Last Updated : 04 Mar, 2018 10:43 AM

 

Published : 04 Mar 2018 10:43 AM
Last Updated : 04 Mar 2018 10:43 AM

தஞ்சை பெரிய கோயிலில் இருந்து மேலும் பல சிலைகள் மாயமானது அம்பலம்: பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புடையவை

சோழப் பேரரசன் முதலாம் ராஜராஜன், அவரது பட்டத்தரசி உலகமாதேவியின் ஐம்பொன் சிலைகள் (பிரதிமைகள்) மாயமானது தொடர்பான முதல்கட்ட விசாரணையில் இறங்கிய தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரின் விசாரணையில், உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலில் இருந்து, மேலும் பல விலைமதிப்பில்லா சிலைகள் மாயமாகியுள்ளது தெரியவந்துள்ளது.

பெரிய கோயில் கட்டப்பட்டதன் ஆயிரமாவது ஆண்டு விழாவை முன்னிட்டு, கடந்த திமுக ஆட்சியில் அப்போதைய முதல்வர் கருணாநிதி, தொல்லியல் அறிஞர் ஆர்.நாகசாமி, சோழர் வரலாற்று அறிஞர் குடவாயில் பாலசுப்பிரமணியன், அன்றைய அமைச்சர் தங்கம்.தென்னரசு, மூத்த ஐஏஎஸ் அலுவலர் வி.இறையன்பு ஆகியோரைக் கொண்டு, களவுபோன ராஜராஜன், உலகமாதேவி சிலைகளை மீட்க நடவடிக்கை எடுத்தார்.

அக்குழு, கோயில் கல்வெட்டுகள், வரலாற்று செப்பேடுகளை ஆய்வு செய்து, மேற்கண்ட விவரங்களை குஜராத்தில் உள்ள புகழ்பெற்ற தனியார் அருங்காட்சியகத்தில் உள்ள ராஜராஜன், உலகமாதேவி சிலைகளுடன் ஒப்பீடு செய்ததில், அந்த சிலைகள், பெரிய கோயிலை சார்ந்தவை என்பது தெரியவந்தது.

அவ்வப்போது, தஞ்சாவூர் பெரிய கோயிலில் இருந்து காணாமல்போன சிலைகளை மீட்பது குறித்த பேச்சுகள் இருந்தாலும், இதுவரையில் இங்கிருந்து காணாமல்போன எந்த ஒரு சிலை குறித்தும், எந்த காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்படவில்லை என்பது, தற்போது நடந்த விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் விசாரணையின்போது, இங்குள்ள சில சிலைகள் தற்காலத்தை சேர்ந்தது என்றும், பல சிலைகள் ராஜராஜன் காலத்தை சேர்ந்தது அல்ல என்பதையும் ஒத்துக்கொண்டனர். அப்படியென்றால், அசல் சிலைகள் எங்கே என்ற கேள்விக்கு, கோயில் அதிகாரிகளிடம் உரிய பதில் இல்லை என்கின்றனர் போலீஸார்.

பெரிய கோயில் மகாமண்டபத்தில் உள்ள ஒரு அற்புதமான ஐம்பொன் சிலை, பேரரசன் ராஜராஜன் சோழன் சிலை என்று பெயரிடப்பட்டிருந்தது. அதிர்ச்சிக்குள்ளான போலீஸார், அதை ஆய்வு செய்தபோது, அது ராஜேந்திர சோழனின் சிலை என்றும், அதன் மேல், கோயில் அலுவலர்கள் ஸ்டிக்கர் எழுதி ஒட்டியிருந்ததும் தெரியவந்தது.

அதே, மகாமண்டபத்தில் இருந்த சிலைகள் ஒரு சிலவற்றில், திருவாட்சி மற்றும் பீடம் ஆகியவை களவாடப்பட்டிருந்தன. கோயில் கல்வெட்டுகளும், செப்பேடுகளும், ராஜராஜன் சோழன் காலத்தில், 66 உலோகத் திருமேனிகள், பெரிய கோயிலுக்கு கொடையாக அளிக்கப்பட்டதாக கூறுகின்றன. அவைகளில் பெரும்பாலானவை இன்று கோயிலில் இல்லை.

அவற்றுள் முக்கியமானவை, தங்கத்தாலான கொள்கைத்தேவர், ஷேத்திரபாலகர், ஐம்பொன்னாலான மிகப்பெரும் அர்த்தநாரீஸ்வரர், 2 உமாமகேஸ்வரி சிலைகள், ராஜராஜனின் தந்தை சுந்தரசோழர், தாய் வானவன்மாதேவி சிலைகள் மற்றும் ராஜராஜனின் சகோதரி குந்தவை நாச்சியார் வழங்கிய 4 ஐம்பொன் சிலைகள். இவைகளும் களவாடப்பட்டது தெரியவந்துள்ளது. இவற்றின் மதிப்பு பல ஆயிரம் கோடி ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x