Published : 30 Sep 2014 10:40 AM
Last Updated : 30 Sep 2014 10:40 AM

தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை பாமக நிரப்பும்: அன்புமணி ராமதாஸ் பேச்சு

தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை பாமக நிரப்பும் என அன்புமணி ராமதாஸ் கூறினார்.

சென்னையை அடுத்த வானகரத்தில் நேற்று நடந்த பாமக பிரமுகரின் இல்லத் திருமண விழாவில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் எம்.பி. ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:

போலீஸ் வாகனத்தில் 17 மணி நேரம் அமரவைத்து, திருச்சி சிறையில் ராமதாஸை அடைத்தனர். உலகம் உருண்டை என்பது தற்போது நிரூபணம் ஆகியுள்ளது. ராமதாஸ் மீது பல்வேறு பொய் வழக்குகளை போட்டனர். ரஜினி ரசிகர்களை தாக்கியதாகக்கூட வழக்கு பதிவு செய்தனர். பாமகவினர் பஸ்சை எரித்ததாக ரூ.100 கோடி நஷ்டஈடு கேட்டு வழக்கு போட்டுள்ளனர்.

இப்போது எவ்வளவு பஸ்களை எரித்துள்ளனர். அதற்கு என்ன வழக்கு போடப் போகிறீர்கள்? நாங்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின்போது 3 நாள் டாஸ்மாக் கடைகளை மூடியதால் ரூ.25 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறி, அதற்கு நஷ்டஈடு தர வேண்டும் என்றனர். தற்போது ஆளுங்கட்சியினர் நடத்திய போராட்டதால் டாஸ்மாக் கடை 3 நாட்கள் மூடியதால் ரூ.35 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்தப் பணத்தை எப்படி கட்டப் போகிறீர்கள்?

நாங்கள் போராட்டம் நடத்தியபோது 140 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். 8 ஆயிரம் பேரை கைது செய்தனர். தற்போது ஏற்பட்டுள்ள சட்டம் - ஒழுங்கு பிரச்சினைக்கு யார் மீது வழக்கு போடப் போகிறீர்கள்? தமிழக அரசியலில் தற்போது வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அந்த இடத்தை பாமக நிரப்பும்.

இவ்வாறு அன்புமணி ராமதாஸ் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x