Published : 27 Sep 2014 11:00 AM
Last Updated : 27 Sep 2014 11:00 AM

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ‘வை-பை’ வசதியை தொடங்கிவைத்தார் ரயில்வே அமைச்சர்

சென்னை ராயபுரம் ரயில் நிலையத்தை ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா நேற்று பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.ராயபுரம் ரயில் நிலையம் தென் இந்தியாவின் மிகப் பழமையான ரயில் நிலையம் ஆகும். 1800-ம் ஆண்டு கட்டப்பட்ட இது, 1907-ம் ஆண்டு வரை முக்கிய ரயில் நிலையங் களில் ஒன்றாக செயல்பட்டு வந்தது. இப்போது கடற்கரையிலிருந்து செல்லும் மின்சார ரயில்கள் மட்டும் ராயபுரம் ரயில் நிலையத்தில் நின்று செல்கின்றன. எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிற்பதில்லை.

சென்னையில் சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் நெரிசல் அதிகமாக இருப்பதால், ராயபுரம் ரயில் நிலையத்தை சென்னையின் 3-வது ரயில் நிலையமாக மாற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் நீண்டகாலமாக கோரி வருகின்றனர். இதற்காக தனியாக ஒரு சங்கம் அமைத்து போராடியும் வருகின்றனர்.

நாடாளுமன்றத்தில் ரயில்வே பட்ஜெட்டைத் தாக்கல் செய்தபோது, ‘சென்னையின் 3-வது ரயில் முனையமாக ராயபுரம் ரயில் நிலையம் மாற்றப்படும்” என்று ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா அறிவித்தது ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் நேற்று சென்னை வந்த ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா, ராயபுரம் ரயில் நிலையத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், சென்னை மாநகர மேயர் சைதை துரைசாமி, வடசென்னை எம்.பி. வெங்கடேஷ் பாபு, தெற்கு ரயில்வே பொது மேலாளர் ராகேஷ் மிஸ்ரா ஆகியோரும் உடனிருந்தனர்.

பின்னர், ராயபுரம் ரயில் நிலையத்தை 3-வது ரயில் முனையமாக மாற்றுவது குறித்து ரயில்வே உயர் அதிகாரிகள், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் ஆகியோருடன் ரயில்வே அமைச்சர் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் கூறுகை யில், ‘ராயபுரம் ரயில் நிலையத்தை ரயில் முனையமாக மாற்றுவதற்கு மாநில அரசிடம் இருந்து நிலம் தேவைப்படுகிறது. இது குறித்து தமிழக முதல்வரிடம் ஆலோசனை நடத் தப்படும். தமிழக மக்கள் பயன்பெறும் வகையில் இந்த விஷயத்தில் நல்ல முடிவு எடுக்கப்படும்” என்றார்.

பின்னர், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் முன்னோடித் திட்டமாக ‘வை-பை” வசதியை ரயில்வே அமைச்சர் தொடங்கி வைத்தார்.

ரயில்வே பட்ஜெட்டில் பயணிக ளுக்காக பல்வேறு வசதிகள் அறிவிக்கப் பட்டன. அவற்றில் குறிப்பிடத்தக்கது ‘ஏ-1’ மற்றும் ‘ஏ’ வகை ரயில் நிலையங்களில் ‘வை-பை’ வசதி செய்து தரப்படும் என்பதாகும்.

தமிழகத்தில் உள்ள ‘ஏ-1” வகை ரயில் நிலையங்களான சென்னை சென்ட்ரல், சென்னை எழும்பூர், மதுரை, கோவை ஆகியவற்றில் ‘வை-பை” வசதி செய்து தரப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, முன்னோடித் திட்டமாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ‘வை-பை” வசதியை ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா நேற்று தொடங்கி வைத்தார்.

சென்ட்ரலில்..

சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு தினமும் 5 லட்சம் பேர் வந்து செல்கின்றனர். இவர்களில் ‘ஸ்மார்ட் போன்” வைத்திருக்கும் அனைவரும் இனிமேல் சென்ட்ரல் ரயில் நிலைய வளாகத்தில் ‘வை-பை” வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதுபோல, தெற்கு ரயில்வேயில் ‘ஏ” வகை ரயில் நிலையங்களான விழுப்புரம், திருச்சி, தஞ்சை, சேலம், ஈரோடு, திருப்பூர், மேட்டுப்பாளையம், நெல்லை, தூத்துக்குடி, திண்டுக்கல் ஆகியவற்றிலும் ‘வை-பை” வசதி அறிமுகம் செய்யப்படவுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x