Published : 02 Mar 2018 09:24 AM
Last Updated : 02 Mar 2018 09:24 AM

திராவிட இயக்க கொள்கைகளை பிரச்சாரம் செய்ய தமிழகம் முழுவதும் ஊராட்சிகளில் படிப்பகங்கள் அமைக்க வேண்டும்: திமுக நிர்வாகிகளுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

திராவிட கொள்கைகளை பிரச்சாரம் செய்ய ஊராட்சிகள்தோறும் படிப்பகங்கள் அமைக்க வேண்டும் என திமுகவினருக்கு அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஒவ்வொரு ஆண்டும் எனது பிறந்த நாளான மார்ச் 1-ம் தேதி திமுகவின் கடைக்கோடி தொண்டர்களின் வாழ்த்தை பெறுவது பெரும் உற்சாகத்தை அளிக்கிறது. கடந்த ஆண்டு எனது பிறந்தநாளின்போது சால்வைகள், மாலைகளுக்கு பதிலாக புத்தகங்களை பரிசளிக்குமாறு வேண்டுகோள் விடுத்தேன். அதை ஏற்று திமுகவினர் அளித்த புத்தகங்கள் மலைபோல குவிந்து வருகின்றன. அவற்றை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், தமிழர்கள் வாழும் அயல் நாடுகளிலும் உள்ள நூலகங்களுக்கு வழங்கும் அரிய வாய்ப்பினை பெற்று வருகிறேன்.

திமுகவின் மாவட்ட அலுவலகங்கள் அனைத்திலும் நூலகங்கள் அமைக்கப்பட்டு அதன் மூலம் மாணவர்கள், இளைஞர்கள் பயனடைந்து வருகின்றனர். அதுபோல அனைத்து ஊராட்சிகளிலும் படிப்பகங்களை உருவாக்கி அவற்றுக்கு பெரியார்,

அண்ணா, கருணாநிதி, க.அன்பழகன் ஆகிய தலைவர்களின் பெயர்களை சூட்டி பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ஏற்பாடுகளை செய்ய வேண்டும். எனக்கு பரிசாக வரும் புத்தகங்களை இந்தப் படிப்பகங்களுக்கு தொடர்ந்து வழங்குவேன். எனது சுற்றுப் பயணங்களின்போது இதுபோன்ற படிப்பகங்களை பார்வையிட வருவேன். எனது இந்த விருப்பத்தை திமுகவினர் நிறைவேற்றுவார்கள் என நம்புகிறேன்.

திராவிட இயக்கத்தின் கொள்கைகள்

சமூக நீதி, இனமானம், பகுத்தறிவு, மூட நம்பிக்கை ஒழிப்பு, ஜாதி, மத பேதம் நீக்குதல், சுயமரியாதை, மொழி உணர்வு, மதச்சார்பின்மை ஆகியவையே நூறாண்டு கடந்த திராவிட இயக்கத்தின் அடிப்படை கொள்கைகளாகும். திராவிட இயக்கத்தின் ஆணிவேர் கொள்கைகளுக்கு மத்திய, மாநில ஆட்சியாளர்களால் ஏற்பட்டுள்ள சவாலையும், நெருக்கடியையும் தகர்க்க நமது கொள்கைகளை பிரச்சாரம் செய்ய வேண்டும். அதற்கு திண்ணைப் பிரச்சாரமும், தெருமுனைக் கூட்டமும் பெரிதும் துணை நிற்கும்.

தெருமுனைகள், தேநீர் கடைகள், முடிதிருத்தம் நிலையங்கள், பேருந்து, ரயில் நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரங்கள்தான் திமுகவை அசைக்க முடியாத இயக்கமாக மாற்றியது. அதே வழியில், தொழில்நுட்ப வசதிகளையும் பயன்படுத்தி வீடு, வீடாக நாம் பிரச்சாரம் செய்ய வேண்டும். அதற்கு ஊராட்சிகள்தோறும் அமையவிருக்கும் நூலகங்களும், படிப்பகங்களும் பெரிதும் பயன்பட வேண்டும்.

தமிழக மக்கள் மனங்களில் திராவிட இயக்க கொள்கைகளையும், அதன் போராட்ட வரலாற்றையும், திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட சமூக மேம்பாட்டு திட்டங்களையும் பிரச்சாரம் செய்ய வேண்டும். இதையே எனது பிறந்த நாள் பரிசாக கருதுகிறேன்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித் துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x