Published : 11 Mar 2018 09:00 AM
Last Updated : 11 Mar 2018 09:00 AM

காந்தியின் வரலாற்றை மாணவர்கள் படிக்க வேண்டும்: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வலியுறுத்தல்

காந்தியின் வாழ்க்கை வரலாறு, அவரது சிந்தனைகளை பள்ளி, கல்லூரி மாணவர்கள் படிக்க வேண்டும் என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வலியுறுத்தியுள்ளார்.

மகாத்மா காந்தியடிகள் - 150 கொண்டாட்டக் குழு சார்பில், காந்தியடிகள் பயண வரைபடம் வெளியிடுதல், தமிழகத்தில் வீடுதோறும் சென்று காந்தியக் கொள்கைகளைப் பரப்பும் பிரச்சாரத்தின் தொடக்கம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் தொடக்க விழா சென்னையில் நேற்று நடந்தது. இந்த விழாவில் தமிழக ஆளுநர், சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு திட்டங்களைத் தொடங்கிவைத்தார்.

பின்னர் அவர் பேசும்போது, “காந்தியக் கொள்கை உருவாவதற்கு தமிழகம் முக்கிய காரணமாக இருந்தது. காந்தி, அவருடைய கொள்கையை இங்கிருந்துதான் தொடங்கினார். அவர் மதுரைக்கு வரும்போது, அங்குள்ள மக்களைப் பார்த்து தன்னுடைய ஆடம்பர ஆடையைத் தூக்கி ஏறிந்தார். காந்திய சிந்தனைகளை அனைவரும் படிக்க வேண்டும். குறிப்பாக மாணவர்கள் காந்தியின் வாழ்க்கை வரலாறு புத்தகத்தைப் படிக்க வேண்டும். மேலும், காந்தியடிகள் பயன்படுத்திய பொருட்கள், எளிமையான வாழ்க்கை முறை குறித்து பள்ளி மாணவர்கள் மத்தியில் காந்திய அமைப்புகள் கொண்டு செல்ல வேண்டும்” என்றார்.

விழாவில் முன்னாள் எம்பி நரேஷ்யாதவ், முன்னாள் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா, ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி எம்.ராஜாராம், ஸ்ரீ கீதா பவன் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் அசோக்குமார் கோயல், மூத்த காந்தியவாதி கிருஷ்ணம்மாள் ஜெகன்நாதன், தக்கர் பாபா வித்யாலயா சமிதி தலைவர் எஸ்.பாண்டியன், ஹரிஜன சேவா சங்கத் தலைவர் பேராசிரியர் சங்கர்குமார் சன்யால், தமிழகப் பிரிவு தலைவர் பி.மாருதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x