Published : 01 Mar 2018 08:39 AM
Last Updated : 01 Mar 2018 08:39 AM

மாநகராட்சி, மாவட்ட நிர்வாகம் மெத்தனத்தால் பல குழந்தைகளுக்கு ‘வைட்டமின் ஏ’ திரவ மருந்து சென்றடையவில்லை

சென்னை மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் மெத்தனம் காரணமாக தேசிய திட்டமான வைட்டமின் ஏ திரவ மருந்து வழங்கும் திட்டம் பல குழந்தைகளைச் சென்றடையவில்லை.

5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் இயல்பான வளர்ச்சிக்கு தேவையான சத்தாக வைட்டமின் ஏ விளங்குகிறது. இந்த வைட்ட மின் குறைபாட்டால் குழந்தைகளுக்கு பார்வை குறைபாடும் ஏற் படுகிறது. மாறி வரும் வாழ்க்கை முறையால் வைட்டமின் ஏ குறைபாடுள்ள குழந்தைகள் அதிகரித்துள்ளன. அதைத் தடுக்க தேசிய வைட்டமின் ஏ குறைபாடு கட்டுப்பாட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் சென்னை யில் மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகள், மாவட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அங்கன்வாடி மையங்கள் ஆகிய இடங்களில் 6 மாதம் முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ மருந்து ஆண்டுக்கு இருமுறை வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டு, வைட்டமின் ஏ வழங்கும் முகாம், கடந்த 19-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை 6 நாட்கள் நடைபெற்றன. இது தொடர்பாக மாநகராட்சி நிர்வாகம் செய்திக்குறிப்பு வெளியிட்டதோடு சரி. வேறு எந்த விழிப் புணர்வு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. அந்தந்த ஆரம்ப சுகாதார நிலையங்களில் மட்டும், சம்பிரதாயத்துக்காக வைட்டமின் மருந்து வழங்கப்படுவதாக எழுதி வைக்கப்பட்டிருந்தன. இதனால் இந்த முகாம் குறித்து பெரும்பாலான பொதுமக்களுக்கு தெரியவில்லை.

நலதிட்டங்கள் கிடைக்கவில்லை

அங்கன்வாடி மையங்களில், அவரவருக்கு உரிய பகுதிகளில் பொதுமக்களுக்கு தெரிவித்து மருந்து வழங்கியுள்ளன. ஆனால் சென்னையில் அங்கன்வாடி இல்லாத பகுதிகளில், அருகில் உள்ள எந்த அங்கன்வாடியும் பொறுப்பேற்றுக்கொண்டு, வைட்டமின் ஏ மருந்து வழங்கவில்லை. இந்த பகுதிகளில் அங்கன்வாடி மையங்கள் மூலம் குழந்தைகள், கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் ஆகியோருக்கு வழங்கப்படும் சத்து மாவு, வளர் இளம் பெண்களுக்கு வழங்கப்படும் இரும்புச்சத்து மாத்திரை கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் பல ஆண்டுகளாக சென்று சேரவில்லை. இதை மாவட்ட நிர்வாகமும் கண் காணிக்க தவறியுள்ளது.

பல குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ மருந்து சென்று சேராத நிலையில், சென்னையில் 6 நாட்கள் நடைபெற்ற முகாமில் 5 லட்சத்து 47 ஆயிரம் குழந்தைகளுக்கு மருந்து கொடுக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது கூறியதாவது:

நாங்கள் பல்வேறு ஆலோசனை கூட்டங்களை நடத்தி, திட்டத்தை செயல்படுத்தி இருக்கின்றோம்.

அடுத்து வரும் ஆண்டுகளில் முறையாக அனைத்து குழந்தைகளுக்கு மருந்து சென்று சேர நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகளிடம் கேட்டபோது, ``சில இடங்களில் அங்கன்வாடிகள் இல்லை. அப்பகுதியில், அருகில் உள்ள அங்கன் வாடிகள் உரிய சேவையை வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறோம். அதை முறையாக கண்காணித்து, அரசின் நலத்திட்டங்கள் சென்று சேர வழிவகை செய்யப்படும்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x