Published : 27 Mar 2018 09:58 AM
Last Updated : 27 Mar 2018 09:58 AM

மாமல்லபுரம் சிற்பங்களை பார்த்து ரசித்த ஜெர்மன் அதிபர்: உள்ளூர் கடைகள் மூடல்; போலீஸார் பலத்த பாதுகாப்பு

ஜெர்மனி அதிபர் ஃபிராங்க் வால்டர் ஸ்டைன்மையர், தனது குடும்பத்தினருடன் மாமல்லபுரத்தில் உள்ள சிற்பங்களைக் கண்டுகளித்தார். பாதுகாப்பு காரணமாக உள்ளூர் கடைகள் மூடப் பட்டன.

காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரத்தில் உள்ள சிற்பங்கள் பல்லவ மன்னர்களின் கல் சிற்பக்கலையை உலகுக்கு பறைசாற்றி வருகிறது. இதனால், சர்வதேச சுற்றுலாத் தலமாக மாமல்லபுரம் விளங்குகிறது.

இந்நிலையில், இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜெர்மன் அதிபர் ஃபிராங்க் வால்டர் ஸ்டைன்மையர், மாமல்லபுரம் சுற்றுலாத் தலங்களை நேரில் கண்டு ரசிக்க விரும்பினார்.

இதையடுத்து, அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. மாமல்லபுரம் நகரப் பகுதியில் மாவட்ட எஸ்பி.சந்தோஷ் ஹதிமானி தலைமையிலான போலீஸார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டனர். அதிபர் வருகையின்போது, சுற்றுலாத் தலங்களுக்கு அருகில் உள்ள கடைகளைத் திறக்கக் கூடாது என வியாபாரிகள் மற்றும் உரிமையாளர்களுக்கு உத்தர விடப்பட்டது.

அதிபர் ஃபிராங்க் வால்டர் ஸ்டைன்மையர், அவரது மனைவி எல்கே புடன்பென்டர், மகள் மெரிக் ஸ்டைன்மையர் ஆகியோருடன் நேற்று காலை 9:30 மணிக்கு மாமல்லபுரத்துக்கு வந்தார்.

முதலில் கடற்கரையில் உள்ள குடவரைக் கோயிலைக் கண்டு ரசித்தனர். பின்னர், அர்ஜூனன் தபசு சிற்பம் மற்றும் வெண்ணெய் உருண்டை பாறை ஆகியவற்றை கண்டு ரசித்தனர். சிற்பங்களுக்கு அருகில் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

பின்னர், அங்கிருந்து கார் மூலம் சென்னைக்குப் புறப்பட்டு சென்றனர். இவர்களுடன் மாவட்ட ஆட்சியர் பொன்னையா மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

ஜெர்மன் அதிபர் வருகையின்போது மற்ற சுற்றுலாப் பயணிகளுக்கு அப்பகுதியில் செல்ல தடை விதிக்கப்பட்டது. இதனால் பயணிகள் அதிருப்தி தெரிவித்தனர். மேலும், காலை நேர வியாபாரம் பாதிக்கப்பட்டதாக உள் ளூர் வியாபாரிகள் வருத்தம் தெரிவித்தனர்.

இதேபோல், நகரப் பகுதிக்குள் ளும் வாகனங்கள் அனுமதிக்கப்படாததால் பேருந்து பயணி கள் அவதிப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x