Published : 13 Mar 2018 09:33 AM
Last Updated : 13 Mar 2018 09:33 AM

மார்ச் 23-ல் அரசின் ஓராண்டு சாதனை விழா: சென்னையில் முதல்வர் தலைமையில் நடக்கிறது - அமைச்சர் கடம்பூர் ராஜு தகவல்

தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க விழா, மார்ச் 23-ம் தேதி கலைவாணர் அரங்கில் நடைபெறும் என்று செய்தித் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்தார்.

பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்த அமைச்சர் கடம்பூர் ராஜு பேசியதாவது:

மறைந்த முதல்வர் ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நினைவு மண்டபம் அமைக்கவும், அவர் வாழ்ந்த வேதா இல்லத்தை நினைவில்லமாக மாற்றவும் ரூ.50 கோடியே 80 லட்சத்தில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. திருச்செந்தூரில் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் கட்டவும், சென்னை காமராஜர் சாலையில் ரூ.2 கோடியே 52 லட்சம் மதிப்பில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா வளைவு அமைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மக்கள் தொடர்பு பணி என்பது சவாலான பணி. இதில் அனைவரையும் ஒருங்கிணைத்து சென்று நன்மதிப்பை பெறுவது கடினமான செயல். செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் மழை, வெள்ளம், புயல், பண்டிகை காலங்களிலும் பணியாற்றி துறைக்கு பெருமை சேர்த்து வருகின்றனர்.

அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் எண்ணற்ற திட்டங்களையும் சாதனைகளையும் நலத்திட்ட உதவிகளையும் பொதுமக்களுக்கு கொண்டு செல்லும் வாய்ப்பு மக்கள் தொடர்பு அலுவலர்களுக்கு கிடைத்துள்ளது. வளர்ந்து வரும் நவீன விஞ்ஞான வளர்ச்சிக்கேற்ப ஊடகங்களுக்கு உடனுக்குடன் செய்திகள் வழங்க ஏதுவாக, அவர்களுக்கு மடிக்கணினி உள்ளிட்ட பல்வேறு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஊடக செய்தியாளர்களுக்கு பேருந்து பயண அட்டை, செய்தியாளர் அங்கீகார அட்டை, வாடகை குடியிருப்பு, சலுகை விலையில் வீட்டுமனைப் பட்டா உள்ளிட்டவை பெற்றுத்தருதல் போன்றவற்றுக்கான விதிமுறைகள் குறித்த அறிவுரையும் இந்த பயிற்சி வகுப்பில் வழங்கப்படுகிறது. அரசின் ஓராண்டு சாதனை குறித்த குறும்படம் தயாரிக்கப்பட்டு, திரையரங்குகளில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இவை முறையாக ஒளிபரப்பப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். ஒளிபரப்பாத திரையரங்குகள் மீது மாவட்ட ஆட்சியர் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, ‘‘அரசின் ஓராண்டு சாதனையை விளக்கும் வகையில் மார்ச் 23-ம் தேதி முதல்வர் தலைமையில் ஓராண்டு சாதனை விழா கலைவாணர் அரங்கில் நடக்கிறது. மக்களுக்கு அரசின் சாதனைகளை எடுத்துச் சொல்லும் வகையில் 6 குறும்படங்கள் வெளியிடப்படும். எம்ஜிஆர் நூற்றாண்டு இறுதி விழா பிரம்மாண்டமாக கொண்டாடப்படும்’’ என்றார்.

நிகழ்ச்சியில், செய்தித் துறை செயலாளர் இரா.வெங்கடேசன், இயக்குநர் சங்கர், கூடுதல் இயக்குநர்கள் எழிலழகன், ரவீந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x