Published : 04 Mar 2018 03:37 PM
Last Updated : 04 Mar 2018 03:37 PM

தீவிர ஆன்மிக நாட்டம், திருமணம் செய்ய விருப்பமின்மை: ஆயுதப்படை காவலர் தற்கொலையில் புதிய தகவல்

 தற்கொலை செய்த ஆயுதப்படை காவலர் அருண்ராஜ் மரணம் தொடர்பாக கூடுதல் தகவல் வெளியாகி உள்ளது. அவர் தீவிர ஆன்மிக ஈடுபாடு கொண்டிருந்ததும், திருமணம் செய்ய வீட்டில் வற்புறுத்தியதாலும் இந்த முடிவை மேற்கொண்டிருக்கலாம் என சக காவலர்கள் மத்தியில் தகவல் வெளியாகி உள்ளது.

இன்று அதிகாலையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஜெயலலிதா நினைவிடத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர் அருண்ராஜ் தனது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது தற்கொலை நிகழ்ந்த பத்து நிமிடத்தில் காவல் ஆணையர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்.

நாளை ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடு நடக்க உள்ள நிலையில் காவலர் ஒருவர் ஜெயலலிதா நினைவிடத்தில் தற்கொலை செய்து கொண்டதை சாதாரண நிகழ்வாக பார்க்க முடியாது, அவர் பணிச்சுமையால் இந்த முடிவை மேற்கொண்டிருந்தால் அது மேலும் சிக்கலை ஏற்படுத்தியிருக்கும்.

மேலும், அருண்ராஜின் தந்தையும் தனது மகன் இறப்பில் மர்மம் உள்ளது, அவர் நேற்றிரவு என்னிடம் போனில் பேசும்போது நன்றாக பேசினார் ஆகவே அவர் தற்கொலை செய்யும் மன நிலையில் இல்லை என்று கூறியுள்ளார். இந்நிலையில் அருண்ராஜ் குறித்து விசாரித்தபோது அவரைப்பற்றி பல தகவல்களை போலீஸார் தெரிவிக்கின்றனர்.

அவர் தீவிர ஆன்மிகத் தேடல் உள்ள நபர், தெய்வ நம்பிக்கையையும் தாண்டி எந்நேரமும் ஆன்மிக சிந்தனையிலேயே இருந்தவர் என்று கூறுகின்றனர். திருவல்லிக்கேணியில் தனது இரு நண்பர்களுடன் அறை எடுத்து தங்கி இருந்துள்ளார்.

தனது பணி நேரம் இடையே சில மணி நேரம் ஓய்வு கிடைத்தாலும் குளித்து காவி வேட்டிக்கட்டிக்கொண்டு சாமி படம் முன்பு அமர்ந்து தியானம் செய்வதும், வழிபடுவதுமாக அருண்ராஜ்  இருந்துள்ளார். சராசரி இளைஞர்களுக்கிருக்கும் எந்த விருப்பமும் இல்லாமல் இருந்துள்ளார். ஆண்ட்ராய்டு போன் கூட வைத்துக்கொள்ளாமல் சாதாரண செல்போனையே பயன்படுத்தி வந்துள்ளார்.

2013-ம் ஆண்டு காவல்துறையில் இணைந்த அருண்ராஜ் பணியில் இருக்கும் போதே 2015-ம் ஆண்டு ஜூலை மாதம் காணாமல் போய்விட்டார். பொதுவாக போலீஸ் வேலை பிடிக்காதவர்கள் ஓடிவிட்டால் அவர்களை விட்டோடிகள் என்று அழைப்பார்கள். அவர்களை மீண்டும் அழைத்து வந்து தண்டனை கொடுப்பார்கள்.

அதே போல் காணாமல் போன அருண்ராஜ் வீட்டுக்கும் வராததால் போலீஸார் பதற்றமடைந்து தனிப்படை அமைத்து தேடி வந்தனர். திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் அருண்ராஜ் படம் போட்டு நோட்டீஸும் ஒட்டப்பட்டது. இந்நிலையில் ஆன்மிக தேடலில் திருவண்ணாமலை சென்ற அருண்ராஜ் பின்னர் தனது தந்தைக்கு போன் செய்ய தந்தை அளித்த தகவலின் பேரில் போலீஸார் அழைத்து வந்தனர். சில வாரங்கள் கழித்து மீண்டும் பணிக்கு திரும்பினார்.

தற்போது ஜெயலலிதா நினைவிடத்தில் 16 பேர் கொண்ட குழு 4 பேர் ஒரு ஷிப்டுக்கு என 4 ஷிப்ட் டூட்டி பார்க்கின்றனர். ஒரு ஷிப்ட் பார்த்தால் அடுத்த ஷிப்ட் வருவதற்குள் 12 மணி நேரம் ஓய்வு கிடைக்கும். அந்த நேரமும் வெளியில் போகாமல் காவி உடை அணிந்து அறையிலேயே சாமி கும்பிட்டப்படி இருப்பாராம்.

இந்நிலையில் அவருக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் ஆசைப்பட்டுள்ளனர். ஆனால் 27 வயது ஆகியும் மறுத்து வந்ததால் பெற்றோர் இந்த முறை கட்டாயம் திருமணம் செய்து பார்த்தே ஆகவேண்டும் என்பதில் உறுதியாக இருந்துள்ளனர். நீ யாரையாவது விரும்பினாலும் சொல் எந்த மறுப்பும் சொல்லாமல் திருமணம் செய்து வைக்கிறோம், எங்களுக்கு நீ திருமணம் செய்தால் போதும் என்று பெற்றோர் தரப்பில் கூறியுள்ளனர்.

ஆனால் திருமணம் வேப்பங்காயாக அருண்ராஜுக்கு கசந்துள்ளது. தனது நண்பர்களிடம் வீட்டில் அப்பா, அம்மா திருமணம் செய்துகொள்ளச்சொல்லி வற்புறுத்துகிறார்கள் என்று வருத்தப்பட்டு கூறியுள்ளார். நல்ல வேலை பெற்றோருக்கு அந்த ஆசை இருக்காதா? என்று நண்பர்களும் கேட்டுள்ளனர்.

இந்த நிலையில் அருண்ராஜின் தற்கொலை அவருக்கு திருமண வாழ்வில் ஈடுபாடில்லாமல் எடுத்த முடிவா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். எதுவும் அளவுக்கு மிஞ்சினால் நஞ்சு என்பது அருண்ராஜ் வாழ்க்கையிலும் உண்மையாகி விட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x