Published : 21 Mar 2018 09:10 PM
Last Updated : 21 Mar 2018 09:10 PM

அயனாவரத்தில் துணிகரம்: போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐ.க்கு கத்திக்குத்து

மனைவி மீது சந்தேகப்பட்டு பக்கத்து வீட்டுக்காரரை கத்தியால் குத்துவேன் என பெயிண்டர் ஒருவர் மிரட்ட விசாரணை நடத்திய எஸ்.ஐ. மீது கத்தியால் குத்தியதில் அவர் காயமடைந்தார்.

சென்னை, அயனாவரம், ராமநாதன் தெருவைச் சேர்ந்தவர் முனாப், பெயிண்டராக வேலை செய்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டுக்காரர் ஆனந்தன். தனியார் நிறுவனத்தில் ஊழியராகப் பணியாற்றி வருகிறார். இவரும் முனாப்பின் மனைவியும் சிறுவயது நண்பர்கள். அவர்கள் நட்பை முனாப் ஏற்றுக்கொள்ளவில்லை. சந்தேகக் கண்ணோட்டத்துடன் பார்த்து சண்டைபோட்டுள்ளார்.

ஆனந்தனைப் பார்க்கும் போதெல்லாம் கத்தியால் குத்துவேன், வெட்டுவேன் என்று மிரட்டியுள்ளார். இதனால் பயந்துபோன ஆனந்தன் நேற்று மதியம் அயனாவரம் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்துள்ளார். போலீஸ் ஸ்டேஷனில் டூட்டியிலிருந்த எஸ்.ஐ சுப்ரமணியத்திடம் புகார் அளித்துள்ளார்.

புகாரின் பேரில் முனாப்பை காவல் நிலையம் அழைத்து வந்த எஸ்.ஐ. சுப்ரமணி இருவரையும் ஒன்றாக நிற்க வைத்து விசாரித்துள்ளார். அப்போது தனது தரப்பு நியாயம் என்று வாதாடிய முனாப் எஸ்.ஐ. சுப்ரமணி அறிவுரை சொன்னதை காதில் வாங்காமல் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஆனந்தனைக் குத்தப் பாய்ந்துள்ளார்.

உடனடியாக செயல்பட்ட எஸ்.ஐ. சுப்ரமணி முனாப்பை தடுத்துள்ளார். இதற்குள் ஆனந்தன் கழுத்தில் கத்தி பட்டுள்ளது. எஸ்.ஐ. கத்தியைப் பிடுங்கும் முயற்சியில் ஈடுபட ஆத்திரமடைந்த முனாப் அவரைக் கத்தியால் குத்த முயல எஸ்.ஐ சுப்ரமணியின் கையில் கத்திக்குத்து விழுந்தது.

உடனடியாக அருகிலிருந்த காவலர்கள் பாய்ந்து பிடித்து சுப்ரமணியத்தை மீட்டனர். இதில் கைகளில் பலத்த காயம் அடைந்த எஸ்.ஐ சுப்ரமணியமும், புகார்தாரர் ஆனந்தனும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். எஸ்.ஐ சுப்ரமணி அளித்த புகாரின் பேரில் முனாப் கைது செய்யப்பட்டார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் எஸ்.ஐ. சதீஷ்குமார் காவல் நிலைய வாசலில் தற்கொலை செய்துகொண்டார். அது முடிந்து சில நாட்களிலேயே காவல்நிலையத்துக்குள் எஸ்.ஐ. தாக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x