Published : 27 Mar 2018 07:35 PM
Last Updated : 27 Mar 2018 07:35 PM

இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியன் கொல்லப்பட்ட வழக்கு: கொள்ளையர்கள் நாதுராம், பத்தாராம் குண்டர் சட்டத்தில் கைது

கொளத்தூர் நகைக்கடை கொள்ளை, ராஜஸ்தானில் இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியன் கொல்லப்பட்ட வழக்கு சம்பந்தப்பட்ட வடமாநில கொள்ளையர்கள் நாதூராம், பத்தாராம் உட்பட 5 குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

சென்னை காவல் ஆணையர் உத்தரவின் பேரில், தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி திருவேற்காடு, கஸ்தூரிபாய் அவென்யூவை சேர்ந்த சக்திவேல் (எ) பிளேடு சக்திவேல் (37), ராஜஸ்தான், பாலி மாவட்டம், ஜெய்த்ரான் தாலுகாவை சேர்ந்த நாதூராம் (28) ஜோத்பூரைச் சேர்ந்த பக்தாராம் (23) அரும்பாக்கம், வள்ளுவர் நெடும்பாதையைச் சேர்ந்த ராதா (எ) ராதாகிருஷ்ணன் (31), பெரம்பூர், கன்னிகாபுரம் பகுதியை சேர்ந்த கருப்பா (எ) மணிகண்டன் (28) ஆகிய 5 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேற்படி, குற்றவாளிகள் 5 பேரும் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததால், சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர்கள் பரிந்துரை செய்ததன் பேரில், சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் 5 பேரையும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். அதன்பேரில் மேற்படி குற்றவாளிகள் 5 பேரும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதில் முக்கிய குற்றவாளிகள் நாதூராம், பக்தாராம் ஆகிய இருவரும் ராஜமங்கலம் காவல் நிலைய எல்லையில் உள்ள முகேஷ் என்பவருக்கு சொந்தமான நகைக்கடையின் மேற்கூரையை துளையிட்டு தங்க நகைகளைத் திருடி ராஜஸ்தானுக்கு தப்பிச் சென்றனர். பின்னர் அவர்களைப் பிடிக்க சென்னையிலிருந்து இன்ஸ்பெக்டர் தலைமையிலான தனிப்படையினர் தாக்கப்பட்டனர். இதில் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் சுட்டுக்கொல்லப்பட்டார். அவர் எப்படி கொல்லப்பட்டார் என்பது இதுவரை மர்மமாகவே உள்ளது. இந்த வழக்கில் நீண்ட நாட்கள் தேடலுக்குப் பின் நாதுராம், பக்தாராம் பிடிபட்டனர்.

மற்றொரு முக்கிய குற்றவாளியான ராதா (எ) ராதாகிருஷ்ணன் மீது 4 கொலை வழக்குகள் மற்றும் கொலை முயற்சி வழக்குகள் உட்பட 29 வழக்குகள் உள்ளன. இவர் ஏற்கெனவே மூன்று முறை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர். இவர் கேக் வெட்டி கொண்டாடி சிக்கிய ரவுடி பினுவுக்கு பரம எதிரி ஆவார். ஐந்தாவதாக உள்ள குற்றவாளி கருப்பா (எ) மணிகண்டன் மீது கொலை முயற்சி மற்றும் 3 வழிப்பறி வழக்குகள் உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x