Published : 13 Mar 2018 05:23 PM
Last Updated : 13 Mar 2018 05:23 PM

சென்னையில் அடுத்தடுத்த கடைகளில் ரூ.8 லட்சம் மதிப்புள்ள துணி திருட்டு: பக்கத்துக் கடையின் சிசிடிவி பதிவையும் தூக்கிச் சென்ற சாமர்த்தியம்

 சென்னையில் குற்றம் இழைப்பவர்கள் கண்காணிப்பு கேமரா மூலம் பிடிபடுவதை அறிந்து வைத்துள்ள திருடர்கள் தற்போது பெரவள்ளூரில் துணிக்கடையில் ரூ.8 லட்சம் மதிப்புள்ள துணிகளைத் திருடிவிட்டு அந்த இடத்தில் உள்ள கடைகள் பக்கத்துக் கடைகளில் உள்ள பதிவுகளையும் தூக்கிச் சென்ற சுவாரஸ்யம் நடந்துள்ளது.

சென்னை பெரவள்ளூரில் கோபிநாத் என்பவருக்கு சொந்தமான பிரபல பிராண்டட் நிறுவனமான டெர்பி துணிக்கடை உள்ளது. இன்று காலை கடையின் ஊழியர் கார்த்திக் கடையைத் திறக்க வந்துள்ளார். அப்போது கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டு கடையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த மொத்த துணிகள் இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக கடையின் உரிமையாளர் கோபிநாத்திடம் கார்த்திக் தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாக கோபிநாத் திருவிக நகர் போலீஸாரிடம் புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் ஜவுளிக்கடையில் இருந்த விலை உயர்ந்த சுமார் ரூ.8 லட்சம் மதிப்புள்ள துணிகளை திருடிச் சென்றது தெரியவந்தது. வழக்கம் போல் போலீஸார் திருட்டு நடந்த இடத்தில் சிசிடிவி கேமரா பதிவை எடுக்கச் சென்றனர். திருடர்கள் சிசிடிவி கேமரா பதிவுகள் இருக்கும் ஹார்ட் டிஸ்க்கையும் சேர்த்து திருடிச் சென்றது அப்போதுதான் தெரிந்தது.

சரி விடுங்கள் பக்கத்துக்கடையில் கேமரா இருக்கிறதா என்று போலீஸார் கேட்டுள்ளனர். இருக்கிறது சார் கோபிநாத் சொல்ல வாருங்கள் அதை போட்டு பார்ப்போம் என்று செல்ல அந்த நேரம் பக்கத்துக்கடைக்காரரும் ஓடி வந்துள்ளார். சார் என் கடையின் ஷட்டரும் உடைக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். உடனடியாக அங்கு சென்று போலீஸார் பார்த்தபோது அந்தக்கடையில் எந்தப்பொருளும் திருட்டு போகவில்லை.

வேறு என்னதான் திருடிச்சென்றார்கள் சரி இங்குள்ள சிசிடிவி கேமராவையாவது பார்ப்போம் என்று போலீஸார் கேட்டபோது அதை எடுக்கச்சென்ற பக்கத்துக்கடையின் உரிமையாளர், ''சார் சிசிடிவி ஹார்டு டிஸ்க்கை காணவில்லை, திருடர்கள் அதைத்தான் திருடிக்கொண்டு சென்றுள்ளார்கள் சார்'' என்று அலறியுள்ளார்.

திருடிய கடையில் மட்டுமல்ல பக்கத்துக் கடையில் உள்ள சிசிடிவி கேமராகூட தங்களை காட்டிக் கொடுத்துவிடும் என்று எடுத்துச் சென்றுள்ளனர். போகும்போது கையில் அகப்பட்ட சில துணிகளை மட்டும் எடுத்துச் சென்றுள்ளனர். திருடுவது மட்டுமல்ல, திருட்டை எதை வைத்து கண்டுபிடிக்கிறார்கள் என்பதிலும் திருடும் நபர்கள் புத்திசாலித்தனமாக கண்காணித்து கேமரா பதிவை திருடிச்சென்றுள்ளனர். திருட்டு குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தும் திருவிக நகர் போலீஸார் வேறு எங்காவது கண்காணிப்பு கேமரா பதிவு உள்ளதா என்றும் சோதனை நடத்தி வருகிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x