Last Updated : 10 Mar, 2018 11:38 AM

 

Published : 10 Mar 2018 11:38 AM
Last Updated : 10 Mar 2018 11:38 AM

எங்கிருந்தோ வந்தான்... ஆறோடு ஏழாய் சேர்ந்தான்...

ரியாக 28 ஆண்டுகளுக்கு முன் ஒருநாள்.. அந்தி சாயும் வேளை...

திருச்சி அருகே முத்தரசநல்லூரில் இரு கரைகளையும் தழுவிக்கொண்டு காவிரி பாய்ந்தோடிக் கொண்டிருந்தது. காவிரியில் குளித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார் கிருஷ்ணன் பிள்ளை.

அப்போது முத்தரசநல்லூர் ரயில் நிலையத்தில், யாருமில்லாமல் தனி யாக நின்று அழுது கொண்டிருந்தான் 3 வயது சிறுவன். இருள் சூழ்ந்து கொண்டிருந்ததால், அவனை அப்படியே விட்டுச் செல்ல அவருக்கு மனமில்லை. அருகில் சென்று விசாரித்தவருக்கு பேரதிர்ச்சி.

அச்சிறுவனுக்கு காதும் கேட்கவில் லை. வாய் பேசவும் முடியவில்லை. என்ன செய்வதென புரியாமல் தவித்த கிருஷ்ணன்பிள்ளை, குழந்தையைத் தேடி யாராவது வருவார்களா என காத்திருந்தார். மணக்கணக்கில் நேரம் ஆனதே தவிர, யாரும் வரவில்லை. வேறு வழியின்றி சிறுவனை தூக்கிக் கொண்டு வீடு வந்தார்.

அதன்பின் நடந்தவற்றை விளக்குகிறார் அவரது மனைவி சரோஜா. முத்தரசநல்லூர்ல பல வருஷமா டீக்கடை, ஓட்டல் நடத்திட்டு வர்றோம். அன்னைக்கு சாயங்காலம் ஆத்துக்கு போனவரு, ரொம்ப லேட்டா ஒரு குழந்தையோட திரும்பி வந்தாரு. குழந்தை யோட டவுசரு, சட்டை, கையில கட்டி இருந்த வாட்ச் எல்லாம் பார்த்தப்ப, பெரியவீட்டு பிள்ளையாட்டம் இருந்துச்சு. “எங்கருந்துப்பா வர்றே”ன்னு அவன்கிட்ட சைகையில கேட்டோம். ஏரோபிளேன் ஓட்டுற மாதிரி கையை மேலதூக்கி சைகை காட்டினான். எங்களுக்கு ஒன்னும் புரியல.

அப்பவெல்லாம் சிலோன்-ல (இலங்கை) இருந்து கூட்டம், கூட்டமா ஜனங்க வருவாங்க. அப்படி வந்தவங்களில யாராவது இந்த குழந்தையை தவறவிட்டிருக்கலாம்னு நினைச்சோம். குழந்தைய தொலைச்சிருந்தா.. பெத்தவங்க மனசு என்னா பாடுபடும்.. அதுனால அடுத்த 2, 3 நாளு என் வீட்டுக்காரு அந்த குழந்தையோட போய் ஸ்டேசன்லயே காத்துக்கிடந்தாரு... யாரும் தேடி வரல.. ஒருநாள் வேகமா வந்தவரு.. “நமக்கு ஏற்கெனவே 3 மகன், 3 மகள் இருக்குல்ல. அதுல 4-வது மகனா சேர்த்து இவனை வளர்த்துரு”ன்னு கையில கொடுத்திட்டு கடைக்கு போயிட்டாரு.

அந்த குழந்தைக்கு கார்த்திக்னு பேரு வைச்சோம். ஆரம்பத்துல ரொம்ப அடம் பிடிச்சான். அவனோட சைகையை புரிஞ்சு, பதில் பேசுறதுக்கு நாங்களும் கஷ்டப்பட்டோம். கொஞ் சம் வளர்ந்ததும், பள்ளிக்கூடத்துல சேர்த்துவிட்டோம். ஆனா, அவனால அங்க இருக்க முடியல. வீட்டுக்கே ஓடி வந்திடுவான். வேற வழியில்லாம, என் வீட்டுக்காரு ஓட்டலுக்கு போகும்போது அவனையும் சேர்த்து கூடவே கூட்டிட்டு போக ஆரம்பிச்சாரு.. கடையிலயே வளர ஆரம்பிச்சான்.

1994-ல் என் வீட்டுக்காரர் இறந்துட்டார். அதுனால மூத்த மகன் சீனிவாசன், அந்த கடையை நடத்த ஆரம்பிச்சான். 2 மாசத்துக்கு முன்னாடி திடீர்னு அவனும் மாரடைப்பால இறந்துட்டான். திக்குதெசை தெரியாம தடுமாறி போய்ட்டோம். கடையை திறக்க முடியல. கஷ்டம் நெருக்க ஆரம்பிச்சு.. அப்பதான், கார்த்திக் என்கிட்ட வந்து “அம்மா.. கடையை திறங்க. நான் நடத்துறேன்”ன்னு சைகையில சொன்னான். அவன்மேல நம்பிக்கை இருந்துச்சு. அதுனால சரின்னு சொல்லிட்டேன்.

இதே ஊர்ல இருக்க மக அமுதா, அவரோட கணவரின் உதவியோட, கார்த்திக் இப்போ அந்த கடையை நடத்திக்கிட்டு வர்றான். டீ, புரோட்டான்னு எல்லா வேலையும் பார்த்துகிறான். சாப்பிட வர்றவங்ககிட்ட கணக்கா காசும் வாங்கிக்கிறான்.

இதுல வர்ற வருமானம்.. நானும், கார்த்திக்கும் வாழ மட்டுமில்ல., இறந்துபோன மூத்த மகன் சீனி குடும்பத்துக்கும் உதவியா இருக்குது. பெத்த பிள்ளையைப் போல, கார்த்திக்கும் என்மேல ரொம்ப பாசமா இருக்கான். 31 வயசு ஆவுது. எப்படியாவது ஒரு கல்யாணத்தை பண்ணி வைச்சிரலாம்னு பார்க்கிறேன். ஒத்துக்க மாட்டாங்கேங்கிறான்” என்றார் சரோஜா.

பக்கத்தில் நின்றிருந்த கார்த்திக்கிடம், “கல்யாணம் பண்ணிக்க வேண்டியதுதானே?” என சைகையில் பேசினோம். அதற்கு அவர், இரு கைகளையும் வேகமாக குறுக்கும், நெடுக்குமாக அசைத்தபடி, “வேண்டாம், வேண்டாம்” என்றார்.

காரணம் கேட்டபோது, அருகிலிருந்த சரோஜாவை கட்டியணைத்துக் கொண்டு, “எங்க அம்மாவை நான் காப்பாற்ற வேண்டும். கடைசி வரை அவருக்கு பக்கத்தில் இருந்தால் அதுவே போதும்” என்று சைகையில் கூறியபோது தாய், மகன் இருவரின் கண்களில் இருந்தும் கண் ணீர் பெருக்கெடுத்தது.

பெற்ற குழந்தைகளே, பெற்றோரை துரத்திவிடும் இந்த காலத்தில், தவறிவந்தபோது தத்தெடுத்து வளர்க்கப்பட்ட, அதுவும் மாற்றுத்திறன் கொண்ட ஒரு குழந்தை, இன்று அக்குடும்பத்தையே காப்பாற்றும் ஆணி வேராக மாறியிருக்கிறது. ஆச்சரியத்துடன் பார்த்துவிட்டு, புறப்பட்டோம்.

தூரத்தில் எங்கோ பாடல் கேட்டது...

“அன்பு கொண்ட நெஞ்சத்துக்கு ஆயுசு நூறு...”

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x