்கு வரமுடியும். மாடாய் உழைக்கிறேன் என்று கிராமத்தில் சொல்வார்கள். பால் விற்பனையில் ஈடுபடுகிறவர்கள் நிச்சயமாக மாடுபோல உழைத்தாக வேண்டும்.

13 வயதிலேயே...

கிராமங்களில் வீடுகள்தோறும் மாடுகள் இருக்கும். தங்களுக்குத் தேவையான பாலை எடுத்துக்கொண்டு, மீதியை விற்பனை செய்ய ஆர்வமாக இருந்தனர். பெரிய நகரமான கோவையில் பெரும்பாலானோர் வீட்டில் மாடு வளர்க்கும் சூழல் இருக்காது. பல்வேறு தொழிற்சாலைகளில் பணிபுரிந்த தொழிலாளர்கள், வேலை செய்த அலுப்புத்  தீரவும், பசியாறவும் கடைகளில் டீ குடிப்பது வழக்கம். அந்தக் கடைகளுக்கு அப்பா பால் சப்ளை செய்து வந்தார். நமக்காக அப்பா இவ்வளவு கஷ்டப்படுகிறாரே என்றெண்ணி, அவருக்கு விருப்பத்துடன் உதவியாக இருந்தேன். 13 வயதிலேயே அப்பாவுடன் அதிகாலையில் பால் கறக்கச் செல்லத் தொடங்கிவிட்டேன்.

இருள் நிறைந்த அந்த பாதைகளில்தான் என் வாழ்வுக்கான வெளிச்சம் இருக்கிறது என்பது மெல்ல புரிந்தது.

பள்ளிக்குப் போவதற்கு முன்பும், பள்ளி முடிந்து வந்த பிறகும் அப்பாவுக்கு உதவி செய்வதே எனது பிரதான பொழுதுபோக்கு. என் வயதுள்ள நண்பர்களுடன் விளையாடுவதோ, ஊர் சுற்றும் பழக்கமோ  கிடையாது. வீட்டில் அப்பாவும், அம்மாவும் ஒரு வேலை சொல்லிவிட்டால், முடியாது என்று சொல்லி எனக்குப் பழக்கம் இல்லை. நான் அப்படி இருப்பதை வெகுவாகப்  பாராட்டுவார் அப்பா. உழைப்பை சும்மா வாங்க மாட்டார். சொந்தப் பிள்ளையாகவே இருந்தாலும், ஒரு நாள் அவருக்கு உதவி செய்தால், ஊக்கப்படுத்தும் விதமாக 50 பைசா கொடுத்துவிடுவார்.

அந்த வயதில் பத்து பைசா கிடைப்பதே பெரிய விஷயம். உழைப்பின் மூலம் கிடைத்த 50 பைசா,  எனது மனதளவில் மகாராஜா என்ற உணர்வைக் கொடுத்தது. அந்த பொருளாதார சுதந்திரம் என்னளவில் நிறைய தன்னம்பிக்கையையும் கொடுத்தது.

ஒரு சைக்கிள் வாங்கிக் கொடுத்து, என்னையும் பால் தொழிலுக்குப்  பழக்கினார் அப்பா. பள்ளி விடுமுறை நாட்களில் 10 லிட்டர் கேனோடு,  நானும் அவருடன் கிளம்பிவிடுவேன். சைக்கிள் பெடல் மிதிக்க,  கால் எட்டாத வயது.  மெதுவாக தள்ளிக்கொண்டு போய், மேடான இடத்தைத் தேர்வு செய்த பிறகே, சைக்கிளில் ஏறுவேன். சிலர் கேலி செய்தாலும், அதில் எனக்கு எந்த மனக்குறையும் வராது. முடியாது என்று அவர்களைப்போல சும்மா இருந்துவிடாமல், நான் முயற்சி செய்கிறேன் என்பதில் பெருமிதமாக உணர்வேன். மாடு வைத்திருப்பவர்களிடம் 75 பைசாவுக்கு  ஒரு லிட்டர் பால் வாங்கி,  ஒரு ரூபாய்க்கு  கடைகளில் விற்பனை செய்தோம். குடும்பத்தின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தியானதும், பால் விற்பனை செய்யும் தொழிலைக் கைவிட முடிவு செய்தார் அப்பா. அதிகமாக உழைத்து,  குறைவான லாபம் வருவதுடன்,  ‘ரிஸ்க்’ அதிகம் இருக்கிற தொழிலாகவும் இருந்ததே அதற்குக் காரணம்.

படிப்பா? பால் விற்பனையா?

நான் 10-ம் வகுப்பு முடித்து, 11-ம் வகுப்பில் அப்போதுதான் சேர்ந்திருந்தேன். காலாண்டுத்  தேர்வு முடிந்து விடுமுறை விட்டிருந்தார்கள். நான்கு வருடங்களுக்கு மேல், தொழிலை கூடவே இருந்து கற்றதால், அந்த வேலையை என்னால் தனியாக செய்ய முடியும் என்று தோன்றியது. நன்கு உழைத்தால், யாரையும் சார்ந்து இருக்க வேண்டியதில்லை என்பதே என்னை அதிகம் ஈர்த்தது. அதேபோல, மற்றவர்களுக்கு என்னுடைய உழைப்பிலிருந்து கிடைத்த பணத்தைக் கொண்டு  உதவ முடிந்தபோது,

அது மனநிறைவைக் கொடுத்தது. உழைப்பும், அதன் மூலம் வரும் பொருளாதார வசதியும், மகிழ்ச்சியையும் மனநிறைவையும் அளித்ததால், `நாம் ஏன் இப்போதே பால் விற்பனை செய்யக்கூடாது?’ என்று நினைத்தேன்.  நான் முழுமையாக அந்த வேலையில் ஈடுபட்டால், படிப்பை நிறுத்துவதைத் தவிர வேறு வழியில்லை. ஆனால், நான் தொடர்ந்து படிக்க வேண்டும் என்று விரும்பினார் அப்பா. எனவே, நான் தொழில் செய்ய ஆரம்பத்தில் மறுக்கவும் செய்தார். பருவ வயதில் விளையாட்டுதனத்தோடு சொல்வதாகக்கூட நினைத்திருக்கலாம். தனியாக என்னால் செய்ய முடியுமா என்ற சந்தேகமும் இருந்திருக்க வாய்ப்புண்டு.

எல்லோரும் படித்துவிட்டு வேலைதான் செய்யப்போகிறார்கள். அதை இப்போதே செய்ய எனக்குப் பிடித்திருக்கிறது என்று கூறி, என் முடிவில் நான் உறுதியாக இருந்தேன். கடினமான பால் தொழிலை, சிறப்பாக செய்யமுடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. என் உறுதியைப் பார்த்து, அப்பாவும் பிறகு சம்மதம் தெரிவித்தார்.

காலாண்டு  விடுமுறை முடிந்து எல்லோரும் பள்ளிக்குப் போனார்கள். நான் பால் கேன் எடுத்துக்கொண்டு, தொழிலுக்குக் கிளம்பினேன். இத்தனைக்கும் வறுமையான சூழலோ, வீட்டின் நிர்ப்பந்தமோ எனக்கு இருந்தது கிடையாது. ஏன் படிப்பை நிறுத்திவிட்டு, கடினமான அந்த வேலையைத் தேர்ந்தெடுத்தேன் என்று எனக்குத் தெரியவில்லை.  அதுவே இறைவனின் சித்தம் என்று இப்போது எனக்குத் தோன்றுகிறது. ஒவ்வொரு ரூபாயும் சம்பாதிக்க எப்படி கஷ்டப்பட வேண்டியிருக்கிறது என்பதை தினம்தினம் அனுபவப்பூர்வமாக உணர்ந்தபோது எனக்கு 16 வயது.

தினமும் 100 கிலோமீட்டர் பயணம்!

அப்பாவின் வாரிசாக, நள்ளிரவு இரண்டு மணிக்கு பால் கறக்க கிராமங்களுக்குச் சென்றேன். இதற்காக  20 கிலோமீட்டர் சைக்கிள் மிதிக்க வேண்டியிருக்கும். அதன் பிறகு கோயம்புத்தூருக்குச் சென்று பால் விற்பனை செய்து திரும்ப 20 கிலோமீட்டர் சைக்கிள் மிதிப்பேன். காலை, மாலை என இரண்டு முறை போய்வர 80 கிலோமீட்டர் சைக்கிள் மிதிப்பது போக, பணம் வசூல் செய்ய கடைகடையாக ஏறி இறங்குவது 20  கிலோமீட்டர் வரும். ஆக, மொத்தம் நூறு கிலோமீட்டர் தினமும் சைக்கிள் மிதித்தேன். இதில் 50 லிட்டர் பால் கேனோடு மிதிப்பதுதான் சவாலான காரியம்.

சுட்டெரிக்கும் வெயிலையும், நடுங்க வைக்கும் குளிரையும்கூட சமாளித்துவிடலாம். கொட்டுகிற மழையில் பால் கறக்கப் போவதும், விற்பனை செய்யப் போவதும்தான் மிகவும் சிரமம். பள்ளம், மேடு தெரியாமல், அதிக கனத்துடன் கீழே விழுந்தால், மொத்த பாலும் வீணாகிவிடும். மழையால் வரமுடியவில்லை என்று கடைக்காரர்களுக்கும் சொல்ல முடியாது. சில நேரம் சைக்கிளைத் தொடர்ந்து ஓட்ட முடியாமல் திகைத்து நிற்கும்போது,  என்னை அறியாமல் கண்கள் கலங்கிப் போவதும் நடக்கும். ஆனாலும், இந்தக் கடினமான தொழில் செய்ய வேண்டுமா? என்ற எண்ணம் தோன்றியதே இல்லை.

விடுமுறையே கிடையாது!

தினமும் பால்கேன் கழுவி வைப்பதில்கூட கவனமாக இருக்க வேண்டும். சரியாக கழுவாமல் போனால் பழைய பாலின் வாசம்,  புதிய பாலையும் பாழடித்துவிடும். கவனிக்காமல் விட்டால், பால் திரிந்து எதற்கும் பயனில்லாமல் போய்விடும். ஒரேயொரு நாள் 50 லிட்டர் பால் திரிந்துவிட்டால், நான் நஷ்டத்திலிருந்து  மீண்டுவர சில மாதங்கள் தேவைப்படும். தவறு செய்ய வாய்ப்பே இல்லாத தொழிலாக இருந்தது. தலைவலி, காய்ச்சல், பண்டிகை நாட்கள், விழாக்கள், குடும்ப நிகழ்வுகள் என  எந்தக் காரணத்துக்காகவும் பால் கொண்டுபோகாமல் இருக்க முடியாது.

சில நாள் சரியாக வரவில்லை என்றாலும், கடைக்காரர்கள்  வேறு  பால்காரர்களிடம் வாங்க ஆரம்பித்துவிடுவார்கள்.  பால் கெட்டுப்போகிற பொருள். இப்போது இருப்பதுபோல அப்போது குளிர்சாதன வசதிகளும் இல்லை. காலையில் கறந்த பாலை மதியத்துக்குள்ளும், மதியம் கறந்த பாலை மாலைக்குள்ளும் விற்காமல் போனால், கடன்பட வேண்டிய நிலைமை வந்துவிடும். பால் கொடுக்கிற விவசாயிகளுக்கு எந்தக் காரணத்தையும் சொல்லி, பணத்தைத் தராமல் இருக்க முடியாது. அதனால், பால் விற்க முடியாமல் போகிற நாட்கள், அவஸ்தை நிறைந்ததாக மாறிவிடும்.

நஷ்டம் ஏற்பட்டது எப்படி?

தனியாக தொழில் தொடங்கிய பிறகு, சில மாதங்கள் தொடர்ந்து நஷ்டமே வந்தது. எப்படி நஷ்டம் ஏற்படுகிறது என்பதைக் கணிக்க முடியவில்லை. எங்கே தவறு செய்கிறேன் என்று யோசித்தபோது,  சில இடைவெளிகள் இருப்பதைக் கண்டுபிடித்தேன்.

தினமும் வசூல் செய்த பணத்தில், பால் வழங்குபவர்களுக்கு கொடுக்க வேண்டியதை தனியாக பிரித்து வைத்தேன். அதன்பிறகு  வரும் லாபத்தை தனியாக எடுத்து வைத்து, குறித்துக் கொண்டேன். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அசல் பணமே திரும்பாமல் இருப்பதைக் கவனித்தேன்.

டீக்கடைகளில் தினமும் பால் விற்பனை செய்த பிறகு, வசூல் செய்வதற்காக மாலையில் போவதே வழக்கம். ஞாயிற்றுக்கிழமை மட்டும்   பெரும்பாலானவர்கள் சீக்கிரமே கடையைச் சாத்திவிட்டுப் போய்விடுவார்கள். அடுத்த நாள் வழக்கம்போல பால் கொடுத்து வசூல் செய்யப்  போனால், அன்றைக்குரிய பணத்தை மட்டுமே கடைக்காரர்கள் கொடுத்தார்கள். அதுவே, பணப் பற்றாக்குறைக்கு காரணம் என்று தெரியவந்தது. அப்பாவிடம் பணத்தை வாங்கி சமாளித்தேன். மூன்றாவது  மாதமே, `இவ்வளவு கஷ்டப்பட்டு உழைச்சி, இதுல தொடர்ந்து நஷ்டமே வரும்னா, நீ இந்த தொழில் செய்றதுல அர்த்தமில்ல’ என்று சொல்லிவிட்டார் அப்பா.

வளர்ச்சிப் பாதையை நோக்கி...

எனக்கு முன்னால் பல ஆண்டுகள் வெற்றிகரமாக இதே தொழிலை செய்தவர்  அப்பா. என்னால் மட்டும் முடியாதா? என்று கருதி, நம்பிக்கையுடன் தவறுகளை உடனுக்குடன் திருத்திக் கொள்ளும் முயற்சியில் இறங்கினேன். அதன் பிறகு கையில் லாபம் தங்கியது. உழைத்து சேர்க்கிற பணத்தை பகட்டாக செலவு செய்ய மனது வராது. தொழிலை விரிவுப்படுத்துவதிலேயே ஒவ்வொரு ரூபாயையும் செலவு செய்தேன்.  வளர்ச்சிக்கான அடிகளை கவனமாக எடுத்து வைத்தேன்.

ஞாயிற்றுக்கிழமைகளில் கடைகளைத் திறந்து வைத்திருப்பவர்களுக்கே முன்னுரிமை தந்து, பால் விற்பனை செய்தேன்.  உணவகங்களுக்கும் பால் சப்ளை செய்யத் தொடங்கினேன். ஒரு டீக்கடை தொடங்க அப்போது ஐநூறு ரூபாய்வரை முதலீடு தேவைப்படும். நம்பிக்கைக்கு உரியவர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்கள் டீக்கடை அமைக்க பண உதவி செய்தேன். இதனால் என்னிடம் மட்டுமே பால் வாங்கினார்கள் கடைக்காரர்கள்.

பால் கொள்முதல் செய்கிற தேவையும் அதிகரித்தது. 150 ரூபாய்க்குள் கறவை மாடு விலைக்குக் கிடைக்கும். விவசாயிகளுக்கு  பண உதவி செய்து, மாடுகள் வாங்கச் செய்து  பால் உற்பத்தியை அதிகரித்தேன். கொஞ்சம் கொஞ்சமாக வளர்ச்சிக்குத் தேவையான தொழில்நுட்பங்களைக் கற்றுத் தேர்ந்தேன்.

கோவையில் தொழிலாளர்கள் நிறையபேர் வந்துபோகிற, மக்கள்கூடுகிற இடமாக வைஸ்யாள் தெரு இருந்தது.  கடைகளுக்குக் கொடுத்த பிறகு மீதமான பாலை, பொதுமக்களுக்கு விற்பனை செய்தேன்.  ‘நாம் ஏன் இதே தெருவில் ஒரு கடையை வாடகைக்கு எடுத்து, உரிமையுடன் பால் விற்பனை செய்யக்கூடாது?’ என்ற கேள்விதான் என் வாழ்வில் நான் பயணிக்க வேண்டிய திசையைக் காட்டியது.   பத்துக்கு, பதினாறு சதுரஅடியில் ஒரு சிறிய கடையும் வாடகைக்குக் கிடைத்தது. அங்கிருந்து என்னுடைய தொழில் பயணம் வேகமெடுக்கத் தொடங்கியது.

இடைவேளை... நாளை வரை...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x