Last Updated : 27 Jun, 2019 01:17 PM

 

Published : 27 Jun 2019 01:17 PM
Last Updated : 27 Jun 2019 01:17 PM

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு: செப்டம்பர் 15-ல் அறிக்கை தாக்கல் செய்ய சிபிஐக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கின் தற்போதைய நிலை தொடர்பாக செப்டம்பர் 15-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய சிபிஐக்கு உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த ஆண்டு மே 22-ல் நடைபெற்ற பேரணியில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டிற்கு 13 பேர் பலியாகினர்.

இந்த சம்பவம் தொடர்பான வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றிய உயர் நீதிமன்ற மதுரை கிளை, சிபிஐ விசாரணையை  4 மாதத்தில் முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என 2018 ஆகஸ்ட்டில் உத்தரவிட்டது. இருப்பினும் விசாரணை  முடியவில்லை.

இந்நிலையில் துப்பாக்கிச்சூடு வழக்கில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய கால  அவகாசம் கேட்டு சிபிஐ இயக்குநர் சார்பில் டிஎஸ்பி ரவி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், உயர் நீதிமன்ற உத்தரவுபடி தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்புடைய 222 வழக்குகளையும் ஒரே வழக்காக பதிவு செய்து சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வந்தனர். பின்னர் இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. சிபிஐ 2018 அக்டோபர் 8-ல் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியது.

இதுவரை வழக்கு தொடர்பாக 160 ஆவணங்கள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டு, அதில் நூறு ஆவணங்களுக்கு பதில் பெறப்பட்டுள்ளது. 300 பேரிடம் விசாரித்துள்ளோம். மொத்தம் 316 ஆவணங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. 

துப்பாக்கிச்சூடு நாளில் நடைபெற்ற நிகழ்வுகள், அவற்றிற்கான காரணங்கள், அனுமதி பெறாமல் கூடியது ஏன்? அவர்கள் ஆயுதங்கள் வைத்திருந்தனரா? போராட்டத்தின் மையப்பொருள் என்ன? என்பது தொடர்பாக விசாரிக்க வேண்டியதுள்ளது.

இவற்றை விசாரித்து முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அவகாசம் தேவைப்படுகிறது. இதனால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு ஏற்கெனவே  வழங்கப்பட்ட கால அவகாசத்தை ஜூன் 30 வரை நீட்டிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கின் தற்போதைய நிலை தொடர்பாக செப். 15-ல் அறிக்கை தாக்கல் செய்ய சிபிஐக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x