Last Updated : 13 Jun, 2019 09:44 AM

 

Published : 13 Jun 2019 09:44 AM
Last Updated : 13 Jun 2019 09:44 AM

மரண பயத்தை காட்டிய யானைகள்!- அச்சத்தில் உறைந்த பிஏபி பொறியாளர்கள்

பரம்பிக்குளம் அணையின் கட்டுமானப் பணியில் ஈடுபட்ட பொறியாளர் முத்துசாமி, பிஏபி திட்டத்தில் அணைகள் கட்டுமானம், சுரங்க நீர்வழிப்பாதை அமைத்தல் தொடர்பான தனது நினைவுகளைத் தொடர்ந்தார். பரம்பிக்குளம்-தூணக்கடவு சுரங்கப்பாதை அமைக்கும்போது, வெவ்வேறு முகப்புகளில் இருந்து சுரங்கம் தோண்டப்பட்டபோது, சற்றே கோணம் மாறினாலும், சுரங்கம் திசை மாறும் ஆபத்தை சமாளிக்க, தமிழகப் பொறியாளர்கள் என்ன தொழில்நுட்பத்தைக் கடைப்பிடித்தார்கள் என்பதை அவர் விளக்கினார்.

“தமிழகப் பொறியாளர்கள் பயன்படுத்திய `3 பாயின்ட் ப்ராப்ளம்’ என்ற தொழில்நுட்பத்தில், அனைத்து சுரங்கங்களும் ஒன்றரை அடி வித்தியாசத்தில் நேர்க்கோட்டில் சந்தித்துக்  கொண்டன. சுரங்கம் அமைக்கும் அனுபவமே பெற்றிடாத  தமிழகப் பொறியாளர்கள் முதல்முறையாக அமைத்த சுரங்கங்கள் வெறும் ஒன்றரை அடி வித்தியாசத்தில் இணைக்கப்பட்டது பொறியாளர்களை பெரிதும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. தற்போது, அடர்ந்த வனப் பகுதிக்குள் இந்த சுரங்கத்தின் கிணற்றுக்கான நிலப்பாதை உள்ளது.

பரம்பிக்குளம்-தூணக்கடவு சுரங்கப் பாதை வெற்றிகரமாக முடிந்ததையடுத்து, அடுத்தடுத்து சுரங்கப் பாதைகள் அமைக்கும் பணியும் சிறப்பாக நிறைவடைந்தது.

 இந்த திட்டத்தில்,  அதிக சுரங்கப் பாதைகளைக் கொண்ட நவமலை சுரங்கப் பாதை 3 அங்குல வித்தியாசத்தில் இணைக்கப்பட்டது. இது  தமிழகப்  பொறியாளர்களின் திறமையை உலகறியச் செய்தது. வெறும் 3 அங்குல வித்தியாசத்தில்,  நேர்க்கோட்டுப் பாதையில் நவமலை சுரங்கப்பாதை இணைக்கப்பட்ட செய்தி,  முதன்மைப் பொறியாளர் யூ.ஆனந்தராவுக்குத்  தெரிவிக்கப்பட்டது.  மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த ஆனந்தராவ்,  அன்று இரவு பிஏபி  திட்டத்தில் பணியாற்றி வந்த சுமார் 10  ஆயிரம் தொழிலாளர்களுக்கும் இரவு விருந்து அளிக்க உத்தரவிட்டார்.

தமிழகப் பொறியாளர்களின் தொழில்நுட்ப அறிவே, பிஏபி திட்டத்தில் உள்ள  8 அணைகள், 8 சுரங்கப் பாதைகளை  10 ஆண்டுகளில் முடிக்க முக்கிய காரணமாக இருந்தது.

பரம்பிக்குளம் அணைக்கு அஸ்திவாரம்...

இரு மலைகளை உறுதியான தடுப்புச்  சுவரால் இணைத்து, பாய்ந்து வரும் ஆற்று நீரைத் தேக்கிவைப்பதே  அணையாகும். தடுப்புச் சுவர் அமைப்பதற்கான அஸ்திவாரம் தோண்ட டிரில்லர் இயந்திரத்தைக்  கொண்டு, 200, 300 அடி ஆழத்துக்கு குழிதோண்டி, மண் பரிசோதனை நடைபெறும்.

பரம்பிக்குளம் அணையைக் கட்ட ஓராண்டுக்கு மண் பரிசோதனை நடைபெற்றது. இரு மலைகளின் நடுவில், பொதுவாக 50 அடியிலிருந்து 100 அடி ஆழத்தில், இரு மலைகளின் பாறைகள் கீழே சந்தித்துக்கொள்ளும். அதில் 50 அடி ஆழத்துக்குத்  தோண்டி,  கான்கிரீட் தளம் மூலம் அஸ்திவாரம் அமைக்கப்படும். ஆனால், பரம்பிக்குளம் அணைக்கு அஸ்திவாரம் தோண்டியபோது,  300 அடி வரை தோண்டியும் பாறை கிடைக்கவில்லை. என்ன செய்வது என்று  தெரியாமல் பொறியாளர்கள் குழப்பத்தில் ஆழ்ந்தனர். இந்த விஷயம் முதன்மைப்  பொறியாளர் ஆனந்தராவ் கவனத்துக்குச் சென்றது.

இதேபோன்ற பிரச்சினை தேனி மாவட்டம் பெரியகுளத்துக்கு அருகேயுள்ள சோத்துப்பாறை அணை கட்டுமானத்தின்போதும் எழுந்தது. அங்கு 100 அடிக்கு கீழேயும்  மணலாக இருந்ததால்,  அஸ்திவாரம் அமைப்பது தொடர்பான முடிவெடுக்க பொறியாளர்களுக்கு  7 ஆண்டுகளானது. ஆனால், பரம்பிக்குளம் அணைக்கு அஸ்திவாரம் அமைப்பது தொடர்பாக 6 மாதங்களில் முடிவெடுத்தார் ஆனந்தராவ்.  அவர் இரு ஆண்டுகள்  அமெரிக்காவில் கற்ற, பாசனத் திட்டங்கள் தொடர்பான தொழில்நுட்ப அறிவுமும், அனுபவமுமே இதற்கு முக்கியக் காரணம்.

3 மடங்கு உயரத்துக்கு...

பரம்பிக்குளம் அணைக்கு  300 அடி ஆழத்திலிருந்து கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டது. அதாவது, அணையைப்போல 3 மடங்கு உயரத்துக்கு கான்கிரீட் அஸ்திவாரம் அமைக்கப்பட்டது. பரம்பிக்குளம் அணையின் `வீக் ஜோன்’ எனப்படும், பலவீனமான பகுதியில் மட்டுமே,  அஸ்திவாரத்தில்  கான்கிரீட் அமைக்கும் பணி தொடர்ந்து 400 நாட்கள் நடைபெற்றது. இதற்காக 24 சிமென்ட் கலவை இயந்திரங்கள் இரவுபகலாக வேலை செய்தன. எத்தனை டன் கான்கிரீட் கொட்டப்பட்டது என்பதை கற்பனை செய்து பார்ப்பதே கடினம்.

தகவல் தொழில்நுட்ப வசதிகள் இல்லாத அடர்ந்த வனப் பகுதியில், இரவு-பகலாக ஓய்வின்றி அணை கட்டுமானப் பணிகள் நடைபெற்றன. இந்த நிலையில், ஒரு ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்த சம்பவம்,  இன்ஜினீயர்களுக்கு  மரணப் பயத்தை ஏற்படுத்தியது.

பொதுவாக, பரம்பிக்குளம் அணைக்கட்டு பணி,  இரவு- பகல் என இரு ஷிப்ட்களாக 6 நாட்கள்  தீவிரமாக நடைபெறும்.  ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் மட்டும் விடுமுறை  தரப்படும். பொறியாளர்கள்  தங்க  தனித் தனியாக 10 ஷெட்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு ஷெட்டுக்கும் ஏறத்தாழ 100 அடி இடைவெளி  இருக்கும்.  ஒரு ஞாயிற்றுக்கிழமை இரவு 10 பொறியாளர்கள் ஒரே ஷெட்டில் தங்கியிருந்தனர்.

ஷெட்டுக்கு வெளியே நெருப்பு மூட்டி  அரட்டை அடித்துக் கொண்டிருந்தவர்கள், நள்ளிரவைத் தாண்டியதும் அதே ஷெட்டில் அயர்ந்து தூங்கிவிட்டனர். மறுநாள் காலை பணிக்கு வந்த தொழிலாளர்களின் கூச்சலைக்  கேட்டு,  பதறியடித்து எழுந்து  வெளியே வந்த பொறியாளர்கள்  கண்ட காட்சி, அவர்களை அதிர்ச்சியில் உறைய வைத்தது.

தகர சீட்டால் வேயப்பட்டிருந்த  9 ஷெட்டுகளையும் காட்டு யானைகள் அடித்து நொறுக்கி, தரைமட்டமாக்கியிருந்தன. நெருப்பு மூட்டப்பட்ட பகுதியில் இருந்த  ஷெட்டில் தங்கியதால் 10 பொறியாளர்கள் உயிர் தப்பினர்.

 செயற் பொறியாளர் சபதம்!

பரம்பிக்குளம் அணை கட்டும் பணியில்,  சென்னையைச் சேர்ந்த டி.எஸ்.கண்ணன் செயற் பொறியாளராகப் பணியாற்றினர்.  பணியில் கண்டிப்பானவர் என்று பெயர் பெற்ற  இவரின் கீழ் பணியாற்றும் அனைத்து பொறியாளர்களும் காலை 6 மணிக்கு பணி நடைபெறும் இடத்துக்குச் சென்றாக வேண்டும் என்பதை கடைசி வரை பின்பற்றினார்.

பரம்பிக்குளம் அணையின் கட்டுமானப் பணியில், டி.எஸ்.கண்ணனின் பார்வையிலிருந்து எதுவும் தப்பாது. பெற்றோருக்கு ஒரே பிள்ளையான இவர், அமராவதி அணை திட்டத்தில் இளநிலைப் பொறியாளராக பணியாற்றிவர். தனது 32-வது வயதில் பிஏபி திட்டத்தில் சேர்ந்தார்.

பரம்பிக்குளம் அணை கட்டுமானம் நடைபெறும் இடத்துக்கு  6 மாதங்களுக்கு ஒருமுறை வரும் கண்ணனின் தாய்,  அவரிடம் திருமணம் செய்து கொள்ள வலியுறுத்தி வந்தார். பரம்பிக்குளம் அணை  கட்டுமானத்தில் தீவிரமாக ஈடுபட்ட வந்த கண்ணன், தாயின் விருப்பத்தை  மறுத்து வந்தார்.

ஒருகட்டத்தில் அணையின் திறப்பு விழா முடிந்த பின்னரே, தனக்குத் திருமணம் என சபதமேற்றார்.

மகனின் முடிவை மாற்ற முடியாமல் அவரது தாய் வருத்தத்துடன்  சென்னை திரும்பினார். அணை கட்டி முடித்த பின்னர், தனது 42-வது வயதில்தான்  அவர் திருமணம் செய்து கொண்டார். சென்னையில் நடைபெற்ற அவரது திருமணத்தில், பிஏபி திட்டத்தில் பணியாற்றிய அனைவரும் பங்கேற்றனர். அணை கட்டுமானப்  பணிக்காக தனது திருமண வாழ்வை 10 ஆண்டுகள் தள்ளிப் போட்டவர் டி.எஸ்.கண்ணன்.  இவ்வாறு தமிழகப்  பொறியாளர்கள், தங்களது உயிரைப் பணயம் வைத்து, வாழ்வைத் தியாகம் செய்து கட்டப்பட்டது பரம்பிக்குளம் அணை” என்றார் நெகிழ்ச்சியுடன் முத்துசாமி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x