Published : 06 Mar 2018 09:30 PM
Last Updated : 06 Mar 2018 09:30 PM

ரயிலிலிருந்து ஆற்றில் குதித்து தற்கொலை செய்த இளம்பெண்: தோழியுடன் பேசிய ஆடியோ ஆதாரத்தால் கணவர் கைது

கணவரின் கூடா நட்பாலும், வரதட்சணைக் கொடுமையாலும் ஓடும் ரயிலிலிருந்து ஆற்றில் குதித்து தற்கொலை செய்த இளம்பெண் விவகாரத்தில், கணவரின் தோழியுடன் பேசிய ஆடியோ ஆதாரத்தை வைத்து கணவரை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை ஜார்ஜ் டவுன் பகுதியைச் சேர்ந்தவர் கீதா. இவருக்கு ஜீவிதா என்ற மகளும், முரளி என்ற மகனும் உள்ளனர். ஜீவிதா வானகரம் பகுதியில் பிரபல தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்தார்.

ஜீவிதாவுக்கும் ஆவடியைச் சேர்ந்த முரளி என்பவரின் மகன் ஐ.டி.யில் பணிபுரியும் ரோஸ் என்பவருக்கும் கடந்த 2016-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது .

இந்நிலையில் கணவர் ரோஸ் தன்னுடன் மென் பொறியாளராக பணியாற்றும் வேறு ஒரு பெண்ணிடம் திடீர் தொடர்பு கொண்டு அந்தப் பெண்ணுடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார். ஜீவிதாவிற்கு இந்த விவரம் தெரிய வர இது பற்றி கணவரிடம் கேட்டுள்ளார்.

இது தவிர கணவர் ரோஸூம் அவர் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் வரதட்சணை கேட்டு கொடுமை செய்துள்ளனர். வரதட்சணைக் கொடுமை குறித்தும் கணவருக்கு வேறு பெண்ணிடம் கூடா நட்பு இருப்பது குறித்தும் ஜீவிதா தனது குடும்பத்தாரிடம் தெரிவித்துள்ளார்.

இரு குடும்பத்தாரும் சேர்ந்து சமரசம் செய்து வைத்தனர். ஆனாலும் கணவர் ரோஸ் தனது தொடர்பை விடவில்லை. ஒரு வயதுக் குழந்தை இருப்பதால் கணவன் செய்யும் கொடுமைகளை தாங்கிக் கொண்டிருந்த ஜுவிதாவை சமீபத்தில் அவரது கணவர் கடுமையாகப் பேசி தனது கூடா நட்பை விட வேண்டுமானால் லட்சக்கணக்கில் வரதட்சணை வாங்கி வரவேண்டும் என்று கூறி கடுமையாகப் பேசியுள்ளார்.

இதனால் மனம் உடைந்த ஜீவிதா கடந்த சனிக்கிழமை தாம்பரத்திலிருந்து கடற்கரை செல்ல மின்சார ரயிலில் சென்றபோது திடீரென ரயிலில் இருந்து ஜீவிதா அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

ஜீவிதாவின் தற்கொலையை சாதாரணமான தற்கொலை வழக்காக ரயில்வே போலீஸார் பதிவு செய்தனர். மகளை இழந்த பெற்றோர்களும், நண்பர்களும் ஜுவிதாவிற்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்தனர்.

ஜீவிதாவை தற்கொலைக்கு தூண்டியதாகவும், வரதட்சணைக் கொடுமை மற்றும் பெண் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் ரோஸ் மற்றும் அவரது குடும்பத்தார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜீவிதாவின் தாயார் புகார் அளித்திருந்தார்.

ஜீவிதா இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர் கணவரின் பெண் தோழியிடம் தனது கணவருடனான நட்பை விட்டுவிடும்படி கேட்கும் ஆடியோவை ஜீவிதாவின் தாயார் போலீஸாரிடம் அளித்தார்.

அந்த ஆடியோ உரையாடல் வருமாறு:

ஜீவிதா: ஹலோ

தோழி: ஹலோ நான் நேற்றே உங்கள் போனைப் பார்த்தேன், பிரார்த்தனை நேரம் என்பதால் எடுக்கவில்லை, சொல்லுங்கள் என்ன விஷயம்

ஜீவிதா: என் கணவருடன் ஞாயிற்றுக்கிழமை வெளியில் சென்றீர்களா? அவர் ஒத்துக்கொண்டார்.

தோழி: இல்லை அது வந்து

ஜீவிதா: எங்கு போனீர்கள்?

தோழி: சும்மா வெளியில் சென்றோம்.  அவ்வளவுதான்.

ஜீவிதா: ஏன் சென்றீர்கள், இது முறையா? நான் ஏற்கெனவே உங்களிடம் இது குறித்து நேர்மையாகப் பேசி இருக்கிறேன். இப்படி செய்யலாமா?

தோழி: நான் சும்மா நட்பின் அடிப்படையில் தான் சென்றேன். நண்பர் என்ற முறையில் சென்றேன்.

ஜீவிதா: நண்பருடன் செல்லுங்கள். என் கணவருடன் செல்லாதீர்கள். அவருக்கு திருமணம் ஆகிவிட்டது உங்களுக்கு தெரியும் அல்லவா?

தோழி: ம் ம்

ஜீவிதா: அவரது மனைவி நான், எங்களுக்கு ஒரு பெண் குழந்தை இருப்பதும் தெரியும் அல்லவா?

தோழி: ஆமாம்

ஜீவிதா: பிறகு எதற்கு அவருடன் தொடர்பு வைத்துக்கொள்கிறீர்கள். நான் எத்தனை முறை உங்களிடம் பேசி இருப்பேன்.

தோழி: நீங்கள் இதைப்பற்றி என்னிடம் பேசுவதை விட உங்கள் கணவரை கேளுங்கள்.

ஜீவிதா: அவரிடம் பல முறை பேசிவிட்டேன், அவர் கேட்பதாக இல்லை. நீங்கள் ஏன் அவருடன் வெளியில் செல்கிறீர்கள்.

தோழி: இது பற்றி உங்கள் கணவரிடம் பேசிக்கொள்ளுங்கள்.

மேற்கண்ட உரையாடல் அந்த ஆடியோவில் பதிவாகி உள்ளது. ஜீவிதா பல முறை பொறுமையாக கேட்டுக்கொண்டும் கணவரும், அவரது தோழியும் கூடா நட்பை விடவில்லை இதனால் ஜீவிதா மனமுடைந்துள்ளார். மறுபுறம் ரூ.20 லட்சம் வரதட்சணை கேட்டு கணவரின் பெற்றோர், உறவினர் கொடுமையையும் அவர் அனுபவித்துள்ளார்.

இதனால் மனம் உடைந்த ஜீவிதா தனது குழந்தையின் முதலாவது பிறந்த நாள் மார்ச் 5 அன்று வர உள்ள நிலையில் திடீரென தற்கொலை முடிவை மேற்கொண்டார். அவரது உடல் புதைக்கப்பட்ட அன்றுதான் அவரது குழந்தையின் முதலாவது பிறந்த நாள் என்ற சோகம் நடந்துள்ளது.

ஆடியோ ஆதாரத்துடன் தன்னை கொடுமைப்படுத்துவதாக ஜீவிதா பேசிய ஆடியோ ஆதாரத்தையும் இணைத்து பெற்றோர் அளித்த புகாரைப் பெற்ற ரயில்வே போலீஸார் இன்று மாலை ஜீவிதாவின் கணவர் ரோஸை கைது செய்தனர்.

வரதட்சணை கேட்டு கொடுமை, தற்கொலைக்கு தூண்டுதல், பெண் வன்கொடுமை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் ரோஸ் மீது வழக்குப் பதிவு செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x