Published : 10 Mar 2018 05:54 PM
Last Updated : 10 Mar 2018 05:54 PM

கட்டிட விவகாரங்களில் விதிமுறைகளை பின்பற்றாதவர்கள் தங்கள் சந்ததியை எப்படி நெறிப்படுத்த முடியும்?- நீதிபதிகள் கேள்வி

கட்டிட விவகாரங்களில் விதிமுறைகளை பின்பற்றாதவர்கள் எப்படி தங்கள் சந்ததியினரை நல்வழிப்படுத்தப் போகிறீர்கள் என கட்டிடம் சீல் வைப்பு விவகாரத்தில் வழக்குத் தொடுத்த மனுதாரர்களிடம் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை செங்குன்றத்தை அடுத்த நரவாரி குப்பம் பேரூராட்சியில் ராஜப்பா, ஜெயலட்சுமி ஆகியோர் விதிகளை மீறி 3 மாடிகள் கொண்ட பல்பொருள் அங்காடி கட்டியதாக சீல் வைத்ததுடன், கட்டிடத்தை இடிக்க தமிழ்நாடு வீட்டு வசதித்துறை சீல் வைக்க 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்த மனுக்களை கடந்த ஜனவரி மாதம் விசாரித்த நீதிபதிகள் எம்.வேணுகோபால், எஸ்.வைத்தியநாதன் அமர்வு, ஒரு மாதத்திற்குள் கட்டிடத்தை இடிக்க வேண்டும் என உத்தரவிட்டு தள்ளுபடி செய்தனர். அக்கட்டிடத்தை இடிக்க நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து தண்டிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

இந்த உத்தரவை எதிர்த்து இருவரும் தாக்கல் செய்த மறு ஆய்வு வழக்கை விசாரித்த நீதிபதிகள், அந்த மனுக்களையும் தள்ளுபடி செய்தனர். உச்ச நீதிமன்றம் வரை சென்று முற்றுபெற்ற ஒரு விஷயத்துக்காக தொடர்ந்து நீதிமன்றத்தை நாடி சட்டவிரோத நடவடிக்கையை நியாயப்படுத்த முயற்சிப்பது துரதிஷ்டவசமானது எனவும் நீதிபதிகள் கண்டித்துள்ளனர்.

மேலும், இதை அனுமதித்தால் விதிகளை மதித்து நடக்கும் குடிமக்களையும் விதி மீறல்களை செய்யத் தள்ளுவதாக அமையும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர். கட்டிட விவகாரங்களிலேயே நெறிமுறைகளை பின்பற்ற முடியாதவர்கள், எப்படி அவர்களது சந்ததியினரை நன்னெறிமிக்கவர்களாக மாற்ற முடியும் எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x