Published : 07 Mar 2018 09:06 AM
Last Updated : 07 Mar 2018 09:06 AM

எப்போது தேர்தல் வந்தாலும் வெல்வோம்: டிடிவி தினகரன் நம்பிக்கை

எந்த நேரத்தில் தேர்தல் வந்தாலும் நாங்கள் ஆட்சியைப் பிடிப்போம் என்று ஆர்கே நகர் எம்எல்ஏவான டிடிவி தினகரன் நம்பிக்கை தெரிவித்தார்.

விழுப்புரத்தில் நேற்று தினகரன் அணியைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

இதில் தினகரன் பேசும்போது, “அதிமுகவில் இருக்கிறவர்களில் 90 சதவீதத்திற்கு மேல் எங்கள் பின்னால் உள்ளனர். எந்தநேரத்தில் தேர்தல் வந்தாலும் நாங்கள் வெற்றி பெறுவோம். வரக்கூடிய சட்டப்பேரவை தேர்தலில் நிச்சயம் 200 தொகுதிகளிலாவது வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம்” என்றார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் தினகரன் கூறியதாவது: தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது என்று ரஜினி சொல்வது தவறு. நல்ல தலைவர்களை மக்கள்தான் முடிவு செய்வார்கள். ரஜினி அதுபோன்று சொல்லக்கூடாது.

தந்தை பெரியாரின் சிலையை அகற்ற வேண்டும் என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருப்பது அரசியல் நாகரிகமற்ற பேச்சு. பெரியார் சிலையை அகற்ற முடிவு செய்தால் தமிழகம் கொதித்து போய்விடும். தமிழகம் கலவரம் இல்லாமல் அமைதி பூங்காவாக திகழ்ந்து வருகிறது. எச்.ராஜா, கலவரத்தை தூண்டும் வகையில் பேசி அவரது கட்சியை வளர்க்க பார்க்கிறார். தேர்தலுக்கு பின்பு எந்த கட்சி நிலைத்து நிற்கும், யார் வீட்டுக்கு போவார்கள் என்பது தெரியும். இவ்வாறு தினகரன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x