Published : 27 Mar 2018 01:23 PM
Last Updated : 27 Mar 2018 01:23 PM

காவிரி பிரச்சினையை வைத்து கர்நாடகாவில் ஓட்டு வாங்கும் நிலை பாஜகவுக்கு இல்லை: தமிழிசை

காவிரி பிரச்சினையை வைத்து கர்நாடகாவில் ஓட்டு வாங்க வேண்டும் என்ற நிலைமை பாஜகவுக்கு கிடையாது. கர்நாடகாவில் பாஜக பலம் பொருந்திய கட்சியாக உள்ளது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

திருவாரூரில் இன்று (செவ்வாய்க்கிழமை) செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து  தமிழிசை பேசியதாவது:

“காவிரி விவகாரத்தில் தமிழக உரிமையை பெற்றுத் தருவதில் எந்தவொரு பின்னடைவும் இருக்காது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் அளித்த கெடு முடிய இன்னும் 3 நாட்கள் அவகாசம் உள்ளது. இந்த 3 தினங்களில் மத்திய அரசு நல்ல முடிவை அறிவிக்கும் என நம்பிக்கை உள்ளது.

காவிரி விவகாரத்தில் 4 மாநிலங்கள் ஈடுபட்டிருப்பதால், அம்மாநிலங்களுக்குள் நதிநீர் பங்கீடு, மொழி பிரச்சினைகளை கருத்தில்கொண்டு, எந்தவிதத்திலும் குழப்பம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக மத்திய அரசு பொறுமையாகக் கையாளுகிறது.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, இரு மாநிலங்களுக்குள் நதிநீரை பங்கிட்டுக் கொள்ளும்போது எந்தவொரு மாநிலமும் வஞ்சிக்கப்படாது. குறிப்பாக தமிழக அரசு வஞ்சிக்கப்படாது.

காவிரி விவகாரத்தில் மத்திய அரசு அமைப்பது எந்தக் குழுவாக இருந்தாலென்ன? தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்க வேண்டும் என்பதுதான் முக்கிய நோக்கம். இதனை பிற கட்சிகள் அரசியலாக்க வேண்டாம்.

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கத் தடையில்லை என தலைமை தேர்தல் ஆணையம் கூறியிருப்பது ஆரோக்கியமான விஷயம். காவிரி பிரச்சினையை வைத்து கர்நாடகாவில் ஓட்டு வாங்க வேண்டும் என்ற நிலைமை பாஜகவுக்கு கிடையாது. கர்நாடகாவில் பாஜக பலம் பொருந்திய கட்சியாக உள்ளது.

விவசாயிகளுக்கு பல்வேறு நல்ல திட்டங்கள் கொண்டு வரப்பட்டது பாஜக ஆட்சியில்தான். தமிழக விவசாயிகளுக்கு ரூ.2,700 கோடி பயிர்க்கடன் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், பாஜக ஆளும் மஹராஷ்டிராவுக்கே ரூ.1,700 கோடிதான் ஒதுக்கப்பட்டுள்ளது”

இவ்வாறு தமிழிசை தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x