Published : 15 Mar 2018 08:04 AM
Last Updated : 15 Mar 2018 08:04 AM

குரங்கணி காட்டுத் தீயில் சிக்கிய மேலும் ஒரு பெண் உயிரிழப்பு:பலியானோர் எண்ணிக்கை 12-ஆக உயர்ந்தது- சிகிச்சை பெற்று வரும் மேலும் சிலர் தொடர்ந்து கவலைக்கிடம்

குரங்கணி காட்டுத் தீவிபத்தில் சிக்கி மதுரையில் சிகிச்சை பெற்று வந்த திவ்யா என்ற பெண் நேற்று உயிரிழந்தார். இதனால், விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12-ஆக உயர்ந்துள்ளது. மேலும் சிலர் தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக மதுரை மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

குரங்கணி காட்டுத் தீயில் சிக்கிய 15 பேர் மதுரை அரசு, தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 9 பேரில் ஜெயஸ்ரீ என்ற பெண் அனுமதிக்கப்பட்ட அன்றே ஏர் ஹெலிகாப்டர் மூலம் கோவை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். சென்னை வேளச்சேரி நிஷா, ஈரோடு கவுந்தப்பாடி ஆசிரியை திவ்யா ஆகியோர் சிகிச்சை பலனின்றி பலியாயினர். எஞ்சிய 6 பேரில் மீனா ஜார்ஜ் அப்போலோவுக்கும், தஞ்சாவூரைச் சேர்ந்த சாய் வசுமதி மதுரை கென்னட் மருத்துவமனைக்கும் மாற்றப்பட்டனர்.

மதுரை மீனாட்சிமிஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சென்னையைச் சேர்ந்த பார்கவி நேற்று முன்தினம், சென்னை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தற்போது கண்ணன், சிவசங்கரி, அனுவித்யா, எடப்பாடி தேவி ஆகியோர் மட்டும் மதுரை அரசு மருத்துவமனையில் உள்ளனர். இவர்களுக்கு 70 சதவீதத்துக்கு மேல் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. 3 தனியார் மருத்துவமனைகளில் 7 பேர் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இவர்களில், கென்னட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, பொள்ளாச்சி கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்த விபின் என்பவரது மனைவி திவ்யா (28) சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்தார். இவருக்கு 99 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டு இருந்தது. இவரது கணவர் விபின் இதே விபத்தில் சம்பவ இடத்தில் ஏற்கனவே பலியானார். இவர்களுடன் சேர்த்து இதுவரை 2 தம்பதியர் இவ்விபத்தில் பலியானது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அரசு மருத்துவமனைக்கு வந்த மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ், சிகிச்சை பெற்று வருபவர்களில் சிலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x