Published : 26 Mar 2018 10:29 AM
Last Updated : 26 Mar 2018 10:29 AM

வாரன்டி காலத்தில் பழுதை சரிசெய்ய பணம் கேட்ட டிவி தயாரிப்பு நிறுவனத்துக்கு ரூ.25,000 அபராதம்: சேவை குறைபாட்டைக் கண்டித்து நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

வாரன்டி காலத்தில் டிவியில் ஏற்பட்ட பழுதைச் சரிசெய்ய பணம் கேட்ட தயாரிப்பு நிறுவனம் வாடிக்கையாளருக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த டி.கீர்த்திராஜன் சென்னை மாவட்ட (வடக்கு) நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் நிறுவன ஷோரூமில் சாம்சங் நிறுவன எல்இடி டிவியை ரூ.32,900 செலுத்தி கடந்த 2015 டிசம்பர் 11-ம் தேதி வாங்கினேன். அதற்கு 12 மாதங்கள் வாரன்டி அளித்தனர். அந்த டிவியை பயன்படுத்தத் தொடங்கிய முதல் நாளிலேயே அதன் திரையில் கோடு தெரிந்தது.

இதுதொடர்பாக சாம்சங் நிறுவன சேவை மையத்தில் 2015 டிசம்பர் 21-ம் தேதி புகார் அளித்தேன். அதைத் தொடர்ந்து எனது டிவியை பரிசோதித்த சாம்சங் நிறுவன தொழில்நுட்ப வல்லுநர், டிவியின் திரையில் பிரச்சினை இருப்பதாக தெரிவித்தார். சேவை மையமும் எனது டிவியை மாற்றித் தருவதாக ஒப்புக்கொண்டது.

இழப்பீடு வழங்க கோரிக்கை

பின்னர், டிவியை மாற்றித்தரும்படி பலமுறை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு தெரிவித்தேன். ஆனால், அவர்கள் டிவியை பழுது பார்த்து தருவதாகவும், அதற்கு ரூ.12,552 அளிக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர். வாரன்டி காலத்தில் அவர்கள் இவ்வாறு கூறியது சேவை குறைபாடாகும். எனவே, எனது டிவியை மாற்றித் தரவும், எனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு உரிய இழப்பீடு வழங்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த சென்னை மாவட்ட (வடக்கு) நுகர்வோர் குறைதீர் மன்றத்தின் தலைவர் கே.ஜெயபாலன், உறுப்பினர் எம்.உயிரொளி கண்ணன் ஆகியோர், “வாரன்டி காலத்தில் டிவியில் ஏற்பட்ட பழுதைச் சரிசெய்ய பணம் கேட்டது சேவை குறைபாடாகும். மேலும், மனுதாரரால்தான் டிவியில் பாதிப்பு ஏற்பட்டது என்பதை சாம்சங் நிறுவனம் நிரூபிக்கவில்லை.

எனவே, டிவியை வாங்க மனுதாரர் செலுத்திய தொகையான ரூ.32,900, கூடுதல் கால வாரன்டிக்காக செலுத்திய ரூ.4,523-ஐ சாம்சங் நிறுவனம் மற்றும் டிவியை விற்பனை செய்த நிறுவனம் ஆகியவை இணைந்து மனுதாரருக்கு திருப்பி அளிக்க வேண்டும். அதோடு, மனுதாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூ.25 ஆயிரம், வழக்குச் செலவாக ரூ.5 ஆயிரத்தையும் அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் உத்தரவிட்ட னர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x