Published : 22 Mar 2018 03:04 PM
Last Updated : 22 Mar 2018 03:04 PM

சிறுவர்கள் வாகனம் ஓட்ட பெற்றோர் அனுமதிக்கிறார்களா?- வருகிறது கடும் நடவடிக்கை

 18 வயதுக்குக் குறைவான சிறுவர்கள் வாகனம் ஓட்ட அனுமதிக்கும் பெற்றோர்கள், வாகன உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை போக்குவரத்து காவல்துறை எச்சரித்துள்ளது.

சென்னையில் சமீபகாலமாக சிறுவர்கள் இரு சக்கர வாகனத்தை ஓட்டிச்செல்வது அதிகரித்துவருகிறது. இவர்கள் வாகனத்தை இயக்க சட்டப்படி அனுமதி இல்லை. இவ்வாறு வாகனம் ஓட்டும் சிறுவர்கள், பெற்றோர்அனுமதியுடன் தான் வாகனத்தை இயக்குகின்றனர். அதனால் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

சிறுவர்கள் வாகனங்களை இயக்குவது மட்டுமல்லாமல் சாலையில் மோட்டார் பைக் ரேஸ் செல்வதும், வீலிங் மற்றும் சாகசங்கள் செய்வதும் அதிகரித்து வருகின்றன. மேலும் மூன்று பேர் ஒரே வாகனத்தில் செல்வதும் விபத்தில் சிக்கிக்கொள்வதும் அதிகரித்து வருகிறது. சென்னையில் சமீப காலமாக செல்போன் பறிப்புகள் போன்ற குற்றச் செயல்கள் அதிகரித்து வருகின்றன.

இதில் அதிக அளவில் இளம் சிறுவர்களே ஈடுபடுவது தெரியவந்துள்ளது. குற்றச்செயலில் ஈடுபடும் சிறுவர்களைக் கண்காணிக்கவும், இளம் சிறுவர்கள் வாகனம் இயக்குவதை தவிர்க்கவும் சென்னை போக்குவரத்து போலீஸார் புதிய அறிவிப்பையும் பெற்றோருக்கு எச்சரிக்கையையும் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து போக்குவரத்து போலீஸார் அறிவிப்பு:

''மோட்டார் வாகனச் சட்டம் 1988, பிரிவு 3-ன் படி உரிய வாகன ஓட்டுநர் உரிமம் இல்லாமல் எந்த ஒரு நபரும் பொதுஇடத்தில் வாகனத்தை ஓட்டக் கூடாது.

பிரிவு 4-ன் படி 18 வயதுக்குக் குறைவான எந்த ஒரு நபரும் பொதுஇடத்தில் வாகனத்தை ஓட்டக் கூடாது என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மேலும், மோட்டார் வாகனச் சட்டம் 1988, பிரிவு 180-ன் படி மேற்கண்ட சட்டப்பிரிவுகளுக்கு முரணாக உரிய வாகன ஓட்டுநர் உரிமம் இல்லாத நபரை அல்லது 18 வயதுக்குக் குறைவான நபரை வாகனத்தை ஓட்ட அனுமதிப்பது குற்றமாகும். இக்குற்றத்திற்கு ரூ.1000 அபராதமாகவும் அல்லது மூன்று மாதங்கள் சிறை தண்டனை அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கலாம்.

சென்னை பெருநகரின் பல்வேறு சாலைகளில் சிறார்கள் தங்களது பெற்றோர்களின் வாகனங்களை ஓட்டுவதும், பந்தயங்களில் ஈடுபடுவதும், விபத்துகள் ஏற்படுத்துவதும் தெரியவருகிறது. இதனால் சிறுவர்கள் பாதிக்கப்படுவதோடு மற்றவர்களுக்கும் பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே உரிய ஓட்டுநர் உரிமம் இல்லாத, 18 வயதுக்குக் குறைவான சிறார்களை வாகனங்கள் ஓட்ட அனுமதிக்கக் கூடாதென எச்சரிக்கை செய்யப்படுகிறது. மேலும் உரிய ஓட்டுநர் உரிமம் இல்லாத, 18 வயதுக்குக் குறைவான சிறார்களுக்கு வாகனத்தை ஓட்ட அனுமதிக்கும் பெற்றோர்கள்/ வாகன உரிமையாளர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.''

இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x