Published : 27 Mar 2018 11:18 AM
Last Updated : 27 Mar 2018 11:18 AM

தேனி நியூட்ரினோ திட்டத்துக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி

தேனியில் அமையவுள்ள நியூட்ரினோ திட்டத்துக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. அப்பகுதியில் சுற்று வட்டார மக்களின் வாழ்வாதாரம் மற்றும் நிலத்தடி நீர்மட்டத்துக்கு பாதிப்பு ஏற்படாது என சுற்றுச்சூழல் மதிப்பீட்டுக்குழு பரிந்துரைத்தது. இதன்பேரில் நியூட்ரினோ திட்டத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

தேனி மாவட்டம் தேவாரம் அருகே பொட்டிபுரம் கிராமத்தில் அம்பரப்பர் மலை உள்ளது. இம்மலையில் சுமார் ரூ.1,500 கோடி மதிப்பீட்டில் நியூட்ரினோ ஆய்வுக்கூடம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டது. இதற்காக அம்பரப்பர் மலையைக் குடைந்து ஆய்வுமையம் அமைத்தால் தேனி மாவட்டத்தில் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படும் என எதிர்ப்பு கிளம்பியது.

இந்த ஆய்வுக்கூடம் அமைக்க மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தேனி நியூட்ரினோ திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. நியூட்ரினோ திட்டத்துக்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், வனத்துறையின் அனுமதியை பெற வேண்டும் என மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. திட்டத்துக்கு முல்லை பெரியாறு அணையில் இருந்து தண்ணீரை பயன்படுத்தி கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்ட அனுமதிக்கு எதிர்ப்பு இருந்தால் 30 நாட்களுக்குள் தேசிய பசுமை தீர்ப்பாயத்தை அணுகலாம் என மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆய்வுமையம் எப்படி அமையும்

மலை உச்சியில் இருந்து சுமார் 1,500 மீட்டர் ஆழத்தில், 132 மீட்டர் நீளம், 26 மீட்டர் அகலம், 20 மீட்டர் உயரம் கொண்ட குகை அமைக்கப்பட்டு அதில் 50 ஆயிரம் டன் எடை கொண்ட காந்தமயப்படுத்தப்பட்ட இரும்புக் கலோரி மீட்டர் நிறுவப்படும். அதனருகே இரும்பால் செய்யப்பட்ட தகடுகள் குறிப்பிட்ட இடைவெளியில் அறைகள்போல் அமைக்கப்படும்.

காந்தத்தின் செயல்பாடுகளையும் மின்தட்டு அறைகளின் செயல்பாடுகளையும் தூண்டுதல் செய்து அதனிடையே நியூட்ரினோ துகள்கள் ஆய்வு செய்யப்படும். நியூட்ரினோ துகள்களானது அண்டவெளி கதிர்கள் (Cosmic Rays) இடையே பயணிப்பதால் அவற்றை தனியே வடிகட்டிப் பிரித்துதான் ஆய்வு செய்ய வேண்டும்.

1,000 டன் எடையுள்ள ஜெலட்டின் வெடிமருந்தை 800 நாட்கள் வெடிக்க வைத்து அதன் மூலம் 11 லட்சத்து 25 ஆயிரம் டன் பாறைகளை தகர்த்து தான் இந்த ஆய்வகத்துக்கான குகையை அமைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x