Published : 14 Mar 2018 08:54 AM
Last Updated : 14 Mar 2018 08:54 AM

வலுவடைந்தது காற்றழுத்த தாழ்வு மண்டலம்: கொச்சி, லட்சத்தீவுகளில் உள்ள மீனவர்களை மீட்க நடவடிக்கை- அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்

கொச்சி, லட்சத்தீவுகள், கர்நாடகா, கோவா கடற்பகுதியில் இருக்கும் 51 படகுகளையும், மீனவர்களையும் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

மன்னா வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி தற்போது தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, வருவாய்த் துறை அதிகாரிகளுடன் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் வருவாய்த் துறை செயலர், வருவாய் நிர்வாக ஆணையர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இது குறித்து வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:

10 மாவட்டங்களில் மழை

காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றுள்ளதால் தென் தமிழகத்தின் கரையோரப் பகுதிகளில் 40 முதல் 60 கி.மீ. வேகத்தில் பலத்தகாற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மீனவர்கள் கண்டிப்பாக கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. வடதமிழக கடல் பகுதியில் எச்சரிக்கை ஏதும் இன்னும் அளிக்கப்படவில்லை. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழை பெய்துள்ளது. ராமநாதபுரத்தில் அதிகபட்சமாக 8.82 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

பலத்த காற்று குறித்த தகவல் கடந்த 2 தினங்களுக்கு முன்பே வருவாய் நிர்வாக ஆணையருக்கு வந்தது. மாவட்ட ஆட்சியர்கள் மூலம் மீனவர்களுக்கு இந்த தகவல் கொண்டு சேர்க்கப்பட்டது. இதையடுத்து, ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்டிருந்த கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 553 படகுகளில் 502 படகுகள் பாதுகாப்பாக கரை திரும்பிவிட்டன. இன்னும் 51 படகுகள் திரும்ப வேண்டியுள்ளது. ராமநாதபுரத்தின் 15 படகுகளும், தூத்துக்குடியின் 135 படகுகளும் பாதுகாப்பாக வந்துவிட்டன.

கரை திரும்பாத 51 படகுகளை பொறுத்தவரை கர்நாடகாவில் 30, கோவாவில் 5, கொச்சி, லட்சத்தீவு பகுதியில் 16 படகுகள் இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன. இந்த படகுகளில் 10 முதல் 15 பேர் வரை இருப்பார்கள். லட்சத்தீவு, கொச்சி பகுதியில் இருக்கும் படகுகளை உடனடியாக மீட்கும் நடவடிக்கைளை வருவாய், மீன்வளத் துறையினர் மேற்கொண்டுள்ளனர்.

தொடர்ந்து கண்காணிப்பு

காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ள நிலையில், தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஒவ்வொரு நிமிடமும் அதன் நகர்வுகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக மாவட்ட நிர்வாகங்களுக்கு அவ்வப்போது அறிவுறுத்தல் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது கொச்சி, லட்சத்தீவுகளை நோக்கி காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்வதால், அங்குள்ள மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x