Published : 25 Mar 2018 10:32 AM
Last Updated : 25 Mar 2018 10:32 AM

நாட்டின் பொருளாதாரம் பாதிப்படைவதைத் தடுக்க வணிக நிறுவன வழக்குகளை விரைந்து விசாரிக்க வேண்டும்: உச்ச நீதிமன்ற நீதிபதி உதய் உமேஷ் லலித் அறிவுறுத்தல்

நாட்டின் பொருளாதாரம் பாதிப்படையாமல் இருக்க வணிக நிறுவனங்கள் தொடர்பான வழக்குகளை விரைவாக விசாரிக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற நீதிபதி உதய் உமேஷ் லலித் கேட்டுக்கொண்டுள்ளார்.

மதுரையில் உள்ள தமிழ்நாடு நீதித்துறை பயிற்சி மையத்தில், ‘வணிக சிக்கல்களுக்கான தேசிய கருத்தரங்கு’ நேற்று நடைபெற்றது. இதனை உச்ச நீதிமன்ற நீதிபதி உதய் உமேஷ் லலித் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது: வணிக நிறுவனங்கள் தொடர்பான வழக்குகள் உடனுக்குடன் தீர்த்து வைக்கப்பட வேண்டும். அந்த வழக்குகளை விசாரிப்பதில் ஏற்படும் தாமதத்துக்கான காரணங்கள், குறைகள், பிரச்சினைகள், சட்டத்துறையில் உள்ள சறுக்கல்களை கண்டறிந்து அவற்றினை களைவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் நாட்டின் பொருளாதாரத்தில் கடும் பாதிப்பு ஏற்படும் என்றார்.

சிறப்பு நீதிமன்றம்

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பேசியதாவது: ஒரு நாட்டின் சமூக பொருளாதார முன்னேற்றத்துக்கு அந்நாட்டில் வணிக நிறுவனங்களின் வளர்ச்சி சீராக இருக்க வேண்டியது அவசியம். நம் நாட்டில் வணிக நிறுவனங்களின் சிக்கல்களை தீர்ப்பது தொடர்பான வழக்குகள் அதிக அளவில் நிலுவையில் உள்ளன. ஒரு நிறுவனம் தொடர்பான வழக்கை விசாரித்து முடிக்க குறைந்தபட்சம் 4 ஆண்டுகள் வரை ஆகிறது. இந்த சமயத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனம் கடும் பொருளாதார சிக்கல்களை சந்திக்க நேரிடுகிறது.

இந்த தாமதம் காரணமாக இந்தியாவில் முதலீடு செய்ய வெளிநாட்டினர் தயங்குகின்றனர். துபாய், சிங்கப்பூர் போன்ற நாடுகளில் வணிக நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு வெளிநாடுகளைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் ஆஜராக அனுமதிக்கப்படுகின்றனர். இதுபோன்ற வசதி நம் நாட்டில் இல்லை.

எனவே, நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வணிக நிறுவனங்கள் தொடர்புடைய வழக்குகளை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி விரைவில் விசாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

முன்னதாக உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.மணிக்குமார் வரவேற்றார். நீதிபதி ஹூலுவாடி ரமேஷ், அட்வகேட் ஜெனரல் விஜய்நாராயண் ஆகியோர் பேசினர். உயர் நீதிமன்ற பதிவாளர் ஆர்.சக்திவேல், தமிழ்நாடு நீதித்துறை அகாடமி இயக்குநர் ஜி.சந்திரசேகரன், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் கு.சாமிதுரை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நீதிபதி டி.எஸ்.சிவஞானம் நன்றி கூறினார். இன்றும் கருத்தரங்கு நடைபெறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x