Published : 15 Mar 2018 08:29 PM
Last Updated : 15 Mar 2018 08:29 PM

சாலையோர முதியவருக்கு புது லுங்கி: மனிதாபிமான போக்குவரத்து காவலர்

சென்னையில் சாலையோரம் துணி இல்லாமல் கிடந்த முதியவருக்கு புது லுங்கி வாங்கி அணிவித்து அவரை தூக்கி ஓரம் உட்கார வைத்து குறைகளை கேட்கும் போக்குவரத்து தலைமை காவலர் ஒருவரை காரில் சென்றவர் வீடியோ எடுத்து பாராட்டி போட்டுள்ளது வைரலாகி வருகிறது.

காவல்துறையில் அதிகம் விமர்சனத்துக்குள்ளாகும் துறை போக்குவரத்து காவல்துறை மட்டுமே. காரணம் மோட்டார் வாகனம் செலுத்தும் சாதாரண மக்களிடம் நல்லதோ கெட்டதோ தினமும் மல்லுக்கட்டுவது இவர்களே. சென்னை முதல் தமிழகம் முழுதும் போக்குவரத்து காவலர்களின் அத்துமீறல்களால் பாதிக்கப்படுபவர்கள் வீடியோ எடுத்து போடுவதும், அதனால் விமர்சனமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

சில மாதங்களுக்கு முன் தரமணியில் போக்குவரத்து உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்களால் தரக்குறைவாக பேசி தாக்கப்பட்ட மணிகண்டன் என்கிற கால்டாக்ஸி ஓட்டுநர் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டது தமிழகம் முழுதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

சமீபத்தில் நெஞ்சம் பதை பதைக்கும் கொடுர செயலை காமராஜ் என்கிற போக்குவரத்து ஆய்வாளர் நிகழ்த்தியதன் மூலம் உஷா என்ற அப்பாவி பெண் மரணமடைந்தார். இதன் மூலம் எவ்வளவு கொடூரமாக நடந்துக்கொள்கிறார்கள் என்பது இன்றுவரை விவாதப்பொருளாக மாறி வருகிறது.

சிலரை வைத்து போக்குவரத்து காவல் துறையினரே மோசம் என்று கூறாதீர்கள் என்று போலீஸார் மத்தியில் கூறுகின்றனர். அதை மெய்ப்பிக்கும் வகையில் சென்னை லஸ்கார்னரில் இன்று போக்குவரத்து தலைமை காவலர் ஒருவரின் செயல் பாராட்டப்படுகிறது.

சென்னை லஸ்கார்னரில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த தலைமை காவலர் ஒருவர் சாலையோரம் மாற்றுத்துணிக்கூட இல்லாமல் அமர்ந்திருந்த பெரியவரின் நிலையை பார்த்துள்ளார். உடனடியாக அந்த பெரியவருக்கு புதிய லுங்கி வாங்கி அதை அணியவைத்து அவரை தூக்கி அமரவைத்து அவரிடம் குறைகளை கேட்டுக்கொண்டிருந்தார்.

இதை சிக்னலில் நின்றுக்கொண்டிருந்த காரிலிருந்து ஒருவர் வீடியோ எடுத்து “சென்னை லஸ்கார்னரில் தலைமை காவலர் ஒருவர் முதியவருக்கு புது லுங்கி கொடுத்து, வேறு உதவி எதுவும் வேண்டுமா என்று கேட்கிறார். காவல் ஆணையரின் மனிதாபிமானமிக்க தலைமையின் கீழ் இந்த காவலரின் பணி போற்றத்தக்கது” என்று போட்டுள்ளது வைரலாகி வருகிறது.

இதுகுறித்து தமிழ் இந்து இணையதளம் சார்பில் உதவி செய்த அந்த போக்குவரத்து தலைமை காவலர் யார் என்று விசாரித்தபோது மயிலாப்பூர் காவல் நிலைய போக்குவரத்து காவல் தலைமை காவலர் அந்தோணி பிராங்க்ளின் என்பது தெரியவந்தது.

அவரிடம் வாழ்த்துச்சொல்லி பேசியபோது அவர் கூறியதாவது: நான் இரண்டு நாட்களாக அந்த வயதான பெரியவரை பார்க்கிறேன். இன்று மதியம் போக்குவரத்து காவல் பணியில் இருந்தபோது அவரைப்பார்த்தேன், அரை மயக்க நிலையில் கீழே எந்த உடையும் இல்லாமல் கிடந்தார். அதனால் உடனடியாக ஒரு லுங்கி ஒன்றை வாங்கி கட்டிக்கொள்ள உதவி செய்தேன்.

அவர் மயக்கம் தெளிய டீ, பன் வாங்கி கொடுத்தேன்.” என்றார். அவருக்கு காரில் சென்றவர் வீடியோ எடுத்ததோ அது வெளியில் வைரலாக சுற்றுவதோ தெரியவில்லை. அவருக்கு பாராட்டை தெரிவித்தோம். நாம் செய்வது நல்லதோ கெட்டதோ, எங்கிருந்தாவது யாராவது அதை கவனிக்கிறார்கள், நல்லச்செயல்கள் நிச்சயம் போற்றப்படும், பாராட்டப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x