Published : 12 Mar 2018 11:25 AM
Last Updated : 12 Mar 2018 11:25 AM

சோகத்தில் முடிந்த மலையேற்றம்- ஏற்பாடு செய்த சென்னை டிரக்கிங் கிளப்

போடி அருகே குரங்கணி மலைப்பகுதியில் மலையேற்ற பயிற்சிக்கு சென்ற பலர் உயிரிழந்துள்ள நிலையில் இதற்கான ஏற்பாடுகளை, சென்னை டிரக்கிங் கிளப் எனப்படும் மலையேற்ற பயற்சி அமைப்பு ஏற்பாடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தேனி மாவட்டம், போடி அருகே குரங்கணி மலைப் பகுதியில் மலையேற்றப் பயிற்சிக்கு சென்ற கல்லூரி மாணவிகள், சுற்றுலா பயணிகள் வனப்பகுதிக்குள் பரவிய பயங்கர காட்டுத் தீயில் சிக்கினர். இதில் முதல்கட்டமாக 22 மாணவ, மாணவிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இவர்களில் 7 பேர் பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காட்டுக்குள் சிக்கியுள்ள மற்றவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.குரங்கணி தீ விபத்தில் சிக்கி சென்னையைச் சேர்ந்த 6 பேர் உட்பட 9 பேர் பலியானதாக தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் தெரிவித்திருக்கிறார். உயிரிழந்தவர்களில் 5 பேர் பெண்கள் ஆவர்.

இந்தநிலையில் இந்த மலையேற்றத்தை ஏற்பாடு செய்தது சென்னை டிரக்கிங் கிளப் (Chennai Trekking club) ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது. இதில் 40,000 உறுப்பினர்கள் இருப்பதாக இந்த அமைப்பின் இணையதளம் சொல்கிறது. ஆனால் ஏற்பாட்டாளர்கள், பொறுப்பாளர்கள் விவரம், தொலைபேசி எண் என எதுவும் இடம் பெறவில்லை. சென்னை டிரக்கிங் கிளப் என்பது லாப நோக்கமற்ற தன்னார்வ குழு என மட்டும் இணைய தளத்தில் தகவல் இடம் பெற்றுள்ளது.

சுற்றுச்சூழல், சமூக நல பணிகள், உள்ளிட்டவற்றை வார இறுதி நாட்களிலும், காலை நேரங்களிலும் செய்யும் தன்னார்வம் கொண்டவர்களின் குழு என குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2008ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அமைப்பு மெல்ல மெல்ல வளர்ந்து, தற்போது தென்னிந்தியாவிலேயே குறிப்பிடத்தக்க மலையேற்ற அமைப்பாக உருவாகியுள்ளது. இதற்கான செலவுகளை அதில் உள்ள உறுப்பினர்கள் பிரித்துக் கொள்வதாகவும் இணையதளம் கூறுகிறது.

ஆனால் இதனை ஒருங்கிணைப்பவர்கள் மலையேற்ற பயற்சியை முறையாக பெற்றவர்களா? அவர்கள் செல்லும் மலைப்பகுதி மற்றும் வனப்பகுதியின் சூழல் தெரிந்தவர்களா? இதற்கான ஏற்பாடுகள் எவ்வாறு செய்யப்படுகிறது என்பன போன்ற விவரங்கள் அந்த இணையதளத்தில் இடம் பெறவில்லை. சென்னை டிரக்கிங் கிளப் குறித்த விவரங்களை பெறுவதற்காக அதன் பொறுப்பாளர்கள் சிலரை தி இந்து தமிழ் சார்பில் தொடர்பு கொண்டபோது தகவல்களை பெற முடியவில்லை. அவர்களது மொபைல் போன் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x