Published : 16 Mar 2018 08:18 AM
Last Updated : 16 Mar 2018 08:18 AM

வருவாய் பற்றாக்குறை ரூ.17,490.58 கோடி, நிதிப் பற்றாக்குறை ரூ.44,480.73 கோடி: தமிழகத்தின் மொத்த கடன் நிலுவை ரூ.3.55 லட்சம் கோடி- பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தகவல்

வரும் நிதியாண்டில் தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை ரூ.17,490.58 கோடி, நிதிப் பற்றாக்குறை ரூ.44,480.73 கோடியாக இருக்கும். நிகர நிலுவைக் கடன்கள் ரூ.3,55,844.84 கோடியாக இருக்கும். இதுதவிர, ரூ.43,962.48 கோடி நிகரக் கடன் பெற உத்தேசிக்கப்பட்டுள்ளது என்று பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

பட்ஜெட் உரையில் தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:

தேசிய, மாநில அளவிலான பொருளாதார தேக்கநிலை மாறி, மிதமான அளவில் பொருளாதாரம் வளர்ந்து வருவதால் மாநிலத்தின் சொந்த வரி வருவாய் வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாநில ஆயத் தீர்வைகள் மூலம் 2017-18ல் ரூ.6,488.41 கோடி, 2018-19ல் ரூ.6,997.83 கோடி வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிலத்தின் வழிகாட்டி மதிப்பு குறைக்கப்பட்டு, பத்திரப் பதிவு கட்டணம் அதிகரிக்கப்பட்டதால் முத்திரைத் தாள், பத்திரப் பதிவு கட்டணம் மூலம் கிடைக்கும் வருவாய் அதிகரித்துள்ளது. அதன்படி, 2017-18ல் ரூ.9,806.97 கோடி, 2018-19ல் ரூ.10,935.67 கோடி வருவாய் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

வாகனங்கள் மீதான வரி வருவாய் ரூ.6,211.74 கோடியாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

2017-18ல் தமிழகத்தின் மொத்த வருவாய் வரவுகள் ரூ.1,55,824.70 கோடி, வருவாய் செலவினங்கள் ரூ.1,74,194.97 கோடியாக இருக்கும் என கணிக்கப்படுகிறது.

2018-19ல் சம்பளம், படிகளுக்காக ரூ.52,171.18 கோடியும், ஓய்வூதியம், ஓய்வுகாலப் பயன்களுக்காக ரூ.25,362.20 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் சொந்த வரி வருவாய் 2017-18ல் ரூ.98,693 கோடி. இது 2018-19ல் ரூ.1,12,616 கோடியாக அதிகரிக்கும். இது 2019-20ல் 11.97 சதவீதமாக, 2020-21ல் 11.80 சதவீதமாக வளர்ச்சி பெறும். 2018-19ல் சொந்த வரியல்லாத வருவாய் ரூ.11,301 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

வருவாய் பற்றாக்குறை

எனவே, 2018-19ல் மொத்த வருவாய் வரவுகள் ரூ.1,76,251.48 கோடி, மொத்த வருவாய் செலவினங்கள் ரூ.1,93,742.06 கோடியாக இருக்கும். இதனால், வருவாய் பற்றாக்குறை ரூ.17,490.58 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

நிதிப் பற்றாக்குறை

2018-19ல் மூலதனச் செலவினம் ரூ.28,282.76 கோடி, நிதிப் பற்றாக்குறை ரூ.44,480.73 கோடியாக இருக்கும். இது மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் 2.79 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

கடன் ரூ.3.55 லட்சம் கோடி

அனுமதிக்கப்பட்ட நிகரக் கடன்கள் ரூ.47,887.59 கோடியாக இருப்பினும், 2018-19ல் ரூ.43,962.48 கோடி மட்டுமே நிகரக் கடன் பெற உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதனால் 2019 மார்ச் 31-ம் தேதியன்று நிகர நிலுவைக் கடன்கள் ரூ.3,55,844.84 கோடியாக இருக்கும். இது மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் 22.29 சதவீதம் என்பதால், அனுமதிக்கப்பட்ட 25 சதவீதம் அளவுக்கு உட்பட்டே கடன் அளவு இருக்கும்.

8.03 சதவீத வளர்ச்சி

2018-19ல் வட்டிச் செலவு ரூ.29,624 கோடி. இது மொத்த வருவாய் செலவுகளில் 15.29 சதவீதம், மொத்த வருவாய் வரவுகளில் 16.81 சதவீதம். இது அடுத்தடுத்த ஆண்டுகளில் 17.92, 17.52 சதவீதம் அதிகரிக்கும்.

2012-13ல் தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி 4.85 சதவீதமாக இருந்தது. இது 2017-18ல் 8.03 சதவீதமாக அதிகரித்துள்ளது.

நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் மக்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஆனால், நிதிநிலையில் தொடர்ந்து சிரமமான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்த நெருக்கடியான சூழ்நிலையிலும் உதய் திட்டம், ஊதிய திருத்தங்களை தமிழக அரசு செயல்படுத்தியுள்ளது.

கருமேகங்களுக்கு இடையே தென்படும் வெள்ளிக்கீற்று மின்னல் போல பொருளாதார வளர்ச்சிக்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளன. இதனால் நிதி ஆதாரங்கள் மேம்பட்டு, வருவாய் பற்றாக்குறை, நிதிப் பற்றாக்குறை படிப்படியாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் ‘வளமான தமிழகம்’ என்ற குறிக்கோளை எட்ட முடியும்.

இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x