Published : 25 Mar 2018 10:14 AM
Last Updated : 25 Mar 2018 10:14 AM

தலைமன்னார் முதல் தனுஷ்கோடி வரையிலான பாக். ஜலசந்தியை 12 மணி நேரத்தில் நீந்தி கடந்த சென்னை மாணவர்

சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ராஜ ஈஸ்வர பிரபு தலைமன்னார் முதல் தனுஷ்கோடி வரையிலான பாக். ஜலசந்தி கடலை 12 மணி நேரத்தில் நீந்தி கடந்து சாதனை படைத்தார்.

தமிழகத்தையும், இலங்கையையும் பிரிக்கும் நீரிணை பாக். ஜலசந்தி கடற்பகுதி ஆகும். ராமேசுவரம் தீவும், அதனைத் தொடர்ந்துள்ள மணல் தீட்டுகளான ஆதாம் பாலமும் பாக். ஜலசந்தி கடற்பகுதியை மன்னார் வளைகுடாவில் இருந்தும் பிரிக்கிறது. இந்தியாவிலேயே மிகவும் ஆழம் குறைந்த, அதே சமயம் பாறைகளும், ஆபத்தான ஜெல்லி மீன்களும் நிறைந்த கடற்பகுதியும் கொண்டது.

பாக். ஜலசந்தி கடற்பகுதியை இலங்கை வல்வெட்டித்துறையைச் சேர்ந்த நவரத்தினசாமி என்ற தமிழர் முதன்முதலாக 1954-ம் ஆண்டு நீந்தி கடந்தார். தொடர்ந்து 5.4.1966-ல் கொல்கத்தாவை சேர்ந்த மிகிர்சென் என்பவர் பாக். ஜலசந்தியை தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரையிலும் நீந்தி கடந்தார்.

வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் குமார் ஆனந்தன். நீச்சல் வீரரான இவர் 1971-ல் தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடிக்கு நீந்தி வந்து மீண்டும் தலைமன்னாருக்கு 51 மணி நேரத்தில் நீந்திச்சென்று சாதனை படைத்தார். 12.4.1994-ல் பன்னிரண்டே வயதான குற்றாலீசுவரன் பாக். ஜலசந்தியை நீந்திக் கடந்தார்.

இந்நிலையில், இந்திய அளவில் பல்வேறு நீச்சல் போட்டிகளில் சாதனை படைத்த சென்னை முடிச்சூரைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவரான ராஜ ஈஸ்வர பிரபு (20) தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரையிலான பாக். ஜலசந்தி கடற்பகுதியை நீந்தி கடப்பதற்காக, கடந்த மாதம் டெல்லியில் உள்ள வெளியுறவுத் துறை, இலங்கை தூதரகம் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சகத்துக்கு அனுமதி கோரி கடிதம் அனுப்பி இருந்தார்.

இந்தியா-இலங்கை இரு நாட்டு அனுமதியும் கிடைத்த நிலையில் ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து தலைமன்னாருக்கு ஒரு விசைப்படகு, ஒரு நாட்டுப் படகில் ராஜ ஈஸ்வர பிரபு மற்றும் அவருடன் மீனவர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் உள்ளிட்ட 16 பேர் கொண்ட குழுவினர் நேற்று முன்தினம் புறப்பட்டு சென்றனர்.

இதுகுறித்து ராஜ ஈஸ்வரபிரபு ‘தி இந்து’விடம் கூறியதாவது: தலைமன்னாரில் நீந்த தொடங்கியதில் இருந்து 6 மணி வரையிலும் இருளாக இருந்ததால், முதலில் மெதுவாக நீந்தினேன். பின்னர் சூரியன் உதயமானதும் எனது வேகத்தை அதிகரித்தேன். இலங்கை கடற்படையினர் சர்வதேச எல்லை வரையிலும் பாதுகாப்புக்காக உடன் வந்தனர். பின்னர், இந்திய கடலோரக் காவல்படையினர் எங்களுடன் சேர்ந்து கொண்டனர்.

raja Eswara prabu at dhanushkodiதனுஷ்கோடி கரைக்கு வந்த ராஜ ஈஸ்வர பிரபுவுக்கு அளிக்கப்பட்ட உற்சாக வரவேற்பு .

நீரோட்டத்தின் வேகம் அதிகமாக இருந்தது. கடலில் ஜெல்லி மீன்கள் அதிகளவில் இருந்தன. ஜெல்லி மற்றும் ஆபத்தான மீன்களை எதிர்கொள்ள உடம்பில் பிரத்யேக பசையை (பேஸ்ட்) பூசி இருந்ததால் அம்மீன்களால் பிரச்சினை ஏற்படவில்லை. சிறுவயதில் இருந்தே நீச்சலில் ஆர்வம் இருந்ததால், பள்ளியில் படிக்கும் போதே நீச்சல் பயிற்சியை முறையாக கற்க தொடங்கினேன். விரைவில் ஆங்கில கால்வாய் உட்பட மற்ற 6 கால்வாய்களையும் நீந்தி கடக்க வேண்டும் என்பதே லட்சியம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தலைமன்னாரில் அதிகாலை 3 மணியளவில் நீந்த தொடங்கிய ராஜ ஈஸ்வர பிரபு, தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரைக்கு பிற்பகல் 2 மணி 56 நிமிடங்களுக்கு வந்தடைந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x